கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஆக்டிவ் அரசியல்வாதியாக இருந்த மாஃபா பாண்டியராஜன், அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகி, இப்போது பிசினஸில் கலக்கிக்கொண்டிருக்கிறார். அவர் நடத்தும் 'சியல்' (CIEL) நிறுவனம் தற்போது வேகமான வளர்ச்சியைக் காணத் தொடங்கி இருக்கிறது.
இன்றைய சூழலில் எல்லோருமே வேலைக்குப் போய்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். ஆனால் இன்று வேலைவாய்ப்பு மிகப் பெரிய சவாலாக மாறிவிட்டது. படித்த படிப்பு ஒன்று, செய்யும் வேலை ஒன்று என்று இருக்கும் காலகட்டம். இன்ஜினியரிங் படித்துவிட்டு ஸ்விக்கி, ஜொமட்டோவில் வேலைப் பார்க்கும் யுகத்தில் வேலைவாய்ப்புத் துறையை ஒழுங்குபடுத்தி பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் மாஃபா பாண்டியராஜன். அவர் நடத்தும் 'சியல்' நிறுவனம் இந்த நிதி ஆண்டில் ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி நிதி திரட்ட இலக்கு வைத்திருப்பதாக சொல்கிறார் அவர்.
'சியல்' நிறுவனம் வேலைவாய்ப்புத் தேடும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான திறன்களைப் பயிற்சி அளித்து பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் மனிதவள தேவையைப் பூர்த்தி செய்யும் தொழிலைச் செய்துவருகிறது.

இந்நிறுவனம் முடிந்த நிதி ஆண்டின் நிதிநிலை அறிக்கையையும், வரும் நிதி ஆண்டில் மேற்கொள்ளவிருக்கும் தொழில் நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை வெளியிட்டுப் பேசினார் 'சியல்' நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பாண்டியராஜன். அவர் சொன்னதாவது...
''சியல்' நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் ரூ.815.4 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. இது முந்தைய நிதி ஆண்டு வருவாயைவிட 57% அதிகமாகும். மேலும், வருவாய் வளர்ச்சியில் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டும் வருகிறது. 2019-20 நிதி ஆண்டில் ரூ.279.4 கோடியாக இருந்த வருவாய், தற்போது ரூ.815 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதே போல், பங்குதாரர்களின் மூலதன மதிப்பும் தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணம், மனிதவளச் சந்தையில் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறோம்.
வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு சார்ந்து இந்தியாவில் மிகப் பெரிய தேவை இருந்துகொண்டேதான் இருக்க்கிறது. இந்த இடைவெளியை நிரப்பும் நோக்கில் 'சியல்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதில் முக்கியமாக நிறுவனத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தத் திட்டமிட்டோம். நாட்டின் பல்வேறு நகரங்களில் அலுவலகங்கள் அமைத்திருக்கிறோம். அது மட்டுமல்லாமல், விரிவாக்க நடவடிக்கைகளுக்கும், தொழில்நுட்பம் சார்ந்தும் பல நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்திருக்கிறோம். தற்போது 'சியல்' நிறுவனத்தின் இணை நிறுவனங்களாகச் சில நிறுவனங்கள் உள்ளன. வரும் ஆண்டுகளில் மேலும் சில நிறுவனங்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

2022-23 நிதி ஆண்டில் 'சியல்' நிறுவனம் ரூ.25.7 கோடி நிதியைத் திரட்டியிருக்கிறது. இந்த நிதி ஆண்டில் ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரை நிதியைத் திரட்டுவதற்கான இலக்கு வைத்திருக்கிறோம். மேலும், பொதுப் பங்கு வெளியிடுவதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக இருக்கிறோம். இந்த நிதி ஆண்டு இறுதிக்குள் ஐ.பி.ஒ வெளியிட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம்.
தற்போது 'சியல்' நிறுவன புரமோட்டர்கள் வசம் 91% பங்குகள் உள்ளன. இதில் 20% பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்து ரூ.750 கோடி முதல் ரூ.800 கோடி வரை நிதி திரட்ட வாய்ப்புள்ளது.
நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் நிதித் திட்டங்கள் மூலமாகவும், மத்திய மாநில அரசுகளின் திறன் வளர்ப்பு திட்டங்கள் மூலமாகவும் ஆக்கபூர்வமான மாற்றத்தை மனிதவளச் சந்தையில் நிகழ்த்த வேண்டும் என்பதில் முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறோம். 2022-23 நிதி ஆண்டில் சுமார் 5,000 பேரை திறன் வளர்ப்புத் திட்டங்கள் மூலமாக வேலைவாய்ப்புக்கு உருவாக்கி இருக்கிறோம். அதில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது முக்கியமான விஷயம்.
தற்போது பெரும்பாலான திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது. இதை நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் முயற்சி எடுத்து வருகிறோம். தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்களும், தொண்டு அமைப்புகளும் எங்களுடன் கைக்கோர்த்துள்ளன.
ரூ.1.35 லட்சம் கோடி மதிப்பிலான மனித வளச் சந்தையில் 'சியல்' நிறுவனத்தின் பங்கு 1% மட்டுமே. அப்படியானால், 'சியல்' நிறுவனம் போகவேண்டிய தூரம் இன்னும் அதிகம்.

தற்போது 10 முன்னணி மனிதவள நிறுவனமாக இருந்துவரும் 'சியல்' டாப் 5 நிறுவனங்களின் பட்டியலுக்குள் வர வேண்டும். வாய்ப்பு தேடும் எல்லோருக்கும் எங்களுடைய முகவரியைக் கொண்டு சேர்ப்பதுதான் இலக்கு. வேலை தேடுபவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பாலமாக இருப்பதுதான் நோக்கம்" என்று பேசினார் 'சியல்' பாண்டியராஜன்.
'மாஃபா' நிறுவனம் மூலம் மனிதவள சேவையை அளித்து வந்தவர், இனி 'சியல்' மூலம் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்ப்போம்!
from Latest news https://ift.tt/MyhAIs9
0 Comments