திருச்சி: பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட வாலிபர் - குதிரை ரேஸ் முன்பகை காரணமா?!

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயில் டாக்கர்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (28). இவர் குதிரை ரேஸ் வண்டியை வைத்து பந்தயத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டவர். நேற்று மதியம் சண்முகம் சாப்பிட்டுவிட்டு பஞ்சவர்ண சுவாமி கோயில் மார்கெட் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த நான்கு மர்மநபர்கள் சண்முகத்தை வழிமறித்து கத்தியை எடுத்துள்ளர். அதனைப்பார்த்து சண்முகம் ஓட்டமெடுத்து அங்குள்ள டீக்கடைக்குள் சென்று தஞ்சம் புகுந்துள்ளார்.

க்ரைம் - மரணம்

இருந்தபோதிலும், அந்த மர்மநபர்கள் நால்வரும் சண்முகத்தை ஓட ஓட விரட்டிச் சென்று டீக்கடையில் வைத்தே துடிக்கத் துடிக்க வெட்டிக் கொலை செய்தனர். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப்பார்த்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் அலறியபடி ஓட்டம் பிடித்தனர்.

தகவலறிந்த உறையூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலைச் சம்பவம் குறித்து உறையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அன்பு, ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதா லெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். குதிரை ரேஸ் பந்தயத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக சண்முகம் கொலை செய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணைக்குப் பின் சொல்லப்படுகிறது.

கொலை

கொலைக்கான காரணம் குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். “சண்முகம் 3 குதிரைகளை வைத்து குதிரை வண்டி ஓட்டி வந்துள்ளார். அவ்வப்போது குதிரை ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டு வந்துள்ளார். மேலும், குதிரை ரேஸ் சம்பந்தமான வீடியோக்களை பதிவேற்றும் வகையில் சண்முகம் யூ-டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். அந்தவகையில், சமீபத்தில் திருவெறும்பூர் அருகே குதிரை ரேஸின் போது சண்முகத்திற்கும் சிலருக்கும் இடையே பிரச்னை நடந்திருக்கிறது. அந்தப் பகையின் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்த 3 சிசிடிவி கேமராக்களும் செயல்படாத நிலையில் இருந்துள்ளன. சம்பவ இடத்திற்கு அருகே வேறு ஏதாவது சிசிடிவி கேமராக்களில் கொலையாளிகள் முகம் பதிந்திருக்கிறதா என கண்டறிந்து வருகிறோம். அதன்பிறகு தான் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்தான தகவல்கள் தெரியவரும்” என்றனர்.



from Latest news https://ift.tt/6a3wnqP

Post a Comment

0 Comments