‘தேசியக் கட்சி அந்தஸ்து கொடுங்க...’ - கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடிய ஆம் ஆத்மி!

இந்திய அரசியலில் பா.ஜ.க Vs காங்கிரஸ் என்ற நிலையை மாற்றி, மும்முனை போட்டியை உருவாக்கும் வகையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலக்கட்சியாக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி, முதலில் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றி அரசியலில் தடம் பதித்தது. தற்போது, அனைத்து மாநிலங்களிலும், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆட்சியில் நடந்த, நடக்கின்ற ஊழல்களை, தங்களின் பிரசார ஆயுதமாக பயன்படுத்தி, ஆம் ஆத்மியினர் வாக்குக்களை ஈர்த்து வருகின்றனர்.

ஆம் ஆத்மி.

ஒரு கட்சி, நான்கு மாநிலங்களில், 6 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தால், தேசியக்கட்சி அந்தஸ்தைப்பெறும். அந்த வகையில், ஆம் ஆத்மி டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது, 2022 ஜனவரியில் கோவாவில் நடந்த சட்டப்பேரவைத்தேர்தலில், 6.8 சதவீதம்; கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்த குஜராத் தேர்தலில், 12.9 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. இதன் மூலம், 10 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலக்கட்சியாக துவங்கிய ஆம் ஆத்மி, தேசியக்கட்சி அந்தஸ்து பெறும் தகுதியை பெற்றதுள்ளது.

கர்நாடகா கோர்ட்டில் வழக்கு!

ஆனால், இன்னமும் மத்திய தேர்தல் ஆணையத்தால், ஆத் ஆத்மி கட்சிக்கு, தேசியக்கட்சி என்ற அந்தஸ்து வழங்கப்படாமலே உள்ளது. இப்படியான நிலையில், வரும் மே 10-ம் தேதி கர்நாடகாவில் சட்டப்பேரவைத்தேர்தல் நடக்கவுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்.

வேட்பு மனுத்தாக்கல் வரும், ஏப்ரல், 13ம் தேதி துவங்க உள்ளதால், தேசிய அந்தஸ்து கொடுக்க வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சியினர், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று மதியம் மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆம் ஆத்மி மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்டறிந்த பின், ‘‘ஏப்ரல், 13ம் தேதிக்குள் வழக்கை முடித்து, தேசியக்கட்சி விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்’’ எனக்கூறி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

‘பா.ஜ.காவின் திட்டமிட்ட சதி‘!

இது குறித்து நம்மிடம் போனில் பேசிய, ஆம் ஆத்மி செய்தித்தொடர்புத் தலைவரும், உயர் நீதிமன்ற வழங்குரைஞருமான பிரிஜேஷ் கலப்பா, ‘‘அரசியல் கட்சிகளுக்கான சட்டத்தின், 6Bன் படி ஒரு கட்சி, 4 மாநிலங்களில் மொத்த வாக்குகளில், 6 சதவீதத்துக்கும் மேல் பெற்றிருந்தால் தேசியக்கட்சியாக அந்தஸ்து வழங்க வேண்டும். குஜராத் தேர்தல் முடிவு வெளிவந்ததும், ஆம் ஆத்மி தேசியக்கட்சி அந்தஸ்து பெற்றுவிட்டது.

பிரிஜேஷ் கலப்பா

சட்டப்படி தேசிய அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, கடந்த, டிசம்பர் மாதம் முதல் மனு தாக்கல் செய்து வருகிறோம். ஆனால், பா.ஜ.கவின் திட்டமிட்ட சதியால், எங்களுக்கு இன்னமும் தேசிய அந்தஸ்து வழங்கப்படாமலே உள்ளது. ஆம் ஆத்மியின் வளர்ச்சியை கண்டு வருத்தமடையும் பா.ஜ.கவின் அழுத்தத்தால் தான், இன்னமும் தேசிய அந்தஸ்து கிடைக்கவில்லை. தற்போது, நீதிமன்றமே இந்த வழக்கை விரைந்து முடிக்கக்கோரி உத்தரவிட்டுள்ளது. விரைவில் ஆம் ஆத்மி தேசிய அந்தஸ்தைப்பெறும்,’’ என்றார்.

வரும் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில், முதல் முறையாக தேசிய கட்சி அந்தஸ்துடன், மொத்தமுள்ள, 224 தொகுதிகளிலும் களம் காணப்போகிறதா ஆம் ஆத்மி... பொறுத்திருந்து பார்ப்போம்!



from Latest news https://ift.tt/j4lcQVt

Post a Comment

0 Comments