ராமநாதபுரம்: பார்சல் கட்ட தாமதம்; ஹோட்டல் உரிமையாளர் விரலை கடித்து துப்பிய வாடிக்கையாளர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சி அலுவலகம் முன்பு கதிரேசன் (50) என்பவர் உணவகம் வைத்திருக்கிறார். இந்த நிலையில் அவரின் கடைக்கு கமுதி முஷ்ட குறிச்சியைச் சேர்ந்த வழிவிட்டான் (45) என்பவர், சாப்பாடு பார்சல் வாங்க அந்த உணவகத்துக்கு வந்திருக்கிறார்.

பணியாளர்கள் யாரையும் வேலைக்கு வைத்துக் கொள்ளாமல், கதிரேசன் மட்டுமே அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். இதன் காரணமாக உணவகத்தில் சாப்பிட அமர்ந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தார். இதனால் பார்சல் கட்டுவதற்கு தாமதம் ஏற்பட்டிருக்கிறது. நீண்ட நேரமாக காத்திருந்த வழிவிட்டான் இப்போது சாப்பாடு பார்சல் தரமுடியுமா முடியாதா என கேட்டிருக்கிறார்.

ஹோட்டல் உரிமையாளர் கதிரேசன்

அப்போது, தான் ஒருவன் மட்டுமே இருக்கிறேன் பார்சல் கட்ட தாமதமாகும் என கதிரேசன் கூறியதால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த வழிவிட்டான், உணவகத்திலிருந்து சமையல் கரண்டியை எடுத்து கதிரேசனின் தலையில் தாக்கியிருக்கிறார். தடுக்க முயன்ற கதிரேசனின் இடது கையின் ஆள்காட்டி விரலை கடித்து உணவகம் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயில் துப்பிவிட்டு ஓடிவிட்டார். இதனை பார்த்த உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் துண்டான ஆள்காட்டி விரலின் பகுதியை தேடிப் பார்த்ததில் கிடைக்கவில்லை.

உடனே, கதிரேசனை கமுதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதுகுறித்து கமுதி போலீஸார் வழக்கு பதிவுசெய்து, வழிவிட்டானை கைதுசெய்தனர்.



from Latest news https://ift.tt/tLFqvUr

Post a Comment

0 Comments