கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், எலத்தூரில் ரயில் பயணிகள்மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த அதிர்ச்சி சம்பவம் கடந்த 2-ம் தேதி இரவு நடந்தது. ஆலப்புழா - கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் ரயிலில் பயணித்த மூன்று பேர் தீக்கு பயந்து ரயிலிலிருந்து குதித்ததில் உயிரிழந்தனர். ரயிலில் தீவைத்த குற்றவாளி ஷாருக் சைஃபி கடந்த 4-ம் தேதி இரவு மகாராஷ்டிராவின் ரத்தினகிரி ரயில் நிலையத்தில்வைத்து கைதுசெய்யப்பட்டார். அவருக்கு 24 வயதாவதாகவும், டெல்லி ஷாஹின்பாக் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்திருக்கிறது. தீவிரவாத தடுப்புப் படையான ஏ.டி.எஸ் அவரைக் கைதுசெய்து கேரள போலீஸ் வசம் ஒப்படைத்தது. கேரள போலீஸார், அவரை இன்று காலை கோழிக்கோடு அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.
ஷாருக் சைஃபியை கேரளாவுக்கு அழைத்துவர மூன்று போலீஸார் மட்டுமே பாதுகாப்புக்கு உடன் வந்ததாகவும், போலீஸார் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் அதிருப்தி எழுந்தது. இந்த நிலையில், அவரை அழைத்து வந்த கார் கண்ணுரில் பஞ்சரானது. போலீஸ் விசாரணையில், பயணிகள்மீது பெட்ரோல் ஊற்றி எரித்த குற்றத்தை ஷாருக் சைஃபி ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் கடந்த 31-ம் தேதி டெல்லியிலிருந்து மும்பைக்கு வந்ததாகவும், அப்போது அவருடன் பயணித்த ஒருவர் ரயிலில் தீவைக்கும் ஐடியாவைக் கொடுத்ததாகவும், அப்படி தீவைத்தால் நன்மைகள் நடக்கும் எனக் கூறியதாகவும் ஷாருக் சைஃபி கூறியிருக்கிறார். அதையடுத்து, கேரளாவுக்கு வந்தவர் ஒரு பெட்ரோல் பங்கில் மூன்று பாட்டில்களில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு, ஆலப்புழா- கண்ணூர் ரயிலில் ஏறி தீவைத்திருக்கிறார். தீவைக்க, கையிலிருந்த லைட்டரைப் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அவர் வாக்குமூலத்தில் மாற்றி மாற்றிச் சொல்வதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். அவரின் காயம் குறித்து கோழிக்கோடு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஷாருக் சைஃபி மஞ்சள் காமாலை பாதிப்பு காரணமாக, கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார். தொடர் விசாரணையில் உண்மை வெளியாகும் என போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.
from Latest news https://ift.tt/rgO76hT
0 Comments