குழந்தைகளுக்கான ஹெல்த் டிரிங்ஸில் அதிகளவு சர்க்கரைதான் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதனை நீண்ட நாள்களுக்கு உட்கொள்ளும்போது, நாளடைவில் குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகளுக்கு உணவை ஊட்ட பெற்றோர் படாதபாடு பட வேண்டியுள்ளது. அதுவே ஹெல்த் ட்ரிங்ஸ் என்றால், குழந்தைகளே கேட்டு வாங்கிக் குடித்துவிடுவார்கள். மேலும் அந்தப் பவுடரை அப்படியே உண்ணும் பழக்கமும் பல குழந்தைகளிடம் காணப்படுகிறது. அதை உட்கொள்ளும்போது மீண்டும் மீண்டும் உண்ண வேண்டும் என்ற எண்ணத்தை அது உருவாக்கிவிடுகிறது.
ஹெல்த் டிரிங்ஸில் சர்க்கரையின் அளவுதான் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுவது குறித்தும், அதன் விளைவுகள், அதற்கு மாற்று குறித்தும் உணவியல் நிபுணர் சங்கீதா ஜெயக்குமாரிடம் பேசினோம்...
``ஹெல்த் டிரிங்ஸ் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டது என்று நம்பவைக்கப்பட்டுள்ளது. இவற்றில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இவற்றை குழந்தைகள் நீண்ட நாள்களாக உட்கொள்ளும்போது, நாளடைவில் அவர்களுக்கு மெட்டாபாலிக் சிண்ட்ரோம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
மெட்டாபாலிக் சிண்ட்ரோம் பிரச்னையால் உடல் பருமன், கொலஸ்ட்ரால் பிரச்னை ஏற்படும். உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகும் பட்சத்தில் உடற் பருமன், இளமைக்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகம். முடிந்தவரை குழந்தைகளுக்கு இவற்றை தவிர்ப்பது நல்லது. வெறும் பால் அருந்த மறுக்கும் குழந்தைகளுக்கு ஹெல்த் ட்ரிங்ஸ் தவிர்த்து, இயற்கையாகக் கிடைக்கும் சுவையூட்டிகளைப் பாலில் கலந்து கொடுக்கலாம். குறைந்தபட்சம், இரண்டு நாள்களுக்கு ஒருமுறை ஹெல்த் ட்ரிங்ஸ் என்றாவது குறைத்துக்கொள்ளலாம்.
ஹெல்த் டிரிங்ஸில் இருக்கும் சர்க்கரை மற்றும் சுவையூட்டி, மீண்டும் மீண்டும் உண்ண வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். பொதுவாக சாக்லேட்களை அதிகமாக உட்கொள்ள இயலாது. அவை திகட்டும் தன்மையுடையது. ஆனால் சில ஹெல்த் பவுடர்கள் திகட்டாது. காரணம் அதில் சர்க்கரையுடன் மால்ட் மற்றும் கார்ன் ஸ்டார்ச் ஆகியவற்றை கலந்திருப்பார்கள்.
குழந்தைகள் மட்டுமல்ல, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சிலரும் ஹெல்த் ட்ரிங்ஸ் அருந்துவார்கள். அவர்கள் மருத்துவ ஆலோசனையின் கீழ் அதை அருந்த வேண்டும். காரணம், ஒருவரின் எலும்பு வலுவிழந்து இருக்கிறது என்றால், மருத்துவர் அவருக்கு கால்சியம் டிரிங்கை பரிந்துரைக்கும் முன், கொலஸ்ட்ரால், நீரிழிவு என அவருக்குப் பிற பிரச்னைகள் இருக்கிறதா என்று பரிசோதித்த பிறகே ஹெல்த் டிரிங்ஸை பரிந்துரைப்பார்.
கர்ப்பகாலத்தில் சிலர் மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஹெல்த் ட்ரிங்ஸ் அருந்துவதும் தவிர்க்கப்பட வேண்டும். அதில் இருக்கும் அதிகமான சர்க்கரை, சிலருக்கு கர்ப்பகாலத்தில் பாதக விளைவுகளை ஏற்படுத்தலாம்.
குழந்தைகள், கர்ப்பிணிகள் ஹெல்த் ட்ரிங்ஸுக்க்கு பதிலாக பாலில் நாட்டுச் சர்க்கரை கலந்து, கொஞ்சம் ஏலக்காய்ப் பொடித்துச் சேர்த்து அருந்தலாம். பிஸ்தா, பதாம், ஏலக்காய் இவற்றை வறுத்துப் பொடியாக்கி பாலுடன் கலந்து பருகலாம். அதுபோல பேரீச்சம்பழத்தை ஊறவைத்து பாலில் சேர்த்து அடித்துக் குடிப்பதும் சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். டேட்ஸ் சிரப்புகளை தவிர்த்துவிடவும்" என்றார்.
ஊட்டச்சத்து நிபுணர் கண்ணன் இது குறித்து, ``ஹெல்த் டிரிங்ஸில் ஃப்ரக்டோஸ் அளவுக்கதிகமாக இருப்பதால், இதை தொடர்ச்சியாக எடுப்பதனால் எதிர்காலத்தில் உடல் பருமன், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு ஆகியவை வர வாய்ப்பு உள்ளது. உடலுக்குத் தேவைப்படும் கலோரிகளில் ஃபரக்டோஸும் ஒன்று. அதன் அளவு ஒரு நாளுக்கு 10% இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற கலோரிகள் புரதச்சத்துகளிலிருந்து கிடைக்கும்படியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, எலக்ரோலைட், தாதுக்கள் ஆகியன சரிவிகிதத்தில் இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பெற்றோர்தான் ஏற்படுத்த வேண்டும். உணவுப் பொருள்களை கடைகளில் வாங்கும்போது அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்களின் அளவை பார்த்து வாங்க வேண்டும். செயற்கையாகத் தயாரிக்கப்படும் உணவுகளில் ஃப்ரக்டோஸ் அதிகமாக இருக்கும் என்பதால் தவிர்க்க வேண்டும்" என்றார்.
from Latest news https://ift.tt/94FUNi0
0 Comments