நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய அய்யம்மாள் என்பவர் வீடு திரும்பும் வழியில் கணவனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொலையான அய்யம்மாளின் கணவன் பாலசுப்பிரமணியன் என்ற அக்பர் இப்ராஹிம். இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தில் வசித்தனர்.

பாலசுப்பிரமணியன் அய்யம்மாள் தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டதால் சில மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அய்யம்மாளுடன் இரு குழந்தைகளும் பாலசுப்பிரமணியனுடன் ஒரு குழந்தையும் வசித்து வருவதாகத் தெரிகிறது. 45 வயதான அய்யம்மாள். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்ததால் அருகில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குழந்தைகளுடன் தங்கியிருந்துள்ளார்.
வழக்கம் போல பணியை முடித்துக் கொண்டு அய்யம்மாள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரை வழிமறித்த கணவர் பாலசுப்பிரமணியன் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததை சாலையில் சென்றவர்கள் பார்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், பாலசுப்பிரமணியன் கத்தியால் மனைவியைக் குத்தியுள்ளார். அதில் நிலை தடுமாறி கீழே சரிந்த அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

கத்தியால் குத்துப்பட்ட நிலையில், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட அய்யாம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பாலசுப்பிரமணியனை பிடிக்க முயன்ற நிலையில் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
சம்பவ இடத்துக்கு நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்துவிட்டு தப்பியோடிய பாலசுப்பிரமணியனைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், அவர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

கொலை செய்த பாலசுப்பிரமணியன் சரணடைந்த தகவல் கிடைத்ததும் அவரை அழைத்து வந்த பாளையங்கோட்டை போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர் ஒருவர் பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
from Latest news https://ift.tt/dUXqxNg
0 Comments