தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்புக்கு எதிர்ப்பு: காங்கிரஸார் நடத்திய நூதன போராட்டம்!

தமிழகத்தில் நதிநீர்ப் பிரச்னை இல்லாத ஆறுகளில் முக்கியமானது, தாமிரபரணி. மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் பூங்குளம் என்ற இடத்தில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துகுடி மாவட்டங்கள் வழியாக புன்னக்காயல் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. மக்கள் தாகம் தீர்க்கவும் விவசாயத் தேவைக்கும் பயன்படும் இந்த ஆறு மாசடைந்து வருவதாக புகார் உள்ளது.

ஆற்றுக்குள் திருப்பப்படும் கழிவுநீர்

தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகரின் சாக்கடை முழுவதும் கலந்துவந்ததைத் தடுத்து ஆற்றைப் பாதுகாக்கும் நோக்கில் பாதாளச் சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளாகி விட்டபோதிலும் இன்னும் மாநகரம் முழுவதும் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அதனால் மாநகரின் பெரும்பாலான கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஆற்றில் கலக்கும் அவலம் உள்ளது.

தாமிரபரணி ஆறு நெல்லை நகருக்குள் நுழையும் இடம் முதல், நகரைக் கடக்கும் பகுதி வரையிலும் சுமார் 25 இடங்களில் கழிவுநீர் நேரடியாக ஆற்றுக்குள் கலப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதன்படி, நிமிடத்துக்கு சுமார் 10 லட்சம் லிட்டர் கழிவுநீர் ஆற்றுக்குள் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆற்றில் கலக்கும் சாக்கடை

மலையில் உற்பத்தியாகி தரையில் தலைகாட்டும் பாபநாசத்தில் இருந்து, கடலில் கலக்கும் புன்னக்காயல் வரையிலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 128 கி.மீ தூரம் பயணிக்கும் இந்த ஆற்றில் 600-க்கும் அதிகமான இடங்களில் கழிவுநீர் கலக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் சாக்கடைக்குள் அமர்ந்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

காங்கிரஸார் போராட்டம்

இது குறித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவரான சங்கரபாண்டியன் கூறுகையில், ”பாதாளச் சாக்கடை கழிவு நீர் நேரடியாக நெல்லை கால்வாய், பாளையங் கால்வாய்களின் வழியாக ஆற்றுக்குள் கலக்கிறது. அதனால் தாமிரபரணி ஆறு மாசடைகிறது. அந்தத் தண்ணீரை குடிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி நதியைப் பாதுகாக்க வேண்டும். தற்போதைய சூழலில் இந்த நீரில் குளிப்பவர்களுக்குக் கூட தோல்நோய்கள் ஏற்படுகின்றன. வருங்காலச் சந்ததிக்கு இந்த ஆற்றைப் பாதுகாத்துக் கொடுக்க வேண்டும் என்கிற அக்கறையிலேயே இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். ஆற்றின் தற்போதைய நிலையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதே எங்களின் நோக்கம்” என்றார்.

தாமிரபரணி ஆற்றுக்குள் செல்லும் கழிவுநீர்

இது குறித்து நெல்லை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “பாதாளச் சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் வகையில் அதற்கான பணிகளை வேகப்படுத்தியுள்ளோம். விரைவில் அந்தப் பணிகள் முழுமை பெற்றுவிடும். பாதாளச் சாக்கடை திட்டம் இல்லாத இடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை நேரடியாக தாமிரபரணி ஆற்றுக்குள் செல்லவிடாமல் தடுத்து சுத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்கிறார்கள்.



from Tamilnadu News https://ift.tt/lSTYcZ1

Post a Comment

0 Comments