``2026-ல் நாம் ஆட்சியில் அமரும்போது மது ஒழிக்கப்படும்” - சரத்குமார் நம்பிக்கை

சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழுக்கூட்டத்தின் தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர், "நம் இயக்கம் எதை நோக்கி செல்ல வேண்டும், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், உங்கள் தலைவர், உங்கள் நாட்டாமை முதல்வராக அரியணை ஏற வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவித்துள்ளனர். அது சாத்தியமா என்பது 2026 -ஆம் ஆண்டு தேர்தலின்போது தெரிய வரும்.

சரத்குமார்

அதற்கெல்லாம் முயற்சி இருக்க வேண்டும், நேர்மை இருக்க வேண்டும். உடல் வலிமை, மனவலிமை இருக்க வேண்டும்.

இதே இடத்தில் 2016-ல் ஜல்லிக்கட்டுக்காக உண்ணாவிரம் இருந்தோம். அதன் விளைவாகவே ஜல்லிக்கட்டை எக்காரணத்துக்காகவும் தடை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

நாம் போராட்டம் எதற்காக நடத்துகிறோம் என்பதை உணர்ந்து நடத்தினால் வெற்றி கிடைக்கும் என்பதற்காக இதை குறிப்பிடுகிறேன்.

இன்று விஞ்ஞான வளர்ச்சியில் ஊடகத்தின் பங்கு வளர்ந்துவிட்டது. இங்கு நடப்பதை உடனே அமெரிக்காவில் மொபைலில் பார்க்க முடியும். மொபைல் போன் வைத்துள்ளவர்களெல்லாம் பத்திரிகையாளராகி விட்டார்கள். நானும் சைக்கிளில் சென்று பேப்பர் போட்டு, பத்திரிகையாளராகி இந்த இடத்துக்கு வந்துள்ளேன். உழைப்பு, திறமை, உண்மை இருந்ததால்தான் இந்த இடத்துக்கு வந்தேன்.

சரத்குமார்

பல்வேறு போதைகள் இன்று பரிணமித்துள்ளது. புகையிலை, சிகரெட், பான்மசாலா, கஞ்சா, போதை மாத்திரை, போதைப் பவுடர், ஊசி போன்ற பலவகையான போதைகள் உருவெடுத்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் பணியும் நடைபெற்று வருதை இல்லையென்று சொல்லவில்லை.

2025-ல் இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக, மனித வளம் அதிகமுள்ள நாடாக நம் நாடு இருக்கும். இதன் மூலம் இந்தியா வல்லரசு நாடாகி விடும் என்பதை அறிந்து இளைஞர்களின் மூளையை மழுங்கடிக்க வெளிநாடுகள் செய்யும் சதிதான் இது.

எனக்கு 69 வயதாகிறது. இன்றும் 25 வயது இளைஞனாகத்தான் இருக்கிறேன். இன்னும் 150 வயது வரை இருப்பேன். வாழ்வதற்கான வித்தையை கற்றுள்ளேன், அந்த ரகசியத்தை 2026 -ஆம் ஆண்டு அரியணையில் என்னை ஏற்றும்போது சொல்வேன்.

கலந்துகொண்ட தொண்டர்கள்

போதை நம்மை அழித்துவிடும். மன உளைச்சலுக்காக சிலர் குடிக்கின்றனர், அது மன உளைச்சலை இரட்டிப்பாக்கிவிடும். எத்தனை மதுக்கடைகள் இருந்தாலும் தனிமனித ஒழுக்கத்துடன் மதுவை புறக்கணித்தால் போதும். தானாகவே மதுக்கடைகள் மூடப்பட்டுவிடும்.

பள்ளி சிறுவர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதை நானே பார்த்துள்ளேன், அவர்களை கண்காணிப்பதுடன் போதை பொருள்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்போது ஐ.டி வந்ததோ, விஞ்ஞான வளர்ச்சி வந்ததோ, கம்யூனிகேஷன் அதிகரித்ததோ, மொபைல் போன் எப்போது வந்ததோ அப்போதே உலகத்தில் நடக்கின்ற அனைத்தையும் கற்றுக்கொள்ளும் சூழல் ஏற்பட்டுவிட்டது. எதை கற்றுக்கொள்ள வேண்டும், எதை படித்துவிட்டு மறந்துவிட வேண்டும் என்பது தெரியாமல் இருக்கிறார்கள். இங்கு எல்லாமே மாறிவிட்டது. டிரஸ்ஸிங் ஸ்டைலே மாறிவிட்டது. இனி இங்கு நைட்டிதான் நேஷனல் டிரஸ், முன்பு நைட்டி போட்டுக்கொண்டு பெண்கள் வெளியே வரமாட்டார்கள். இப்ப அது சௌகரியமாக இருக்கிறது என்கிறார்கள்.

மதுக்கடையை மூடு என்று ஆர்பாட்டம் செய்வதால் பலனில்லை. கடைக்கு போகாமலிருந்தாலே போதும். என் தந்தை அதிகமாக சிகரெட் பிடிப்பார். இருநூறு ரூபாய் கடன் கேட்க உறவினர் வீட்டுக்கு சென்று கடும் குளிரில் நீண்ட நேரம் காத்திருந்தபோதுதான், சிகரெட் வாங்கும் பணத்தை சேர்த்து வைத்திருந்தாலே இப்படி கடனுக்காக காத்திருக்கும் அவசியம் வந்திருக்காதே என்று உணர்ந்து சிகரெட் பழக்கத்தை விட்டார்.

சரத்குமார்

தமிழக மக்களிடம் பொருளாதர நிலை உயர்ந்துள்ளது. சிறந்த கல்வி தமிழகத்தில்தான் கிடைக்கிறது. ஆனால், இது அனைத்தையும் மது அழிக்கிறது. மது மூலம் 40 ஆயிரம் கோடி வருமானம் கிடைப்பதாக சொல்கிறது அரசு. ஆனால், மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த வருமானத்தை வேறு எதில் பெறலாம் என்பதை அரசு யோசிக்க வேண்டும். தமிழகத்தில் மக்கள் இருக்க வேண்டும், அறிவாளிகள் இருக்க வேண்டும், இளைஞர்கள் இருக்க வேண்டும், போதைக்கு அடிமையாகி விட்டால் யாரும் இருக்க மாட்டார்களே என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.

மதுவை ஒழிப்பதில் உறுதியாக இருங்கள். மதுவுக்கு எதிராக நாங்கள் இறுதிவரை போராடுவோம். 2026-ல் நாம் ஆட்சியில் அமரும்போது மது ஒழிக்கப்படும். தேவையற்ற இலவசங்களை ஒழிக்க வேண்டும். அதுபோல் ஏழைகளின் சின்னம் என்று விளம்பரம் செய்கிறார்கள். அதை ஒழிக்க வேண்டும், உங்களுக்கு ஓட்டுப்போட என்றைக்கும் ஏழைகள் இருக்க வேண்டுமா?

குஜராத், மிசோரம், பீகார் என மது இல்லாத மாநிலங்கள் இந்தியாவில் உள்ளது, அம்மாநிலங்களில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதை முன்மாதிரியாக கொண்டு தமிழகத்திலும் மது விலக்கை அமுல்படுத்த முன்வரவேண்டும்.

சரத்குமார்

அரசியலில் எனக்கு எவ்வளவு அனுபவம் உண்டு என்பது உங்களுக்கு தெரியும். 1996-ல் தி.மு.க-வில் 25 சீட் வாங்கியிருப்பேன். நம் தோழர்கள் அமைச்சராகி இருப்பார்கள். ஆனால், அப்படி செய்யவில்லை, அன்றிருந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக உச்ச நடிகராக பீக்கில் இருக்கும்போது எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆதரவு அளித்ததால் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. எல்லா கட்சியிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். யாரும் என்னை தப்பாக சொல்ல மாட்டார்கள். அத்வானி முதல் லாலு பிரசாத் யாதவ் வரை என்னுடன் பழகியுள்ளார்கள். யாரிடமும் எந்த உதவியும் நான் கேட்டதில்லை.

தி.மு.கவுக்கு பத்து வருடம் உழைத்ததற்கு கருணாநிதி ராஜ்யசபா உறுப்பினராக்கி மரியாதை அளித்தார். ஆனால், அ.தி.மு.க-வுக்கு பத்து வருடம் உழைத்ததற்கு ஒரு மரியாதையும் செய்யவில்லை. கருவேப்பிலையாக பயன்படுத்திக்கொண்டனர். அதைப்பற்றி நான் கவலைப் படவில்லை.

மதுவை தவிர்ப்போம் என்பதை முன்னெடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ கட்சியில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்" என்று பேசினார்.



from Latest news https://ift.tt/vwKEf9y

Post a Comment

0 Comments