Doctor Vikatan: முக அழகையே கெடுக்கும் சருமத் துவாரங்கள்... நிரந்தரமாகப் போக்க சிகிச்சைகள் உண்டா?

Doctor Vikatan: என் வயது 30. சருமத்தில் துவாரங்கள் பெரிதாக இருப்பது என் முகப்பொலிவையே கெடுக்கிறது. சருமத்துவாரங்கள் பெரிதாக இருக்க என்ன காரணம்? இந்தப் பிரச்னையை நிரந்தரமாக சரியாக்க சிகிச்சைகள் ஏதும் இருக்கின்றனவா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமத்துவாரங்களை நிரந்தரமாக நீக்க முடியுமா என்ற கேள்வி இன்று நிறைய பேருக்கு இருக்கிறது. அதற்கு முன் சருமத் துவாரங்கள் இருப்பது சாதாரணமானதா, அசாதாரணமானதா, அதற்கு சிகிச்சை அவசியமா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.

சருமத்துவாரங்கள் பொதுவாக, மூக்கு, கன்னங்களுக்கு அருகில் இருக்கும். நம் சருமத்தில் எண்ணெய்ப்பசை சுரக்கும். சிலருக்கு இது அளவுக்கதிகமாகச் சுருக்கும். அதனால் பருக்கள் அதிகமிருக்கும். முகத்திலுள்ள சருமம் வீக்கத்துடன் காணப்படும். இதனால் சருமத்துவாரங்கள் பெரிதாகி, வெளியே தெரியும். நம்முடைய சீதோஷ்ணநிலை காரணமாகவும் சிலருக்கு சருமத் துவாரங்கள் வெளிப்படையாகத் தெரியும். இது சாதாரணமானதுதான். ஆனால் அது முக அழகையே கெடுக்கும்படி பெரிதாகத் தெரிவதால்தான் பலரும் அது குறித்துக் கவலை கொள்கிறார்கள்.

இதை ஒரு க்ரீமாலோ, ஜெல் மூலமோ நிரந்தரமாக நீக்கவெல்லாம் முடியாது. அது தெரியாமல் பலரும் மருத்துவப் பரிந்துரையில்லாமல் மருந்துக் கடைகளில் க்ரீம் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.

சில வீடியோக்களில் சிலிக்கான் சிகிச்சைகள் மூலம் இந்த துவாரங்களை நிரந்தரமாக நீக்கிவிட முடியும் என்றெல்லாம் காட்டப்படுவதை உண்மையென நம்பி, மருத்துவ ஆலோசனையின்றி அவற்றைச் செய்து கொள்ள முனைகிறார்கள். அப்படியானால் சருமத் துவாரங்களை சரிசெய்ய சிகிச்சைகளே இல்லைபோல என நினைத்துக்கொள்ள வேண்டாம்.

முகப் பராமரிப்பு

சருமத் துவாரங்களை சரிசெய்வதற்கான சிகிச்சைளை பொதுவாக மூன்றாகப் பிரித்துக்கொள்ளலாம். க்ரீம் உபயோகிப்பதன் மூலம், எனர்ஜி அடிப்படையிலான கருவிகளின் மூலம், ஊசிகள் மூலம் என இதை பல வழிகளில் அணுகலாம்.

பருத் தொல்லையும், எண்ணெய்ப்பசையான சருமமும்தான் இந்தப் பிரச்னைக்கான பிரதான காரணம். எனவே முதலில் அந்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டியது அவசியம். அதையடுத்து வைட்டமின் ஏ, ரெட்டினால் கலந்த க்ரீம் உபயோகிக்கும்போது சருமத் துவாரங்கள் நன்கு சுருங்கும்.

எனர்ஜி பேஸ்டு கருவிகளான மைக்ரோ நீட்லிங் அல்லது லேசர் சிகிச்சை செய்யலாம். இதன் மூலம் சருமத்தின் கீழே உள்ள திசுக்கள் தூண்டப்பட்டு துவாரங்கள் மூடப்படும்.

ஹைலுரானிக் ஆசிட் உள்ள ஊசி போடப்படும்போது, சருமத்தில் ஈரப்பதம் அதிகமாகி, துவாரங்கள் மூடும். ஆனால் இதன் பலன் 8 முதல் 12 மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கும்.

முகம்

மற்றபடி இது நிரந்தரமான சிகிச்சை அல்ல. உங்களுக்கு எந்தச் சிகிச்சை தேவை, எப்படிச் செய்யப்படும் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள சரும மருத்துவரிடம் நேரடி ஆலோசனை பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news https://ift.tt/oOuUpTk

Post a Comment

0 Comments