ரயில் பயணிகள்மீது தீ வைத்தவர் நொய்டாவைச் சேர்ந்தவரா?! - குற்றவாளியை நெருங்கும் போலீஸ்

கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் செல்லும் எக்ஸிகியூட்டிவ் ரயில், எலத்தூர் ரயில் நிலையத்தைத் தாண்டி சென்றபோது பயணிகள்மீது ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். நேற்று இரவு 9:30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் `தீ'க்குப் பயந்து ரயிலிலிருந்து வெளியே குதித்த 2 வயது குழந்தை உட்பட 3 பேர் இறந்தனர். அவர்களின் உடல்கள் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டன. டி-2 கம்பார்ட்மென்ட்டிலிருந்து டி-1 கம்பார்ட்மென்ட்டுக்கு கையில் இரண்டு பெட்ரோல் பாட்டில்களுடன் வந்தவர், பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. பயணிகள் கூறிய அடையாளங்களின் அடிப்படையில் குற்றவாளியின் கம்ப்யூட்டர் வரைபடம் வெளியிடப்பட்டிருக்கிறது. தீ விபத்து நடந்த பகுதியின் அருகே ஒரு பேக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில் மொபைல் போன், ஒரு பாட்டிலில் பெட்ரோல், இந்தியில் எழுதப்பட்ட டைரி போன்ற புத்தகம் உள்ளிட்டவை இருந்திருக்கின்றன. அதில் ஒரு பேப்பரில் கன்னியாகுமரி, குளச்சல், திருவனந்தபுரம், களக்கூட்டம் உள்ளிட்ட ஊர் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.

தீ வைக்கப்பட்ட கோச்சில் விசாரணை

இது குறித்து கேரளா போலீஸும், தமிழ்நாடு போலீஸும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே அந்த பேக்கில் இருந்த செல்போனில் சிம்கார்டு இல்லை என்ற தகவல் வெளியானது. அதே சமயம் அந்த போனில் எந்தெந்த சிம்கார்டுகள் இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டன என்பது பற்றிய விவரங்களை போலீஸார் ஆய்வுசெய்தனர்

விசாரணையின் அடிப்படையில் ரயிலில் தீ வைத்தது நொய்டாவைச் சேர்ந்த் ஷகரூக் சைபி என்ற நபராக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மர வேலைச் செய்துவந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் அந்த நபருக்கு காயம் ஏற்பட்டதாகவும், கண்ணூரிலுள்ள மருத்துவமனையில் அவர் முதலுதவி சிகிச்சை பெற்றதாகவும் போலீஸுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து போலீஸார் கண்ணூர் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே ரயில் பயணிகள்மீது தீ வைத்த நபரை மத்திய அரசின் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் கைதுசெய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், அந்தத் தகவல் போலீஸ் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.

கண்டெடுக்கப்பட்ட பேக்
இறந்தவர்கள்

இது குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகு கேரள டி.ஜி.பி அனில் காந்த் கூறுகையில், "குற்றவாளியைப் பிடிக்க ஏ.டி.ஜி.பி அஜித்குமார் தலைமையில் 18 பேர்கொண்ட விசாரணை டீம் அமைக்கப்பட்டிருக்கிறது. குற்றவாளி குறித்த லீட் கிடைத்திருக்கிறது. விரைவில் கூடுதல் தகவல் அளிக்கிறோம்" என்றார்.



from Latest news https://ift.tt/MCwk54K

Post a Comment

0 Comments