விகடனின் 'Doubt of common man' ல் மன அழுத்தம் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? அதை தீர்க்க முடியுமா? என்று விகடன் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
குழந்தைகளுக்கும் ஏன் மன அழுத்தம் வருகிறது? குடித்தால் மன அழுத்தத்தை போக்க முடியுமா? மன அழுத்தம் எப்படி வருகிறது? என மன அழுத்தம் குறித்த வாசகர்களின் பல சந்தேகங்கள் குறித்தும் மனநல மருத்துவர், Dr. அசோகன், அவர்களிடம் கேட்டோம். அவர் கூறிய பதில் பின்வருமாறு:
மன அழுத்தம் என்பது நமது எண்ணம் சற்று நிலைகுலைந்து போவது. பல காரணங்களால் நமக்கு மன அழுத்தம் வரும். இது மனிதன் தன்னுடைய வாழ்கையில், தான் எதிர்பாராத விதமாக ஏதாவது நடந்தால் வரும். எடுத்துக்காட்டாக நன்றாக படிக்கும் ஒரு மாணவன் தேர்வில் தோல்வி அடைந்தாலோ, அல்லது நெருக்கமான யாராவது இறந்து விட்டாலோ, இத்தகைய சூழலில் அதை நம் மனம் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதால் நாம் மன அழுத்தத்திற்குள் செல்கிறோம். மன அழுத்தம் உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், மன ரீதியாகவும் வரலாம். இதை ஆங்கிலத்தில் REACTIVE DEPRESSION என்பார்கள் இவை ஏதாவது பிரச்னைகளால் வருவது.
ஆனால், பிரச்னைகள் இல்லாமலும் மன அழுத்தம் வரும் அதனை ஆங்கிலத்தில் ENDOGENOUS DEPRESSION என்பார்கள் இது குடும்பதில் அல்லது நெருங்கிய தொடர்புடைய சொந்தம் யாராவது மன அழுத்தத்தில் இருந்தாலோ, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாலோ, பரம்பரையாக அவர்கள் குழந்தைகளுக்கும் வருவதற்கு வாய்ப்புள்ளது. இது காரணங்களே இல்லாமல் உடலில் ஏற்படும் சில மாறுதல்களால் வருவது. மொத்தமாக 30-40 வகையான மனவருத்தங்கள் உள்ளன. ஆனால், அடிப்படையாக REACTIVE DEPRESSION, ENDOGENOUS DEPRESSION இரண்டும் தான் இருக்கின்றது.
இதை எப்படி அறிந்து கொள்வது என்றால், தூக்கம், உணவு உட்கொள்ளும் முறை, சக்தி இவற்றில் மாறுபடும். REACTIVE DEPRESSION இருப்பவர்கள் பகலில் நன்றாக இருப்பார்கள் ஆனால், இரவு தூங்குவதற்கு சிரமப்படுவார்கள், 1 மணி 2 மணிக்கு தான் தூக்கம் வரும்.
ENDOGENOUS DEPRESSION இருப்பவர்கள் இதற்கு நேர் எதிராக இரவில் நன்றாக தூக்கம் வரும், அதிகாலையில் விழித்து கொள்வார்கள் பகல் முழுவதும் அவர்களுக்கு பிரச்னையாக இருக்கும், சில சமயங்களில் யாரும் இல்லாத நேரங்களில் யாருடைய குரலோ காதுக்குள் கேட்பது போல இருக்கும். இதைவைத்து எந்த வகையான மன அழுத்தம் என்று கண்டுகொள்ளலாம்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!
மன அழுத்தம் இருப்பவர்களுக்கு சாதாரமான பிரச்னைகூட பெரிதாகத் தெரியும், நன்றாகப் பேசுபவர்கள் அமைதியாக யாரிடமும் பேசாமல் இருப்பார்கள். பிடித்த செயல்பாடுகளை வெறுக்கத் தொடங்குவார்கள். சாப்பிட பிடிக்காது. எப்போதும் எதிர்மறையான எண்ணம் கொண்டு இருப்பார்கள். அதிகம் அழுவார்கள். அந்த எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்போது அதன் உச்சத்தில் அவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் வரும். சந்தோஷமான தருணங்களிலும் அவர்களால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. சந்தோஷமான விஷயங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. அடுத்தவரின் கண்களைப் பார்த்து பேசுவது குறைந்து, தலை குனிந்து பேசுவார்கள், தனிமையை விரும்புவார்கள்.
மன அழுத்தம் பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் வரும். சிறுவயதிலேயே தாய் அல்லது தந்தை இறந்தாலோ, அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஈடுபடுத்தபட்டாலோ குழந்தைகளுக்கும் மனஅழுத்தம் வரும். அத்தகைய குழந்தைகள் விளையாடாமல் தனிமையாக இருப்பார்கள்.
படிப்பில் ஆர்வம் குறையும், அடம்பிடிப்பது அதிகமாகும். பொருட்களைத் தூக்கி போட்டு உடைப்பார்கள். எதிர்த்துப் பேசத் தொடங்குவார்கள். பெண் குழந்தைகளுக்கு வளரிளம் பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் மன அளவில் அதிகம் குழப்பங்கள் ஏற்படும்.
போதைப் பழக்கத்தினாலும் மன அழுத்தம் வரும். திருமண உறவில் இருப்பவர்கள் சண்டை போட்டு பிரிய நேரும் போது மன அழுத்தம் வரும். வயதானவர்கள் தனிமையாக இருக்கும் போது மன அழுத்தம் ஏற்படலாம். அதுமட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் அல்லது படிப்பவர்கள், அங்கு இருக்கும் மக்கள், சூழல், கலாசாரம் இவற்றை ஏற்றுக்கொள்ளாதபோது அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். மேலும், ஊக்கமருந்து, நீரிழவு (சர்க்கரை நோய்) போன்ற நோய்களுக்காக எடுக்கும் மருந்துகள் மூலம் மன வருத்தம் ஏற்படலாம்.
மது அருந்துபவர்களுக்கும், மன அழுத்தத்துக்கும் அதிக ஒற்றுமைகள் உள்ளது. குடிப்பவர்கள் எப்பொழுதும் மனசு கஷ்டமா இருக்கு அதுக்காக குடிக்குரேன்னு சொல்லுவாங்க, ஆனா குடிச்சா அவங்க மன வருத்தம் சரி ஆகாது, மாறாக அதிகரிக்கும்.
எப்படி என்றால் ஒருவன் குடும்ப பிரச்சனையால் மன அழுத்தத்துக்குச் சென்று குடிக்கத் தொடங்கினால், அவனது பிரச்னை சரியாகுமா என்றால் ஆகாது. மாறாக, அவன் குடியால் தனது வேலைகளைச் செய்யாமல் இன்னும் பிரச்னை அதிகரிக்கும் அதனால் மன அழுத்தம் அதிகரிக்கும். அதனால் குடியும் அதிகரிக்கும். எனவே, மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதற்கான தீர்வைதான் தேட வேண்டுமே தவிர, மற்றொரு பிரச்னையை அல்ல.
இன்றைய சூழலில் மனிதர்களிடம் பேசுவதை மறந்து இயந்திரங்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறோம். பெற்றவர்கள் குழந்தைகளுக்கென்று நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேசவும், விளையாடவும் வேண்டும். குழந்தைகள் போனில் என்ன பார்க்கின்றனர் என்று கவனிக்க வேண்டும். அவர்களுக்கு மனம் விட்டு பேச கற்றுத் தர வேண்டும்.
மனிதனாய் பிறக்கும் அனைவருக்குமே மன அழுத்தம் இருக்கும். ஏனென்றால், நாம் எல்லோருமே மகிழ்ச்சியாக, பிரச்னைகளே இல்லாத ஒரு வாழ்வை தேடிச் சென்று கொண்டிருக்கிறோம். அப்படியில்லாமல், பிரச்னைகளும் இருக்கும் அதுதான் வாழ்க்கை என்று உணர வேண்டும். சில பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு. சில பிரச்னைகளுக்குத் தீர்வில்லை. சில பிரச்னைகளுடன் வாழப் பழகவேண்டும். எப்பொழும் தனிமையாக இல்லாமல், யாராவது ஒருவரிடமாவது மனம் விட்டு பேச வேண்டும் அப்படி இருந்தால் மன அழுத்தங்களை குறைக்க முடியும்.
இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்கள்!
from Latest news https://ift.tt/4pTn9m0
0 Comments