Doctor Vikatan: என்னை அறியாமல் ஏற்படும் சிறுநீர்க் கசிவு; வேலையிடத்தில் தர்மசங்கடம்; தீர்வு உண்டா?

Doctor Vikatan: வேலைக்குச் செல்லும் 38 வயதுப் பெண் நான். எனக்கு சமீப நாள்களாக சிறுநீர்க் கசிவு பிரச்னை இருக்கிறது. என்னையும் அறியாமல் திடீரென சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. சில நேரங்களில் உடை நனைத்து அசௌகர்யத்தை ஏற்படுத்துகிற. இதனால் வேலைக்குச் செல்லக்கூட பயமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? இதை குணப்படுத்த முடியுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பெண்களுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா.

மருத்துவர் நிவேதிதா

இந்தப் பிரச்னையை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை ஓவர் ஆக்டிவ் பிளாடர், அதாவது சிறுநீர்ப்பையின் அதீத செயல்பாடு. இது பாதிக்கும்போது உடனடியாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, உந்துதல் ஏற்படும். அடுத்தது ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினன்ஸ். மூன்றாவது ஓவர்ஃப்ளோ இன்கான்டினன்ஸ்.

முதல் வகையில் சிறுநீர்ப்பையானது தன் இயல்பைத் தாண்டி அதிகமாக வேலை செய்யும். அதன் காரணமாக நாம் நினைப்பதற்கு முன்பே, நம்மையும் அறியாமல் சிறுநீர் வெளியேறும். இதனால் சிறுநீர்க் கசிவு ஏற்பட்டு, உடைகள் நனைந்து, வாடை அடித்து, ஒருவரை தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளும். இந்தப் பிரச்னைக்கான காரணம் கண்டறியப்பட்டு, மருந்து, மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். தேவைப்பட்டால் கடைசி தீர்வாக அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

இரண்டாது வகையில் சிரிக்கும்போது, இருமும்போது, தும்மும்போதெல்லாம் சிறுநீர்க் கசிவு ஏற்படும். ஒருகட்டத்தில் இந்தச் செயல்களைச் செய்யவே மனது பயப்படும். சிரிக்கவே தயங்கும் பெண்களும் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு எளிய பயிற்சிகளே போதும். மருத்துவரிடம் அவற்றைக் கற்றுக்கொண்டு, வீட்டிலேயே தொடர்ந்து செய்து வந்தாலே மெள்ள மெள்ள பிரச்னையிலிருந்து மீளலாம். தேவைப்பட்டால் சில மருந்துகளையும் உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். இந்தப் பிரச்னையிலும் கடைசிகட்ட தீர்வாக எளிமையான அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படும்.

மூன்றாவது வகையான ஓவர்ஃப்ளோ இன்கான்டினன்ஸ் பிரச்னைதான் சற்று அதிக கவனம் தேவைப்படுகிற ஒன்று. ஒரு வாளியில் தண்ணீர் நிரப்புகிறோம். அது நிரம்பியதும் தானாக வெளியே வழியும்தானே.... அப்படித்தான் இந்தப் பிரச்னையும். சிறுநீர்ப்பையில் சிறுநீர் நிரம்பியதும் அதைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் சிறுநீர்க் கசிவு ஏற்படுவதையே இந்தப் பிரச்னை குறிக்கும். சிறுநீரகக் கற்கள் உள்ளனவா, தொற்று உள்ளதா, நரம்பியல் பிரச்னையோ, வேறு ஏதேனும் பிரச்னையோ உள்ளனவா என கண்டறிந்த பிறகே சிகிச்சை ஆரம்பிக்கப்படும். இதற்கும் மருந்துகள், பிரத்யேக சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.

இவற்றில் எந்த வகை பாதிப்பானாலும் சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்கப்பட வேண்டும். அலட்சியம் செய்வது சிறுநீரகங்களையே பாதிக்கும் அளவுக்குத் தீவிரமாகலாம். அது மட்டுமன்றி, இந்தப் பிரச்னையோடு வாழ்வது என்பது இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். வெளியிடங்களுக்குச் செல்லவே பிடிக்காத அளவுக்கு ஒருவரை வீட்டுக்குள்ளேயே முடக்கும். எனவே உங்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க, இந்தப் பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news https://ift.tt/40MSv2K

Post a Comment

0 Comments