`மூணும் பெண்பிள்ளைகள்னு அவர் போயிட்டார்’ - மகளுடன் சேர்ந்து 10ம் வகுப்புத் தேர்வில் வெற்றிபெற்ற தாய்

விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடு பேட்டை அருகே உள்ள கீழ்மலையனூர் கிராமத்தைச் சேந்தவர் கிருஷ்ணவேணி. கூலித் தொழிலை வாழ்வாதாரமாக்கி தன் மூன்று பெண் பிள்ளைகளை காப்பாற்றி வரும் அவர்தான், இன்று சாதனைப் பெண் ஆகியுள்ளார். ஏதேனும் ஓர் அரசு வேலைபெற்று, தன் பிள்ளைகளைக் காக்க வேண்டும் எனும் வைராக்கியத்தோடு மகளுடன் இணைந்து 10-ம் வகுப்புத் தேர்வெழுதி, தேர்ச்சியும் பெற்றிருக்கிறார்.

கிருஷ்ணவேணிக்கு வாழ்த்துகள் சொல்லிப் பேசினோம். ``எனக்கு அம்மா வீடு, கீழ்மலையனூர். 16 வருடங்களுக்கு முன், சென்னையைச் சேர்ந்த மோகன் என்பவருடன் திருமணம் ஆனது. மூன்று பெண் பிள்ளைகள். மூன்றாவது பிள்ளையும் பெண் என்று சொல்லி, அவர் வேறு துணையைத் தேடிக்கொண்டு எங்களை விட்டுவிட்டுப் போய்விட்டார். அதிலிருந்து, என் பிள்ளைகளை வைத்துக் கொண்டு என் அம்மா வீட்டில்தான் இருந்து வருகிறேன். தினமும் கூலி வேலைக்குச் சென்றுதான் குடும்பத்தை பார்த்து வருகிறேன். சில நாள்களில் அந்த வேலையும் இருக்காது.

மகள் கவிதாவுடன் படிக்கு கிருஷ்ணவேணி

வயல் வேலை, செங்கல் சூளை வேலை என எது கிடைத்தாலும் போய்விடுவேன். ஒருநாளைக்கு 100 - 150 ரூபாய் என்பதுதான் என்னுடைய சராசரி வருமானம்.  உடன் பிறந்தவர்கள் யாரும் கிடையாது. என் அம்மா உடல்நலம் முடியாதவர். அம்மாவும், அப்பாவும் ஆடுகளை பார்த்துக்கொண்டு அவர்களால் முடிந்த உதவியைச் செய்வார்கள். கூலி வேலையை நம்பிக் குடும்பத்தைப் பார்த்துக்கொண்டு, பிள்ளைகளுக்கு நோட்டு, பேனா வாங்கிக் கொடுத்து, படிக்க வைப்பது என்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் 8-ம் வகுப்பு வரையில் படித்திருந்தேன். அதற்குப் பின்னர் படிக்கும் வாய்ப்பு இல்லை.

என் குடும்பச் சூழலால், ஏதாவதொரு அரசு வேலை வழங்கும்படி பல அதிகாரிகளிடம் மனு கொடுத்துப் பார்த்தேன். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. அப்போதுதான் 10-ம் வகுப்புத் தேர்ச்சி என்பதன் அவசியத்தைப் புரிந்துகொண்டேன். என் மூத்த மக்கள் கவிதாவும், அருகிலுள்ள தாராபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் சென்ற வருடம் 10-ம் வகுப்பு படித்தாள். சரி, அவளுடன் சேர்ந்து நாமும் 10-வது படிக்கலாம் என முடிவு செய்து, திண்டிவனம் - முருகம்பாக்கம் அரசுப் பள்ளியில் விண்ணப்பித்தேன். அதிலிருந்து என் மகளுடன் சேர்ந்து வீட்டில் படிக்க ஆரம்பித்தேன். காலையில், கவிதா பள்ளிக்கூடம் போய்விடுவாள். எனக்கும் காலையில் படிக்கும் வாய்ப்பு இருக்காது. ஏனெனில், தினமும் கூலி வேலைக்குப் போய்விடுவேன்.

பிள்ளைகளுடன் கிருஷ்ணவேணி.

மாலையில் பாப்பா வீட்டிற்கு வந்ததும், பள்ளியில் சொல்லி கொடுத்ததையும், எனக்குத் தெரியாததை சொல்லித் தருவாள். குறிப்பாக, ஆங்கிலம், கணிதம். நான் படித்ததை அவளிடம் சொல்லுவேன். அவள் படித்ததை என்னிடம் சொல்லுவாள். இப்படித்தான் நாங்கள் படித்தோம். தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்த போது, இருவரும் தேர்ச்சி என்று முடிவு வந்தது. நான் 206 மார்க் எடுத்திருந்தேன். கவிதா 296 மார்க் எடுத்திருந்தாள்.

கவிதாவுக்கு இதயம் சம்பந்தமான பிரச்னை இருக்கிறது. அதற்காக ஒலக்கூர் அரசு மருத்துவமனையில் 21 நாளுக்கு ஒருமுறை சிகிச்சை எடுத்து வருகிறோம். சிகிச்சை எடுக்க வேண்டும், மூன்று பிள்ளைகளைப் பார்க்கவேண்டும் என... பல கஷ்டங்கள்.

என் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் படித்தாலும், வகுப்புகளுக்கு ஏற்ப நோட்டு, பேனா வாங்கிக் கொடுத்து மேற்கொண்டு படிக்க வைப்பது பெரும்பாடாக இருக்கிறது. எனவே, அரசாங்கம் எதாவது ஒரு வேலைவாய்ப்பை கொடுத்து உதவினால் என் பிள்ளைகளை காப்பாற்றுவதற்கு உதவியாக இருக்கும்.

நாங்கள், பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். எங்கள் சமூகத்தில் பெரும்பாலானோர் குடும்பச் சூழலால் பள்ளி படிப்பையே நிறைவு செய்ய முடிவதில்லை. அதிலும், இடைநின்றவர்கள் பள்ளிப் படிப்பை தொடர்வதே இல்லை. அரசு என்னை போன்றோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி உதவுவது என்பது, என் சமூகத்தில் பலரும் நம்பிக்கையோடு படிப்பைத் தேடி வருவதற்கு வாய்ப்பாக அமையும்" என்றார் நேர்மறையாக.

தமிழக அரசு

மாணவி கவிதா பேசுகையில், ``என் அம்மா 10-வது தேர்வு எழுதியது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அம்மா, பரீட்சையில் பாஸ் பண்ணியதை ஊரில் எல்லோரும் மிகவும் பெருமையாகப் பேசினார்கள். அம்மா ஆசைப்பட்டு படித்ததை போலவே, அரசு எதாவது வேலைவாய்ப்பு வழங்கினால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்" என்றார்.

ஈன்றெடுத்த தன் தாயை சான்றோர் எனக் கேட்ட மகள்கள்! 



from Latest news https://ift.tt/UVRO96N

Post a Comment

0 Comments