`உரம் வாங்கும் விவசாயிகளிடம் சாதி விவரம் கேட்கப்பட்ட விவகாரம்! - சர்ச்சையும் பின்னணியும்

முதலீடுகளே இல்லாமல் பத்தாயத்து விதைநெல், கால்நடை எரு என தற்சார்பு முறையில் விவசாயம் செய்துவந்த இந்திய விவசாயிகள், பசுமைப் புரட்சியாலும் உலகமயமாக்களின் விளைவாலும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயற்கை உரத்தை நம்பியே விவசாயம் மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மீண்டும் பாரம்பர்ய இயற்கை முறையிலான விவசாயத்தை சில விவசாயிகள் கையிலெடுத்தாலும் நடைமுறையில் பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்களையேப் பயன்படுத்துகின்றனர். அதில் குறிப்பாக, அடியுரமான டி.ஏ.பி மற்றும் மேல் உரமான யூரியா ஆகியவை விவசாயத்தில் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

யூரியா

ஆனால், உரம் தயாரிக்கும் மூலப்பொருட்களின் விலை உயரும்போதெல்லாம் ரசாயன உரங்களின் விலையும் அதிகரிக்கும். இந்த விலையேற்றம் சமானிய விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும் என்பதால் அடியுரமான டி.ஏ.பி., மேல் உரமான யூரியா ஆகியவற்றை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது அரசாங்கம். அதிலும், இந்த டி.ஏ.பி, யூரியா போன்ற ரசாயன உரங்கள் விவசாயப் பயன்பாடுகள் மட்டுமல்லாமல் இதர பல்வேறு பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுவதால், விவசாயப் பயன்பாடு என்ற போர்வையில் வணிக ரீதியிலான பொருள்கள் தயாரிக்கவும் முறைகேடாக அரசின் மானியத்தைப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைத்தொடர்ந்து, இந்த முறைகேட்டைத் தடுக்க `விவசாயிகள் தங்களின் ஆதார் கார்டு நகலை சம்பந்தப்பட்ட உரக்கடைகளில் கொடுத்து, பி.ஓ.எஸ். எனப்படும் இயந்திரத்தில் கைரேகை பதித்து உரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்' என புதிய உத்தரவு பிறப்பித்து ஒழுங்கு படுத்தியது. இதனால், உண்மையான விவசாயிகள் உர மானியத்தில் பயன்பெற, அரசுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு தடுக்கப்பட்டது.

இந்தநிலையில்தான், கடந்த பிப்ரவரி 21-ம் தேதி முதல் (21.2.2023) விவசாயிகளுக்கு மானிய உரம் வழங்குவதற்கு புதிய விதிமுறையைப் பின்பற்றவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதாவது, மானிய விலையில் உரம் வாங்கும் விவசாயிகள் ஆதார் நகலுடன், தங்களின் சாதி பற்றிய விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது. அதன்படி, பி.ஓ.எஸ் மெஷினில் புதிதாக சாதி என்கிற பிரிவு உருவாக்கி அதில் பொதுப்பிரிவு, ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., என்ற பிரிவுகளில் விவசாயிகள் தங்களின் வகைப்பாட்டை குறிப்பிட வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

விவசாயம்

இதை அறியாத விவசாயிகள் வழக்கம்போல உரக்கடைகளுக்குச் சென்று உரம் வாங்குவதற்குத் தேவையான ஆவணங்களைக் கொடுக்க, உரக்கடை உரிமையாளர்கள் `சாதிப் பிரிவை' கட்டாயம் தெரிவிக்கவேண்டும் என மத்திய அரசின் உத்தரவைக் குறிப்பிட்டு கேட்டிருக்கின்றனர். இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். `விவசாயிகள் உரம் வாங்குவதற்கு எதற்கு சாதி? உடனே இந்த முறையை நீக்க வேண்டும்!' என பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

சாமி.நடராஜன்

குறிப்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், ``விவசாயிகள் மீது பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வரும் மத்திய அரசு, மானிய விலையில் உரங்களை வாங்குவதற்கு விவசாயிகள் சாதி குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. விவசாயிகளுக்கு அடியுரமான டி. ஏ. பி. , மேலுரமான யூரியாவை மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது. மானிய விலையில் உரக்கடைகளில் உரங்களை விவசாயிகள் வாங்குவதற்கு ஆதார் அட்டை நகலை கொடுத்து வருகின்றனர். கடந்த 2023, பிப்ரவரி 21 ஆம் தேதி மானிய விலையில் உரக்கடைகளில் உரங்களை வாங்கிட ஆதார் நகலுடன் விவசாயிகள் தனது சாதி பற்றிய விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

விவசாயிகள் உரத்தை வாங்குவதற்கு சிட்டாவையும், ஆதார் நகலையும் காண்பித்தால் போதும். சாதி குறித்த விவரத்தை ஏன் தெரிவிக்க வேண்டும்? தற்போது இந்த தகவலை உரக்கடைக்காரர்கள் உரம் வாங்க செல்லும் விவசாயிகளிடம் கூறும் போது விவசாயிகள் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்து வருகின்றனர். வேளாண் துறைக்கான நிதி நிகழாண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு வெகுவாக குறைத்துள்ளது. உரத்துக்கான மானியத்தையும் பட்ஜெட்டில் குறைத்து விட்டனர். இந்நிலையில் மானிய விலையில் உரங்களை வாங்கிட விவசாயிகள் சாதியை குறிப்பிட வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதை மாநில அரசும் வலியுறுத்த வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, கோவில்பட்டி கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாய இடுபொருட்கள் சங்க தலைவர் என்.ரகுராமன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

அன்புமணி ராமதாஸ்

இவர்கள் தவிர பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ``மானியத்துடன் கூடிய உரங்களை உழவர்கள் வாங்கும்போது, அவர்கள் சாதி பிரிவைத் (பொது/ஓபிசி/எஸ்.சி/எஸ்.டி) தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று நடுவண் உரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உர விற்பனைக் கருவியின் மென்பொருளில் இதற்கான வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது! உழவுத் தொழில் சாதியின் அடிப்படையில் நடைபெறவில்லை. உர மானியமும் சாதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது உர மானியம் வழங்குவதற்கான சாதிப் பிரிவுகளை கோருவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. நடுவண் அரசின் இந்த விதி உழவர்களை காயப்படுத்தியுள்ளது!உர மானியம் பெறுவோரின் சாதிப் பிரிவுகளை அறிந்து அவற்றின் அடிப்படையில் உர மானியம் வழங்க நடுவண் அரசு திட்டமிட்டிருக்கிறதோ என்ற ஐயம் உழவர்கள் நடுவே ஏற்பட்டிருக்கிறது. உழவர்களின் இந்த ஐயத்தை உடனடியாக போக்க வேண்டியது நடுவண் அரசின் கடமை! உழவுத் தொழில் புனிதமானது; அனைவருக்கும் பொதுவானது. அதற்கான உர மானியம் பெறும் உழவர்களை சாதியின் அடிப்படையில் பார்ப்பது தவறு. எனவே, உரம் வாங்கும் உழவர்களின் சாதிப் பிரிவை கோரும் கூறை விற்பனைக் கருவியின் மென் பொருளில் இருந்து நீக்க நடுவண் அரசு நீக்க வேண்டும்!" எனத் தெரிவித்திருக்கிறார்.

எதற்காக சாதி என்னும் விவரம் உரம் வழங்குவதில் கொண்டுவரப்பட்டது என மத்திய அரசு சார்பில் முறையாக விளக்கம் தெரிவிக்கவில்லை. கடும் கண்டனங்கள் எழுந்திருக்கும் நிலையில் மத்திய அரசு அதனை நீக்குமா..?! பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!



from Tamilnadu News https://ift.tt/C0iNL6o

Post a Comment

0 Comments