'இந்தியா ரிஷிகளாலும், உபநிடதங்களாலும் உருவானது; தமிழ்நாடு ஆன்மிகம் நிறைந்த இடம்' - ஆளுநர் ரவி

விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று விருதுநகர் மாவட்டம் வந்திருந்தார். ஆளுநர் ரவியின் பயணத் திட்டத்தின்படி முதல் நிகழ்ச்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தன் மனைவி லட்சுமியுடன், ஆளுநர் ரவி காலையில் சாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் நிர்வாக குழுவினர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜூயர் வரவேற்று கௌரவித்தனர். தொடர்ந்து ராஜபாளையம் ராஜுஸ் கல்லூரியின் 50-ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

நினைவுப்பரிசு

நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், "விருதுநகர் மாவட்டம் எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களைத் தந்த மண். விடுதலைப் போராட்ட வீரம் நிறைந்த மண் மட்டுமல்லாது, சிறந்த ஆன்மிகத் தலங்கள் நிறைந்த மண்ணாகவும் விருதுநகர் மாவட்டம் விளங்குகிறது. இத்தகைய ஆன்மிக பூமியில் வாழும் மக்களை நான் மனம் திறந்து பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இதைத்தான் வேதம் நிறைந்த தமிழ்நாடு, வீரம் செறிந்த தமிழ்நாடு என பாரதியார் தன் பாடலில் குறிப்பிட்டிருக்கிறார். கல்லூரியின் 50-வது ஆண்டு பொன்விழா என்பது நாம் கடந்து வந்த பாதையும், இனி கடக்க போகும் எதிர்காலப் பாதையும் நினைத்துப் பார்க்கக் கூடிய இடமாகும். விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுக்கால நேரத்தில் நமது நாடும், சமூகமும் பலதரப்பட்ட முகங்களாக மாறியிருக்கின்றன. நாட்டில் வளர்ச்சிக்கு பல்வேறு காரணிகள் உந்துதலாக இருந்திருக்கின்றன.

அந்த வகையில் விவசாயம் மட்டும் தனியே நம் நாட்டின் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்க முடியாது. தற்போதுள்ள நவீன காலக்கட்டத்தில் விவசாயத்தோடு சேர்ந்து தகவல் தொழில்நுட்பமும் நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்துக்கும் முக்கிய பங்காற்றுகிறது. தகவல் தொழில்நுட்பத்துறையில் நம்நாடு ஆகப்பெரும் முன்னேற்றங்களை அடைந்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சிறந்த தொழில்நுட்பங்களை நமது விஞ்ஞானிகள் வடிவமைத்திருக்கின்றனர். இன்று உலகிலேயே மிகவும் அதிக அளவில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக செல்போன் தரவு தகவல்கள் வழங்குவதில் ஒட்டுமொத்த உலகில், இந்தியாவின் பங்களிப்பு வெறும் இரண்டு சதவிகிதமாக இருந்தது. ஆனால் இன்று அந்த மதிப்பு 24 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு வீழ்ந்துவிட்ட பொருளாதாரத்தை சரி செய்ய பல நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் நமது நாடு, வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து கட்டமைப்பதில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. அந்த வகையில் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கிய காரணியாக இந்தியா பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாது அறிவியல் தொழில்நுட்பத்துறையிலும் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிதாக தொழில் ஆரம்பிப்பது, புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதே சமயம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத கண்டுபிடிப்புகளையும் இந்தியா உருவாக்குகிறது. நமது நாட்டின் வளர்ச்சி இளைஞர்களிடம் இருக்கிறது. நாட்டின் அசுரத்தனமான வளர்ச்சிக்கு இளைஞர்களின் அறிவும் ஆற்றலும் முக்கிய பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது.

ஆளூநர் ரவி

கடந்த காலங்களில் வெளியுறவு கொள்கை, கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதி, கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் இந்தியா போதுமான தன்னிறைவு நிலையை அடையாமல் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கம் அனைத்து துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் நிலையையும் உயர்த்துவதற்காக திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. வீடு இல்லாதவர்களுக்கு வீடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களைச் சேமிப்பது, புதிய தொழில் உருவாக்குதல், சுகாதாரம், கல்வி, தண்ணீர் என அனைத்து வசதிகளையும் அரசு திறம்பட செய்து வருகிறது. அதே வேளையில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு பிரச்னைகளும் பெருகி வருவதை கவனிக்க வேண்டியிருக்கிறது. பிரச்னைகளைக் கையாளும் விதம் மற்றும் அவற்றை அடிப்படையிலிருந்து சரி செய்வதில் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்படுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவர்களின் ஆளுமை வசதிக்காக இந்தியாவை மொழி, இனம், மக்கள், நிலப்பரப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பலவேறு மாகாணங்களாகப் பிரித்தனர். நாம் கடந்து வந்த பாதையை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்தியாவை உருவாக்கியது எந்த ராஜாவும், மகாராஜாவும் அல்ல. ஐரோப்பா கண்டங்களில் உள்ள நாடுகளை மட்டுமே அரச வழித்தோன்றல்கள் உருவாக்கியதாக வரலாறுகள் உண்டு. ஆனால் இந்தியா, அரசர்கள் உருவாக்கிய நாடு என எந்த வரலாறும் கிடையாது. இந்தியா ரிஷிகளாலும், வேத உபநிடதங்களாலும் உருவான நாடு.

வேதங்கள் உருவாவதற்கு முன்பிருந்தே இந்தியா ஆன்மிக நாடாக திகழ்ந்து வந்திருக்கிறது. ஏன் தமிழ்நாடுகூட ஆன்மிகம் நிறைந்த நாடுதான். எடுத்துக்காட்டாக நாயன்மார்கள், ஆழ்வார்கள், சங்கம் வளர்த்தவர்கள், பண்டிதர்கள் என பலதரப்பட்ட நபர்களையும் கொண்டதுதான் தமிழ்நாடு. இதுதான் பாரதம். பாரதத்தில் 'பா' என்பது ஆன்மிக ஒளி, 'ரத்' என்பது ஒளிவட்டமாகும். இதுதான் நம்மை மேன் மக்களாக வழிநடத்தி வருகிறது. நாட்டின் நான்கு திசைகளிலும் பரவி நம்மை கலாசாரத்திலும் பண்பாட்டிலும் அறிவிலும் வளர்ச்சியிலும் சிறந்தவர்களாக வெளிக்காட்டுவதற்கு உதவுகிறது.

1956-ம் ஆண்டுக்கு முன்னதாக நமது நாட்டில் புலம்பெயர்ந்தவர்கள் என்று எந்த அடையாளமும் கிடையாது. அனைவரும் ஒரு தாய் மக்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலைதான் இருந்தது. இந்தியாவிலுள்ள காசியில்கூட 40,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் ஒருநாளும் தங்களை புலப்பெயர்ந்தவர்கள் என்று கூறியது கிடையாது. உண்மையில் புலம்பெயர்ந்தவர்கள் தாங்கள் போய் சேர்ந்த நிலத்தின் வளர்ச்சிக்காக உழைப்பை கொடுக்கின்றனர். அங்குள்ள மக்களுக்கு ஆதரவு தருகின்றனர். உள்ளூர் வளர்ச்சியை ஏற்படுத்துகின்றனர். மக்களை அரவணைக்கின்றனர். புலம்பெயர்ந்தவர்கள் என்ற சொல்லை ஏற்படுத்தி நமக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது பிரிட்டிஷார்தான். அருவருக்கத்தக்க அந்தச் சொல்லை சிலர் பிடித்துக்கொண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காகவும் அவர்களின் நயவஞ்சகப் பேச்சை நம்பியும் மக்களுக்குள் பிரிவினைவாதத்தை வளர்த்து அதில் கிடைத்த பலனுக்காக மயங்கி கிடந்தனர். இதனால் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த நம்முடைய போராட்டம் பல சமயங்களில் பலவீனம் அடைந்தது.

உலகளவில் இந்தியாவின் வளர்ச்சி பொருளாதார உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜி20 மாநாட்டை தலைமை தாங்கும் பொறுப்பு இந்தியாவிடம் வந்து சேர்ந்திருக்கிறது. இதன் மூலமாக ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கொள்கையே இந்தியா முன்வைக்க விரும்புகிறது. நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு பெண் சக்தியும் முக்கிய பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. கடந்த கால புள்ளி விவரங்களின் படி ஆயிரம் ஆண்களுக்கு 956 பெண்கள் என்ற நிலையை இருந்து வந்தது. ஆனால் அரசு, பெண் குழந்தைகளை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் மற்றும் பெண் குழந்தைகள் பேணி காப்பதற்கான அறிவிப்புகள் மூலம் பெண்கள் கல்வி, முன்னேற்றம் ஆகியவை மேம்படுத்தப்பட்டு தற்போது இந்தியாவில் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. தற்போது திருத்தியமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஆண்களைவிட குறைந்தபட்சம் 15,000 பெண் வாக்காளர்கள் அதிகமாக இருப்பதை காணலாம்.

திறப்புவிழா

அது மட்டுமல்ல, பெண்கள் என்றால் குறிப்பிட்ட சில வேலைகளுக்கு மட்டுமே பொருத்தமாக இருப்பார்கள் என்ற நிலையையும் உடைத்தெறிந்து, இன்று பாதுகாப்புத்துறையில் ஜெட் ரக போர் விமானங்கள் மற்றும் உயர் பொறுப்புகளுக்கும் வந்து மெய்சிலிர்க்க வைக்கின்றனர். அதுமட்டுமல்லாது தற்போது நவீன யுகத்தில் கணினி வழியாக நடைபெறும் தகவல் தொழில்நுட்ப திருட்டுக்கு எதிரான போரிலும் பெண்களின் பங்கு முக்கியப் பங்காற்றுகிறது" என்றார்.



from Tamilnadu News https://ift.tt/iKamP0l

Post a Comment

0 Comments