மகளிர் இலவச பேருந்து பயணத்தை 'ஓசி' என பேசியது தொடங்கி... பொது மேடையில் சாதியை குறிப்பிட்டு கேட்டது, ஒருமை மற்றும் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தியது என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், அருங்குறுக்கை பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்... குடிநீர் பிரச்னை குறித்து கேள்வியெழுப்பிய அப்பகுதி மக்களிடம், "எனக்கு அப்படியே ஓட்டுப்போட்டு கிழி கிழினு கிழிச்சிட்டீங்க" என பொன்முடி பேசியிருந்தது வாக்களித்த மக்களின் முகம் சுளிக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த நிலையில் தான் மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அவர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் சீரமைக்கப்பட்ட குளம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பூங்காவை 15-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், "ஆண், பெண் சமம்; அனைத்து மதத்தினரும் சமம்; இதுதான் 'திராவிட மாடல்' என்று செயல்படுத்தி கொண்டிருப்பவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின். அவருடைய திட்டம் தான் இந்த 'நகர்புற மேம்பாட்டு திட்டம்'.
கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் அப்பகுதி வளர்ச்சி அடைய வேண்டும் என்று செயல்படுகின்றவர். நாங்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் பல்வேறு பணிகள் நடைபெற்றிருக்கிறது. எங்களுடைய நோக்கம் எல்லோரும் வளர வேண்டும் என்பதுதான்" என்று அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென கூட்டத்திலிருந்த பெண் ஒருவர், "எல்லாத்துக்கும் தான் குறையா இருக்குது" என கூறினார். அதை கேட்டு உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் பொன்முடி, "குறையா இருக்குதா.... நீ கொஞ்சம் வாய மூடிக்கினு இரு. உங்க வீட்டுக்காரர் வந்திருக்கிறாரா..." என்றார். அதற்கு அந்த பெண், "எப்பயோ அவர் போயிட்டாரு" என்று தெரிவிக்க, "போயிட்டாரா... பாவம்! இல்லாட்டி... நீ இப்படியே அனுப்பி வச்சிட்டிருப்ப" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அப்போது தி.மு.க தொண்டர்கள், அந்த பெண்ணை அமைதிப்படுத்த முயற்சி செய்ய, "பாவம், அந்த அம்மா... அதோட குறைய சொல்லுது விடுங்க... நல்லதுதான்" என்று அமைச்சர் பொன்முடி பேச்சை திசை திருப்பினார். இதனால் அங்கு சற்று சலசலப்பு நிலவியது.
from Tamilnadu News https://ift.tt/EGI7qx6
0 Comments