Doctor Vikatan: சாதாரண ஜலதோஷமா, அலர்ஜியால் வந்த ஜலதோஷமா... பிரித்தறிவது சாத்தியமா?

Doctor Vikatan: சாதாரண ஜலதோஷத்தையும் அலர்ஜியால் ஏற்படும் ஜலதோஷத்தையும் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது? அடிக்கடி சளி பிடித்தால் அது அலர்ஜியால் வருவதாக இருக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்

ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைக்கான சிறப்பு மருத்துவர் ஶ்ரீதரன்

சாதாரண ஜலதோஷம் விருந்தாளி போல எப்போதாவது வந்து போகும். ஆனால் அலர்ஜியால் ஏற்படும் ஜலதோஷம் நம்முடனேயே வாழ்கிற துணை போல... எப்போதும் நம்முடன் இருக்கும். சில நாள்களோ, சில மாதங்களோ வேண்டுமானால் ஓய்வு எடுத்துக்கொள்ளும். இதை 'பெரினியல் அலர்ஜி' (Perennial Allergy) என்று சொல்வோம். இது வருடம் முழுவதும் இருக்கும்.

சிலருக்கு சீசனல் அலர்ஜியாலும் ஜலதோஷம் பிடிக்கும். அதாவது பருவநிலையில் மாறுதல்கள் ஏற்படும்போது மட்டும் ஜலதோஷம் வரும். மற்ற நாள்களில் நன்றாக இருப்பார்கள். ஆனால் சாதாரண ஜலதோஷம் அப்படிக் கிடையாது. வருடத்தில் இரண்டு, மூன்று முறை மூக்கடைப்பு, தும்மல் போல வரும்.

அலர்ஜியும் இதே அறிகுறிகளைக் காட்டுவதால் இந்த இரண்டையும் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்ற கேள்வி எழும். அலர்ஜிக்கு சருமத்தில் செய்யப்படுகிற டெஸ்ட் அல்லது ரத்தப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். சருமத்தில் நுண்ணிய ஊசிகளைக் குத்தி, வலியின்றி செய்யப்படுகிற டெஸ்ட் அது. ரத்தப் பரிசோதனையில் அலர்ஜிக்கு காரணமாக இம்யூனோகுளோபுலின் பி அளவு சரிபார்க்கப்படும். அது சராசரியாக ஒரு நபருக்கு 100 யூனிட் இருக்க வேண்டும். அது சிலருக்கு ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும்போது அலர்ஜி பாதிப்பு வரலாம்.

Cold (Representational Image)

இவை தவிர சைனஸ் பாதிப்பு இருக்கிறதா என்று பார்க்க எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்தத்தில் ஈஸ்னோபில் எண்ணிக்கை, மூக்கிலுள்ள சளியை சோதனை செய்வது என வேறு பரிசோதனைகளும் உள்ளன. தகுதிபெற்ற மருத்துவர்களை அணுகி ஆலோசனையும் சிகிச்சையும் பெறலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news https://ift.tt/eK9DzQL

Post a Comment

0 Comments