கொலையாளிகளிடையே போக்சோ வழக்குக்குப் பின் நெருக்கம்?! - அதிர வைக்கும் ஹோட்டல் அதிபர் கொலை வழக்கு

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் திரூரைச் சேர்ந்த சித்திக்(58) கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் பல மர்ம முடிச்சுகள் அவிழ வேண்டியது உள்ளது. சித்திக் கோழிக்கோடு மாங்காவு பகுதியில் சிக் பக் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வந்தார். கடந்த 18-ம் தேதி கோழிக்கோடு இரிஞ்ஞிப்பாலம் டீக்காஷா இன் என்ற தனியார் ஹோட்டலில் அவர் கொலைச் செய்யப்பட்டார். சித்திக்கின் ஓட்டலில் வேலை செய்த ஷிபிலி(22), அவருடைய தோழியான பர்ஹானா(18) ஆகியோர் இந்த கொலையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு உதவிய ஆஷிக் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சித்திக்கின் உடலை ட்ராவல் பேக்குகளில் அடைத்து அட்டப்பாடியில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சுமார் 50 அடி ஆழத்தில் உள்ள ஓடையின், பாறை இடுக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. சித்திக்கின் ஓட்டலில் கடந்த 3-ம் தேதி வேலைக்குச் சேர்ந்த ஷிபிலி-யின் நடவடிக்கை சரியில்லாததால் 18-ம் தேதி வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அன்று மதியமே சித்திக் டிக்காசா இன் ஹோட்டலில் 2 ரூம் போட்டதுடன், ஒரு ரூமில் ஷிபிலி மற்றும் பர்ஹானாவை தங்க வைத்தார்.

கொலை செய்யப்பட்ட சித்திக்

ஹோட்டலில் சித்திக்குக்கும், ஷிபிலி-க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த மோதலில் சித்திக் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதே சமயம் ஷிபிலி, பர்ஹானா ஆகியோருடன் சித்திக்குக்கும் நட்பு ஏற்பட்டது எப்படி? அவர்களுக்கு ஏன் ரூம் எடுத்து கொடுத்து தங்க வைத்தார்? அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட என்ன காரணம் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை இன்னும் கிடைக்க வில்லை. அதே சமயம் பர்ஹானாவின் தாய் பாத்திமாவுக்கும் சித்திக்குக்கும் ஏற்கனவே நட்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. வேலையை விட்டு நீக்கிய கோபத்தில் சிகிக்கை ஷிபிலி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, 2018-ம் ஆண்டு தனக்கு 14 வயது இருக்கும் சமயத்தில் ஷிபிலி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஷிபிலி மீது பர்ஹானா 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாலக்காடு செறுப்புழச்சேரி காவல் நிலையத்தில் போக்சோ புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் ஷிபிலி சில நாள்கள் சிறையில் இருந்துள்ளார். அதன் பிறகு ஷிபிலியும் பர்ஹானாவும் எப்படி ஒன்று சேர்ந்தனர் என்பதையும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷிபிலி, பர்ஹானா ஆகியோரிடம் இன்று நடைபெறும் விசாரணையில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சித்திக்கின் உடல் மீட்கப்பட்ட ட்ராவல்.பேக்

இந்த நிலையில் சித்திக்கை கொலை செய்தது குறித்து அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து சில தகவல்கள் போலீஸுக்கு கிடைத்துள்ளன. சித்திக்கை கொலை செய்தபிறகு உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த எலக்ட்ரிக் கட்டர், ட்ராவல் பேக் ஆகியவை பின்னர் எடுத்து வந்துள்ளனர். எலக்ட்ரிக் கட்டர் சத்தம் கேட்காமல் இருக்க அறையில் டி.வி சத்தத்தை அதிகமாக்கி வைத்துள்ளனர். அறையை காலி செய்யும் சமயத்தில் ரத்தகறை இருந்ததை ஊழியர்கள் பார்த்துள்ளனர். அதுபற்றி கேட்டதற்கு பர்ஹானாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டதாக சொல்லி சமாளித்துள்ளனர். இந்த தகவல்களை ஹோட்டல் ஊழியர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.



from Latest news https://ift.tt/sgWNlw2

Post a Comment

0 Comments