சிக்னல் `கட்’... தமிழக வன எல்லையில் அரிசிக் கொம்பன் யானை!

கேரள மாநிலத்தில் யானைகள் அடிக்கடி வன எல்லையில் உள்ள கிராமங்களில் புகுவதும், வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் விடுவதும் வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் கேரள மக்களால் அரிக் கொம்பன் என அழைக்கப்பட்ட அரிசிக் கொம்பன் யானை இடுக்கி மாவட்டத்தில் சின்னக்கானல், சாந்தாம்பாறை கிராமங்களில் ஊருக்குள் புகுந்து சுமார் 8 பேரின் உயிரை காவு வாங்கியது. ஊருக்குள் புகுந்து வீடுகளில் அரிசிகளை சாப்பிட்டுவிட்டுச் செல்வதால் அரிசிக் கொம்பன் என அந்த யானைக்கு பெயர் வைத்தனர்.

பிடிபட்ட அரிசிக் கொம்பன் யானை

மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அரிசிக் கொம்பன் யானையை பாலக்காடு பரம்பிகுளம் புலிகள் காப்பகத்தில்விட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகப் பகுதியில் யானை விடப்பட்டுள்ளது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டபிறகு அரிசிக் கொம்பன் யானை கழுத்தில் சேட்டிலைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு தமிழக-கேரள எல்லைப் பகுதியில் மங்கள தேவி கண்ணகி கோயிலுக்குச் செல்லும் நுழைவு வாயில் பகுதியில் விடப்பட்டது.

இந்த நிலையில் தமிழக வன எல்லைக்குள் நுழைந்த அரிசிக் கொம்பன் யானையிடம் இருந்து சிக்னல் கட்டாகியுள்ளதாக கேரள வனத்துறை தெரிவித்துள்ளது. தற்போது அரிசிக் கொம்பன் யானையிடம் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. கடைசியாக தமிழ்நாட்டு வனப்பகுதியின் வண்ணாத்திப் பாறை பகுதியில் இருந்து சிக்னல் கிடைத்ததாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிக்னல் கிடைக்காமல் இருப்பதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது. மேக மூட்டமாக இருப்பதாலோ, அடர் வனத்தில் யானை இருப்பதாலோ சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கிடையே வி.ஹெச்.எஃப் ஆன்றனா மூலம் அரிசிக் கொம்பன் யானையில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலரில் இருந்து சிக்னலை பெறும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டுள்ளது.

வனத்தில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை

தமிழ்நாடு வனத்தில் கடைசியாக சிக்னல் கிடைத்திருந்தாலும், அரிசிக் கொம்பன் மீண்டும் சின்னக்கனால் பகுதிக்கு வராது என உறுதியாக கூற முடியாது என யானையை அந்த பகுதியில் இருந்து வேறு இடத்துக்கு கொண்டுபோவதற்காக உயர் நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுவைச் சேர்ந்த டாக்டர் பி.எஸ்.ஈசா தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு சில இடங்களில் மாற்றிக்கொண்டு விடப்பட்ட யானைகள் திரும்பவும் வந்துள்ளதாகவும், தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தைக்காட்டிலும், பாலக்காட்டின் பரம்பிக்குளம்தான் அரிசிக் கொம்பன் யானையை விடுவதற்கு சிறந்த இடம் எனவும் டாக்டர் பி.எஸ்.ஈசா தெரிவித்துள்ளார். வீட்டுக்குள் புகுந்து அரிசி சாப்பிட்டு, சுவை பிடித்துப்போனதால் கிராமங்களை சுற்றிச் சுற்றி வந்த அரிசிக் கொம்பன் யானை தமிழக வனத்தில் காணாமல் போயிருப்பது தமிழக எல்லையோர மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.



from Latest news https://ift.tt/wkoaVNt

Post a Comment

0 Comments