பெகாசஸ் சர்ச்சையே ஓயாத நிலையில், புது ஸ்பைவேர் வாங்க திட்டமா?! - சந்தேகம் கிளப்பும் எதிர்க்கட்சிகள்

இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய விவகாரம் ’பெகாசஸ்’ சாஃப்ட்வேர். பெகாசஸ் மூலம் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கவும், போனிலுள்ள தரவுகளை வேவு பார்க்கவும் முடியும். அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூகச் செய்ற்பாட்டாளர்காளின் செல்போனிலுள்ள தகவல்களை வேவு பார்க்க, மத்திய அரசு பெகாசஸை இஸ்ரேல் நிறுவனத்திடமிருந்து பெற்று பயன்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ராகுல் காந்தி

`ஃபர்பிடன் ஸ்டோரிஸ்', `அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல்' ஆகியவை நடத்திய புலனாய்வில், இஸ்ரேலின் என்.எஸ்.ஓ அமைப்பின் பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் இந்தியாவில் அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்ள் மற்றும் பத்திரிகையாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக ராகுல் காந்தி, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி உள்ளிட்டோரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

2017-ம் ஆண்டு இந்தியா-இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தத்தில் பெகாசஸ் சாஃப்ட்வேர் மற்றும் ஏவுகணை ஆகியவை இருந்ததாகவும் தகவல்கள் பரவின. 2021 ஜூன் சமயத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இதனால் சில நாள்கள் முடங்கின. ``அரசியல்வாதிகள் கண்காணிப்பில் இருக்கின்றனர். அரசியல் கட்சித் தலைவர்களின் செல்போன்கள் பெகாசஸ் கண்காணிப்பில் இருக்கின்றன" என ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

பெகாசஸ்

பூகம்பமாக வெடித்து சற்றே தணிந்திருந்த இந்த விவகாரம், தற்போது மீண்டும் பூதாகாரமாகி விவாதப் பொருளாகியிருக்கிறது. மத்திய அரசு, மேலும் சில புதிய உளவு பார்க்கும் மென்பொருள்களை வாங்கிட முனைவதாகத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. பிரிட்டனைச் சேர்ந்த ஃபைனான்சியல் டைன்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கும் தகவலின்படி, பெகாசஸ் சாஃப்ட்வேரைவிட அட்வான்ஸ்டான predator, Quadream உள்ளிட்ட ஸ்பைவேர்களை வாங்க இந்திய அரசு பரீசிலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கு 120 மில்லியன் டாலர் வரை நிதி செலவிடவிருப்பதாகவும் ஃபைனான்சியல் டைன்ஸ் பத்திரிகை தகவல் சொல்கிறது. மேற்கண்டவற்றை வைத்து தொலைபேசிகளை வேவு பார்த்தாலும் அதை நிரூபிப்பது கடினம் என்கிறார்கள். Predator ஸ்பைவேர் கீரீஸில் நடந்த முக்கிய ஊழல் விவகாரத்தைக் கண்டுபிடித்ததன் பின்னணியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ``கடந்த தேர்தலுக்கு முன்பு பெகாசஸ் மூலம் சாமான்ய மக்கள், எதிர்க்கட்சிகள், நீதித்துறை, தேர்தல் ஆணையர் மற்றும் பத்திரிகையாளர்களை மோடி அரசு உளவு பார்த்தது. தற்போது 2024 தேர்தலுக்கு முன்பு கைப்பேசிகளை ஹேக் செய்யும் சதி வேலையில் மோடி அரசு ஈடுபடுகிறது. இது ஜனநாயகத்தின்மீதான நேரடித் தாக்குதல்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெய்ராம் ரமேஷ்

இது தொடர்பாக நம்முடன் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், ``இந்திய அரசாங்கம் புதிய உளவு மென்பொருள் சாதனங்களை வாங்குவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. தேச பாதுகாப்பு என்ற போர்வையில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு, பத்திரிகைச் சுதந்திரத்தை முடக்குவது போன்ற செயல்கள் நடக்கின்றன. புதிதாக வாங்கத் திட்டமிட்டிருக்கும் உளவு மென்பொருளின் மதிப்பு 1,000 கோடி ரூபாய் என ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை சொல்கிறது. பெகாசஸ் விவகாரம் வெடித்தபோது, உச்ச நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் மூவர் குழு ஒன்றை அமைத்தது.

செல்போன்கள் பரிசோதிக்கப்பட்டதில், 29 செல்போன்களில் 5 பேரின் செல்போனில் மால்வேர் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அவற்றில் பெகாசஸ் இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை. பெகாசஸ் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தும் பணிகளுக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றுவரை இருக்கிறது. மேலும் பெகாசஸ் சாஃப்ட்வேரை இதுவரை நாங்கள் வாங்கினோம், வாங்கவில்லை எனத் திட்டவட்டமான பதில்கள் எதையும் மத்திய அரசு தரவில்லை.

ப்ரியன், பத்திரிகையாளர்

பெகாசஸ் மென்பொருளைத் தோற்றுவித்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனம் அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்துவந்திருக்கிறது. ஆனால் தற்போது இந்தியா வாங்கத் திட்டமிட்டிருப்பதாக ஃபைனான்சியல் டைம்ஸ் நிறுவனத்தால் சொல்லப்படும் மென்பொருள்களை, யார் வேண்டுமானாலும் பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம் என்பது போல் தெரிகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இதுபோன்ற மென்பொருள்களைச் சொந்த உளவுத்துறை நிறுவனங்களின் மூலம் உருவாக்கிக் கொள்கிறார்களே தவிர, வெளிநாடு மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து உளவு மென்பொருள்களைப் பெறுவதை தேசத்துக்கே ஆபத்தானதாகப் பார்க்கிறார்கள்.

தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதும், சிறையில் அடைப்பது சரி. குற்றங்கள் செய்திடாத அரசியல் கட்சித் தலைவர்கள், அரசை விமர்சித்து எழுதும் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்கவும், தரவுகளை வேவு பார்ப்பதும் தவறு. 2024 நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் அரசியல் ஆதாயங்களைக் கருத்தில் கொண்டு அட்வான்ஸ்டாக இருக்கும் மென்பொருளைப் பயன்படுத்தி ஒட்டுக்கேட்கவே புதிய மென்பொருளை வாங்குகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது" என்றார்.

இனியன் ராபர்ட்

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் இனியன் ராபர்ட் நம்மிடம் பேசுகையில், ``பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பெகாசஸ் சாஃப்ட்வேர் குறித்தே மத்திய அரசு எந்தவித விளக்குமும் தரவில்லை. அதற்குள் உளவு பாப்பதற்காக புதிய சாஃப்ட்வேர் வாங்க திட்டமிடுகிறது. இந்திய அரசின் திட்டம் குறித்து ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல் குறித்து, மத்திய அரசு தரப்பில் இதுவரை எந்த மறுப்போ பதிலோ தெரிவிக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. புதிய ஸ்பைவேர் வாங்குவது குறித்து மத்திய அரசு பரீசிலிக்கிறதா என உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்" என்றார்.



from Tamilnadu News https://ift.tt/ijk9Adp

Post a Comment

0 Comments