பிரார்த்தனை செய்யும் உதடுகளைவிட உதவும் கரங்கள் சிறந்தவை.’ - அன்னை தெரசா.
வாழ்க்கை நாம் நினைத்தே பார்க்காத திருப்பங்களைக்கொண்டது. உயர்வு-வீழ்ச்சி, இன்பம்-துன்பம், வருவாய்-இழப்பு... எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நேரலாம். மனதுக்கினிய சம்பவங்கள் நிகழும்போது மகிழ்ச்சியில் திளைப்பதும், விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழும்போது துயரத்தில் மூழ்கிப்போவதும் மனித இயல்பு. எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் மனிதர்களுக்கு அத்தனை சுலபத்தில் வாய்த்துவிடுவதில்லை. அதேநேரத்தில், துயரமிகு தருணங்களில் ஆதரவுக்கரம் நீட்ட, அரவணைக்க, ஆறுதலாகச் சில வார்த்தைகளைப் பகிர மனிதர்கள் கிடைத்தால் போதும், எப்பேர்ப்பட்ட துன்பத்திலிருந்தும் மீண்டு வந்துவிடலாம். `நான் இருக்கேன்... எதுக்கும் கவலைப்படாதே... எது வந்தாலும் பார்த்துக்கலாம்...’ என தைரியமூட்டும் மனிதர்கள் உடனிருந்தால், சூறாவளியாகத் தாக்கும் பிரச்னைகளைக்கூட தென்றலாக மாற்றிவிடலாம். அதற்கு வாழும் உதாரணம், ஜான் ஓ’லேரி (John O'Leary).
`ஜான் ஓ’லேரிக்கு நடந்ததுபோல எந்தக் குழந்தைக்கும் நடக்கக் கூடாது.’ அந்தக் குழந்தையைப் பார்த்தவர்களெல்லாம் அப்படித்தான் சொன்னார்கள். அப்போது ஜானுக்கு ஒன்பது வயது. 1987-ம் வருடம். அவர் வசிக்கும் பிளாக்கில், அவரைவிட மூத்த அண்ணன்கள் சிலர் சின்னச் சின்ன பொருள்களில் தீப்பற்றவைத்து விளையாடுவதைப் பார்த்திருந்தார். அதேபோல தானும் விளையாட வேண்டும் என்கிற ஆசை. அன்றைக்கு வீட்டில் அவருடைய பெற்றோர்கள் வேறு இல்லை. ஜான் நேராக வீட்டின் கேரேஜுக்குப் போனார். பெட்ரோலையும் தீப்பெட்டியையும் எடுத்துக்கொண்டார். ஒரு காட்போர்டு அட்டையை எடுத்து, தீ வைத்தார். தரையில் அதைக் கிடத்தினார். எரியும் காட்போர்டு அவருக்கு உற்சாகத்தைத் தந்தது. அவருடைய கையில் பெட்ரோல் கேன் இருந்தது.
கொஞ்சம் பெட்ரோலை அதன் மேல் ஊற்றினால் என்னவாகும் என்று பார்க்க அவருக்கு ஆசையாக இருந்தது. சிறு துளி பெட்ரோலை ஊற்றிப் பார்க்க வேண்டும் என்பதுதான் அவருடைய திட்டம். நடந்தது வேறு. பெட்ரோல் கேனிலிருந்து துளிகளுக்கு பதிலாக மொத்தமாக பெட்ரோல் கொட்டிவிட்டது. எரிகிற தீ... கொட்டிய பெட்ரோல்... கேட்க வேண்டுமா... `டமாரெ’ன்ற சத்தம். பெரிய வெடி வெடித்ததுபோலத் தீ விபத்து. ஜான் தூக்கி வீசப்பட்டார். அதற்குள் அவர் உடம்பில் பற்றிக்கொண்ட நெருப்பு அவரை விழுங்குவதுபோல ஆக்கிரமித்திருந்தது. ஜானின் அலறல் சத்தம் ரொம்ப தூரத்துக்குக் கேட்டது.
`வாழ்க்கையில் நீங்கள் செல்லவேண்டிய பாதையை எப்போதும் உங்களால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், எந்த வழிமுறையில் செல்ல வேண்டும் என்பதை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.’ - ஜான் ஓ’லேரி
எப்படியோ எழுந்துகொண்டு, தீக்காயங்களுடன் தட்டுத் தடுமாறி, அலறியபடி கேரேஜிலிருந்து வீடு நோக்கி ஓடினார் ஜான். அதற்குள் சத்தம் கேட்டு ஓடி வந்தார் அவருடைய அண்ணன் ஜிம். ஜிம்முக்கு 17 வயது. நிலைமையைப் புரிந்துகொண்டு ஒரு கம்பளியை எடுத்து, ஜானின் மேல் போர்த்தி, தரையில் உருட்டிவிட்டு தீயை அணைத்துவிட்டார். பிறகு அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மருத்துவமனைக்குக் கொண்டுபோகப்பட்டார் ஜான். இந்த இடத்தில் ஜான் ஓ’லேரியைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு... அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில், செயின் லூயிஸில் 1977-ல் பிறந்தார். அப்பா, டென்னி ஓ’லேரி. அம்மா, சூசன் ஓ’லேரி.
மருத்துவமனையில் கண்களை மூடிப் படுத்திருந்தாலும், மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் உடம்பெல்லாம் `திகுதிகு’வென எரிவது போன்ற உணர்வை ஜான் அனுபவித்துக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி நடக்கும் உரையாடல்களும் அவர் காதில் விழுந்துகொண்டிருந்தன. கூடவே அப்பாவை நினைத்து பயந்தார். `இன்னிக்கி நடந்தது தெரிஞ்சா, அப்பா தோலை உரிச்சுத் தொங்கவிட்டுடுவார். அவர் ஏன் உரிக்கணும்... அதான் உரிஞ்சுபோச்சே...’ நினைத்ததுமே கண்ணீர்த்துளிகள் பெருகின. மருத்துவமனையில் அவருடைய உடலில் 95 சதவிகிதம் தீக்காயம் என்றார்கள். பிழைப்பதற்கு ஒரேயொரு சதவிகிதம்தான் வாய்ப்பு என்றார்கள்.
அந்தச் சமயத்தில் ஜானுக்கு தைரியம் கொடுத்த முதல் நபர் அவருடைய அப்பா. விஷயத்தைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்தார் டென்னி. ஜானுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டார். உடம்பு முழுக்கத் தீக்காயங்களோடு, கண்களை மூடிப் படுத்திருக்கும் அந்தச் சின்னஞ்சிறு மகனைப் பார்க்கப் பொறுக்கவில்லை அவருக்கு. வாய்விட்டு அரற்ற வேண்டும்போலத் தோன்றியது. தன்னை அடக்கிக்கொண்டார். மெல்லிய குரலில் ஜானுடன் உரையாடினார். அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஜானின் காதில் விழுந்துகொண்டேயிருந்தன. ``ஜான்... உன்னை நினைச்சு நான் பெருமைப்படாத நாளே இல்லை, தெரியுமா உனக்கு? இந்த வயசுல இவ்வளவு கெட்டிக்காரப் பையனான்னு உன்னை நினைச்சு நினைச்சு சந்தோஷப்பட்டிருக்கேன். என் செல்லம் நீ. நான் உன் அப்பாங்கிறதுலதான் எனக்குப் பெருமை. உனக்கு ஒண்ணும் ஆகாது. தைரியமா இரு...’’ அப்பா பேசப் பேச ஜானுக்கு உள்ளுக்குள் குளிர்ந்துபோனது. கடுகடுவெனப் பேசுவார் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்த அப்பா, உருகி உருகிப் பேசிக்கொண்டிருந்தார்.
`முதன்முதலில் என் பயத்தையெல்லாம் விரட்டியடித்து, எனக்குள் நம்பிக்கையை விதைத்தது என் அப்பாதான்.’ - ஜான் ஓ’லேரி.
அம்மா சூசன் ஜானுக்கு முக்கியமான பலம். மருத்துவர்களே கைவிரித்துவிட்ட பிறகு மனிதர்கள் பிழைத்துக்கொள்ள இருக்கும் கடைசி வாய்ப்பு... நம்பிக்கை. ஜானுக்கு அப்போது விழிப்புத் தட்டியிருந்தது. தீக்காயங்கள் தந்த வலியில் முனகிக்கொண்டிருந்தார். சூசனுக்குப் பொய் சொல்ல வராது; பிடிக்காது. ஜானுக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டார். ஜானுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னார்... ``ஜான் நீ சாக விரும்புறியா... வாழ விரும்புறியா... ரெண்டு சாய்ஸ்ல எது வேணும்னு நீயே முடிவு செஞ்சுக்கோ.’’
ஒரு கணம்தான், பட்டென்று சொன்னார் ஜான்... ``அம்மா எனக்கு சாகப் பிடிக்கலைம்மா. நான் எப்பிடியாவது வாழணும்மா.’’ அம்மா, ஆதூரத்துடன் அவர் தலையைத் தடவிக்கொடுத்தார். அடுத்த ஐந்து மாதங்கள் மருத்துவமனையிலேயே இருந்தார் ஜான். டஜன் கணக்கில் அறுவை சிகிச்சைகள். என்னென்னவோ சிகிச்சைகள், மருந்துகள், மாத்திரைகள். அவரைக் கொஞ்சம்கூட மனம் நோகாமல் உடனிருந்து பார்த்துக்கொண்டார்கள் அப்பாவும் அம்மாவும். ஜான் என்கிற அந்தச் சிறு பிள்ளை மெல்ல மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். பிளாஸ்டிக் சர்ஜரி உட்பட பல சிகிச்சைகள் அளித்தும் அவரின் உடலிலிருந்த தீக்காயங்களின் வடு முழுவதுமாகப் போகவில்லை. போதாக்குறைக்கு, இரு கைகளிலும் சில விரல்களை அவர் இழந்திருந்தார். சூம்பிப்போன மாதிரி இருந்தன இரு கைகளும். ஆனால், அவர் அம்மாவுக்கு அது ஒரு குறையாகவே படவில்லை. ``உன்னால முடியும் ஜான். ம்... அந்த பியானோவை வாசி’’ என ஊக்கப்படுத்துவார். தட்டிக்கொடுப்பார். தைரியம் கொடுப்பார். இன்றைக்கும் மேடைகளில் தன் வாசகர்களுக்கு முன்னால் அநாயாசமாக பியானோவை இசைக்கிறார் ஜான். அந்த வாசிப்பைக் கேட்பவர்கள் அவருக்குச் சில விரல்கள் இல்லை என்று சத்தியம் செய்தால்கூட நம்ப மாட்டார்கள்.
`நீங்கள் வெற்றியைத் துரத்த ஆரம்பிக்கும்போது, உங்களுக்குள் இருக்கும் உள்ளொளி சட்டென்று பற்றிக்கொள்கிறது.’ - ஜான் ஓ’லேரி.
அவர் பெயர் ஜாக் பக் (Jack Buck). செயின்ட் லூயிஸ் கார்டினல்ஸ் (St. Louis Cardinals) என்ற பேஸ்பால் டீம் விளையாட்டுகளை ரேடியோவில் விவரிக்கும் வர்ணனையாளர். ஜான் ஓ’லேரி தீ விபத்தில் மாட்டிக்கொண்டு மருத்துவமனையில் இருப்பதைக் கேள்விப்பட்டுத் தேடி வந்தார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. ஜான் மருத்துவமனையில் சேர்ந்திருந்த இரண்டாவது நாள் அது. ஜானுக்கு கார்டினல்ஸ் டீமை மிகவும் பிடிக்கும். அன்றைக்கு யாரோ தான் படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தது தெரிந்தது. ஜாக் பக், ஜானுக்கு அருகில் ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தார். ஜானின் கைகள் பெட்டில் துவண்டுபோய்க் கிடந்தன. மூடியிருந்த கண்கள் வீங்கியிருந்தன. அவர் மூச்சுவிடுவதற்காகத் தொண்டையில் ஒரு டியூப் சொருகப்பட்டிருந்தது.
``தம்பி எந்திரி... எந்திரிச்சிக்கோ...’’ கேட்டதுமே, அது கார்டினல்ஸ் டீமின் வர்ணனையாளர் ஜாக் பக்கின் குரல் என்பது ஜானுக்குப் புரிந்துபோனது.
``ஜான் உனக்கு ஒண்ணுமில்லை. நீ பொழைச்சுக்குவே. நீ வாழப்போறே... எல்லாரோடயும் சண்டைபோடப்போறே...’’ மேலும் சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு ஜாக் பக் போய்விட்டார். மூடியிருந்த கண்களுக்குள் ஜானுக்கு அந்த அரை மயக்கநிலையில் தெரிந்தது கும்மிருட்டு. ஆனால், ஜாக் பக்கின் நம்பிக்கை வார்த்தைகள் சிறு துளி ஒளியைக் கொண்டு வந்து சேர்த்திருந்தன. மருத்துவமனையில் ஜான் இருந்த ஐந்து மாதங்களில் ஒவ்வொரு நாளும் வந்தார் ஜாக் பக். அதேபோல நம்பிக்கை தரும், உற்சாகமூட்டும், உத்வேகமூட்டும் வார்த்தைகளைப் பேசுவார், போய்விடுவார்.
`இது என்னுடைய வாழ்க்கை. இதற்கு நான்தான் முழுப்பொறுப்பு.’ - ஜான் ஓ’லேரி
மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினார் ஜான். மேலே படிக்க வேண்டும். ஆனால், ஆனால்... அவருடைய சேதமடைந்த கைகள் எழுதுவதற்கு ஏற்றதாக இல்லை. இனி அவர் படிப்புக்கே முழுக்குப் போட்டுவிடவேண்டியதுதான் என்று அவருடைய அப்பாவும் அம்மாவுமேகூட நினைத்தார்கள். அப்போது நடந்ததுதான் அதிசயம்.
ஒருநாள் ஜாக் பக்கிடமிருந்து ஒரு கிஃப்ட். பிரித்துப் பார்த்தார் ஜான். உள்ளேயிருந்தது ஒரு பேஸ்பால். அப்போது அமெரிக்காவில் பிரபலமாக இருந்த பேஸ்பால் வீரர் ஒஸ்ஸி ஸ்மித் (Ozzie Smith) அந்தப் பந்தில் ஏதோ எழுதி, கையெழுத்து போட்டிருந்தார். அதைப் படித்துப் பார்த்தார் ஜான். அந்தக் குறிப்பில், `தம்பி... இதே மாதிரி உனக்கு இன்னொரு பால் வேணுமா... அப்படின்னா, இந்தப் பந்தை அனுப்பினவருக்கு நன்றி சொல்லி, உன் கைப்பட ஒரு `தேங்க்ஸ் நோட்’ அனுப்பு’ என்று எழுதியிருந்தது. `இந்தக் கையை வெச்சுக்கிட்டு என்னால எழுத முடியுமா?’ ஆதங்கமாக இருந்தது. ஆனாலும் நம்பிக்கையோடு உட்கார்ந்தார். `தேங்க்ஸ்’ இந்த வார்த்தையை எழுதுவதற்குள்ளாகவே படாதபாடு பட்டுவிட்டார். அந்தக் குறிப்பை ஒஸ்ஸி ஸ்மித்துக்கு அனுப்பினார்.
அடுத்த நாள் இன்னொரு பந்து ஜானைத் தேடி வந்தது. அதிலும் அதே வாசகம். அதற்கும் நன்றி தெரிவித்துக் குறிப்பனுப்பினார் ஜான். இப்படி அவர் `தேங்க்ஸ் நோட்’ அனுப்ப அனுப்ப அவரைத் தேடி பந்துகள் வந்துகொண்டேயிருந்தன. மொத்தம் 60 பந்துகள். அவை, ஜான் ஓ’லேரியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டன. நம்பிக்கையோடு, திடமான மனதோடு இப்போது எழுத ஆரம்பித்திருந்தார் ஜான். அவர் ஏற்கெனவே படித்துக்கொண்டிருந்த செயின்ட் கிளமென்ட் ஸ்கூலுக்குத் திரும்பினார். பிறகு ஹைஸ்கூலுக்குப் போனார். காலேஜில் சேர்ந்து பட்டமும் வாங்கினார்.
ஜானுக்கு இயல்பிலேயே அபாரமான எழுத்தாற்றல் இருந்தது. அதற்கு அவருடைய அப்பாவும் அம்மாவும்கூட ஒருவகையில் காரணமாக இருந்தார்கள். தங்களுக்கு நேர்ந்த வாழ்க்கை அனுபவங்களை சூசனும் டென்னியும் சேர்ந்து எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டார்கள். `Overwhelming Odds' என்ற அந்தச் சிறு நூலை 100 பிரதிகள் அச்சடித்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்தார்கள். அந்தப் புத்தகத்தைப் பற்றி வாய்மொழியாக நல்லவிதமான விமர்சனங்கள் பறந்தன. விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது. நம்பிக்கையை அழுத்தமாக மனதுக்குள் விதைக்கும் அவர்களுடைய உண்மை வாழ்க்கை, பலருக்கும் பிடித்துப்போனது. ஒருகட்டத்தில் கணக்கு பார்த்தபோது ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருந்தது அந்தப் புத்தகம்.
மெல்ல மெல்ல மேடைப் பேச்சாளரானார் ஜான். பத்திரிகைகளில் கட்டுரை எழுதிக்கொண்டே தனியாகப் புத்தகமும் எழுத ஆரம்பித்தார். 2016-ம் ஆண்டு அவருடைய முதல் நூல், `On Fire: The 7 Choices to Ignite a Radically Inspired Life’ வெளியாகி விற்பனையில் சக்கைபோடு போட்டது. 2020-ம் ஆண்டு வெளியான அவருடைய `In Awe: Rediscover Your Childlike Wonder to Unleash Inspiration, Meaning and Joy’ நூலையும் வாசகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். இப்போது ஜான் ஓ’லேரிக்கு 46 வயது. தன்னுடைய அன்பான மனைவி பெத் (Beth), நான்கு குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறார். எழுத்திலும் பேச்சிலும் கவனம் செலுத்திக்கொண்டே சொந்தமாக ஒரு பிசினஸும் நடத்துகிறார். அவர் சொல்வதெல்லாம் ஒன்றுதான்... ``எனக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லி நம்பிக்கை கொடுக்க சிலர் இருந்தார்கள். நான் பிழைத்துக்கொண்டேன். அப்படித் துன்பத்திலிருப்பவர்களை நாமும் ஆற்றுப்படுத்தலாமே... என்ன குறைந்துவிடப்போகிறது?’’
from Latest news https://ift.tt/5DOGfHn
0 Comments