நேரு குடும்பத்தினர் தான் காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும்... காங்கிரஸை வழிநடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் விரும்புகிறார்கள். ஆகையால்தான், சீதாராம் கேசரியை தலைவர் பதவியிலிருந்து இறக்கிவிட்டு, சோனியா காந்தியைத் தலைவராகக் கொண்டுவந்தார்கள். அதன் பிறகுதான், காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்தது. சோனியா காந்தி தலைமையில்தான், 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி.
ஆனால், வயோதிகம் காரணமாக கட்சி நடவடிக்கைகளை சோனியா காந்தி குறைத்துக்கொண்டதாலும், தலைவர் பதவியை ஏற்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டில் ராகுல் காந்தி உறுதியாக இருந்ததாலும், மல்லிகார்ஜுன கார்கே தலைவராகியிருக்கிறார். அவர் தலைவரான பிறகு, இமாச்சலப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, தற்போது கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.
ஆனாலும், இந்திய அரசியலில் பிரதமர் மோடிக்கு நிகரான தலைவர்களே இல்லை என்று பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள். எதிர்க் கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்பதும் கேள்வியாக எழுந்திருக்கிறது. பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்திருந்தாலும், பிரதமர் வேட்பாளர் ஆவதற்கு அவருக்கு ஆர்வம் இல்லை என்கிறார்கள். மேலும், நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. அதனால், தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், நேரு குடும்பத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான பிரியங்கா காந்தியை ‘பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை சமூக சேவகரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் எழுப்பியிருக்கிறார்.
ஆச்சார்யா பிரமோத், “பிரதமர் மோடியை வீழ்த்தக்கூடிய ஆளுமையும், மக்களை ஈர்க்கக்கூடிய வசீகரமும் கொண்ட ஒரே தலைவர் பிரியங்கா காந்திதான். மக்களின் ஏற்பும், பிரபலமும், நம்பகத்தன்மையும் கொண்ட பிரியங்காவை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும். எதிர்க் கட்சிகளில் பிரியங்காவைவிட சக்தி மிகுந்த தலைவர்கள் வேறு யாரும் இல்லை. எதிர்க் கட்சிகள் ஓரணியில் இணைந்து பிரியங்காவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஓர் ஆன்மிகவாதி ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம். இவர், 2014-ம் ஆண்டும், 2019-ம் ஆண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். சமீபத்தில் இவர், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமித் ஷா எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்” என்று சொல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
பிரியாங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்கிற கருத்தை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான சுகதா ராய் நிராகரித்திருக்கிறார். “இத்தகைய ஒரு கருத்தை முன்வைக்க வேண்டிய தேவை இல்லை. இது குழப்பத்தையே உருவாக்கும். ராகுல் காந்தி என்னுடைய சக எம்.பி-யாக இருந்தவர். ஆனால், பிரியாங்கா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர் எம்.பி-யாகவோ, எம்.எல்.ஏ-வாகவோ இருந்ததில்லை.
பிரியங்காவைப் பற்றி எதுவுமே தெரியாது. அவர் இந்திரா காந்தியைப் போன்ற தோற்றம் கொண்டவர் என்று மக்கள் சொல்கிறார்கள். இமாச்சலப்பிரதேசத்திலும் கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற அவர் உதவியிருக்கிறார். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் எந்தத் தாக்கத்தையும் அவர் ஏற்படுத்தவில்லை” என்கிறார் சுகதா ராய்.
திருமணமாகி, கணவர், குழந்தைகள், குடும்பம் என்று ஒதுங்கி, அரசியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்துவந்த பிரியங்கா காந்தி 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசப் பொறுப்பாளராக காங்கிரஸால் நியமிக்கப்பட்டார். பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில், கடுமையாக உழைத்தும்கூட, உத்தரப்பிரதேசத்தில் அவரால் காங்கிரஸுக்கு வெற்றியைப் பெற்றுத்தர முடியவில்லை. ஆனாலும், சோர்ந்துவிடாமல் அரசியலில் தீவிரமாக இயங்கிவருகிறார்.
உத்தரப்பிரதேசத்திலுள்ள ஹத்ராஸில் பட்டியலின பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது, ராகுல் காந்தியுடன் ஹத்ராஸ் சென்று, நீதி கேட்டுப் போராடினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கடந்த ஆண்டு இமாச்சலப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்தார் ராகுல் காந்தி. அதனால், இந்த மாநிலங்களில் அவர் பிரசாரத்துக்கு தீவிரமாக செல்லவில்லை.
இரு மாநிலங்களிலும் பிரியங்கா காந்திதான் காங்கிரஸ் கட்சியின் ஸ்டார் பேச்சாளராக வலம்வந்தார். இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. அந்த வெற்றியில் பிரியங்கா காந்தியின் பங்கு முக்கியமானது. தற்போது, கர்நாடகா சட்டமன்றத் தேர்தலின்போது தீவிரமாக பிரசாரம் செய்தார் பிரியங்கா.
தொடர்ச்சியாக அவர் இயங்கினாலும், காங்கிரஸின் தேசிய முகமாக அவர் முன்னிறுத்தப்படவில்லை. பிரியங்கா காந்தி போன்ற ஒருவரை தேசிய அளவிலான தலைவராக உயர்த்துவதற்கான தேவை இருந்தும்கூட, அதற்கான நகர்வுகள் காங்கிரஸ் கட்சிக்குள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை, பிரியங்கா காந்தியை கொண்டு வந்தால், பிரதமர் வேட்பாளர் கனவில் இருக்கும் சில கூட்டணி/மாநில கட்சிகள் இப்போதே கூட்டணியை விட்டு விலகும் நிலை வரலாம் என்பதும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். என்றாலும், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் தருணத்தில், ராகுல் காந்தி வழக்கில், சாதகமான உத்தரவு வராமல் போனால், பிரியங்கா காந்தியை முன்னிறுத்தும் முன்னெடுப்புகளை காங்கிரஸ் தலைமை மேற்கொள்ளக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
from Tamilnadu News https://ift.tt/v1Z8xC0
0 Comments