``ஆவினுக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை..!"- அமுல் நிறுவனம் விளக்கம்

தமிழ்நாட்டில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ``அமுல் நிறுவனம், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியிருக்கிறது.

ஆவின்

கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டிருப்பது குறித்து அரசின் கவனத்துக்கு வந்திருக்கிறது. மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் செழிக்க பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்துவரும் நிலையில், அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், ‘வெண்மைப் புரட்சி’ என்ற கொள்கைக்கு எதிராக அமைகிறது.

எனவே, இந்த விவகாரத்தில், உள்துறை அமைச்சர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்திட வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையில், அமுல் நிறுவனத்தின் தமிழ்நாடு ஒப்பந்ததாரர்கள் விளக்கமளித்திருக்கின்றனர்.

``ஆவின் நிறுவனத்தைவிட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாகக் கூறும் தகவல் பொய்யானது. ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்குக் கொள்முதல் விலையாக என்ன நிர்ணயம் செய்திருக்கிறதோ, அதே விலைக்கு மட்டுமே அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்யும்.

அமுல்

தமிழ்நாட்டில் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிவரும் நிலையில், 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமிருக்கும் பால் தனியார் நிறுவனங்கள் மூலம் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் திருவிழாக் காலங்களில் அதிக தொகைக்கும், மற்ற காலங்களில் குறைவான விலைக்கும் மட்டுமே கொள்முதல் செய்கின்றன. இதனால் விவசாயிகள் பாதிப்புக்களாகிவருகின்றனர். இதைத் தவிர்க்கும் விதத்தில் மட்டுமே அமுல் செயல்படும். ஆவின் நிறுவனத்துக்கு எதிராகச் செயல்படாது.

ஏற்கெனவே ஆவின் நிறுவனத்துக்குப் பால் வழங்கிவரும் நபர்கள், அமுல் நிறுவனத்துக்குப் பால் வழங்க வேண்டுமென்றால் ஆவின் நிறுவனத்திலிருந்து NOC சான்றிதழ் பெற்றுவர வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கின்றன. எனவே, ஆவின் நிறுவனத்துக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை. ஆவின் நிறுவனத்தில் பால் முகவர்களாக இருக்கும் யாரிடமும் அமுல் நிறுவனத்துக்குப் பால் வழங்க வேண்டும் எனப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை" என அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.



from Latest news https://ift.tt/vxNLBg2

Post a Comment

0 Comments