நேற்றைய தினம் நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு, முக்காணியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. திருச்செந்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள ஆச்சிமடம் என்ற இடத்தில் பேருந்து சென்றபோது, எதிரே வந்த வேன்மீது மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிலர் குடும்பத்துடன் அந்த வேனில் வந்திருக்கின்றனர். திருச்செந்தூருக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு, அங்கிருந்து விருதுநகரில் நடக்கவிருக்கும் ஒரு கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து நடந்திருக்கிறது.
நெல்லையை அடுத்த ஆச்சிமடம் பகுதியில் பேருந்து வந்தபோது அதன் முன்பக்க டயர் எதிர்பாராதவகையில் வெடித்திருக்கிறது. அதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே வந்த வேன்மீது நேருக்கு நேராக மோதியிருக்கிறது. அதில் வேனின் முன்பக்கம் முழுமையாகச் சேதமடைந்திருக்கிறது.
வேன்மீது மோதிய பேருந்து, நிலைகுலைந்து அருகிலிருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது. இந்த விபத்து காரணமாக இரு வாகனங்களிலும் பயணம் செய்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்த பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு உதவிகளைச் செய்திருக்கின்றனர்.
ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். வேன் டிரைவரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனிச்செல்வம் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பேருந்து, வேனில் பயணம் செய்த 29 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிறிய காயம் ஏற்பட்டவர்கள் சிகிச்சைக்குப் பின்னர் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக நெல்லை - திருச்செந்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து தொடர்பாக சிவந்திபட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
from Latest news https://ift.tt/cDdvMto
0 Comments