மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயிகள் எதையும் சற்று வித்தியாசமாக செய்யக்கூடியவர்கள். இன்றைக்கும் மகாராஷ்டிரா கிராம விவசாயிகள் கம்பு, சோளத்தை விளைவித்து அதில் சப்பாத்தி செய்துதான் சாப்பிடுகின்றனர். தமிழக விவசாயிகள் கம்பு, கேழ்வரகு, சோளத்தை மறந்துவிட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் தாலுகாவில் இருக்கும் போதானி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் சத்யஜித் மற்றும் அஜிங்கா. சகோதரர்களான இவர்கள் இரண்டு பேரும் 10 ஆண்டுகளுக்கு மேல் பன்னாட்டு நிறுவனம் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் வேலை செய்து வந்தனர். ஆனால் திடீரென இந்த இயந்திர வாழ்க்கையே வேண்டாம் என்று கூறி வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த கிராமத்திற்கு வந்தனர். அவர்களுக்கு சொந்தமாக பூர்வீக நிலம் கொஞ்சம் இருந்தது. அதில் இயற்கை விவசாயம் செய்யப்போகிறோம் என்று விவசாயத்தில் ஈடுபட்டனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-06/932754a4-e441-47a1-ae25-372de482da2c/Screenshot_2023_06_12_120747.png)
அவர்கள் இரண்டு பேரையும் பார்த்து கிராம மக்கள் எள்ளி நகைத்தனர். தெரியாத தொழிலில் எப்படி உங்களால் சாதிக்க முடியும் என்றும், விவசாயத்தில் எப்போதும் நஷ்டம்தான் ஏற்படுகிறது என்று சொன்னார்கள். ஆனாலும் அதனை பற்றிக் கவலைப்படாமல் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டனர். விவசாயத்தோடு சேர்ந்து உப தொழிலாக மாடு வளர்ப்பிலும் ஈடுபட்டனர். நாளடைவில் மாடு வளர்ப்பதையே பிரதான தொழிலாக மாற்றினர். இப்போது அவர்களிடம் 100 கிர் ரக மாடுகள் இருக்கின்றன. இந்த மாடுகளிடமிருந்து கிடைக்கும் பாலை அப்படியே விற்பனை செய்யாமல் மதிப்பு கூட்டி நெய் தயாரிக்கின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் கிடைக்கிறது. பால் அப்படியே தயிராக்கப்பட்டு நெய் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் நெய் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாடுகளுக்கு தேவையான தீவனம் மற்றும் இயற்கையான முறையில் 20 ஏக்கரில் இப்போது விவசாயம் செய்கின்றனர். அதோடு விவசாயிகளிடம் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி போன்ற விளை பொருள்களை வாங்கி விற்கவும் செய்கின்றனர். மேலும் ஊறுகாய், நாட்டுச்சர்க்கரை, துவரம் பருப்பு, மாதுளம் பழம் போன்றவற்றையும் தங்களது இணையதளம் மூலம் விற்பனை செய்கின்றனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/8dc30c10-6e47-4f5e-81f1-b48d0b780175/45541_thumb.jpg)
பாலை மதிப்புக்கூட்டும் போது கிடைக்கும் மோரை கிராம மக்களுக்கு குடிக்க கொடுக்கின்றனர். அதோடு எஞ்சி இருக்கும் மோரை பாக்கெட் போட்டு விற்பனை செய்யாமல் பால் கொடுக்கும் பசு மாடுகளுக்கு மோரை குடிக்க கொடுக்கின்றனர். மாடுகள் அந்த மோரை மிகவும் விரும்பி குடிக்கின்றன. இந்த மோர் மூலம் மாடுகளுக்கு கொடுக்கப்படும் ஒரு நேர சாப்பாடு மிச்சமாவதாக சத்யஜித் தெரிவித்துள்ளார். மாடுகளுக்கு மோர் கொடுக்கப்படுவதால் மாடுகள் அதிக அளவில் பால் கறப்பதாக அவர் தெரிவித்தார்.
மாடுகளிடமிருந்து காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் பால் கறப்பதாகவும், இதனால் அதிகமாக பால் சுரக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். தற்போது ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைப்பதாகவும், தங்களிடம் 100 பேர் வேலை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்சி கொடுத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எம்.பி.ஏ.படித்துள்ள சகோதரர்கள் இரண்டு பேரும் இப்போது கிராமத்தில் விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர். அதோடு இவர்களது பண்ணைக்கு அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட 14 நாடுகளை சேர்ந்தவர்கள் வந்து இயற்கை விவசாயம் குறித்து தெரிந்து கொண்டு சென்றுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து விவசாயிகள் கூட வந்து செல்கின்றனர். விவசாயத்திற்கு செயற்கை உரங்களை பயன்படுத்துவதில்லை என்றும், மாட்டுச்சாணம் போன்ற இயற்கை உரங்களையே அதிகமாக பயன்படுத்துவதாக சகோதரர்கள் இரண்டு பேரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-11/124b76dc-d4ea-4d7c-a796-2d876d079b26/6188bb340516d.jpg)
மாடுகளுக்கு மோர் கொடுப்பது சரியா? என்று தஞ்சாவூரில் உள்ள மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் முனைவர் புண்ணியமூர்த்தியிடம் கேட்டோம். அவர் கூறுகையில்,
``மோர் நல்லது தான். சில மாடுகள் அதன் உற்பத்தி பொருளான பால், மோர், வெண்ணை, நெய் போன்றவற்றை குடிக்காது. ஆனால், பழக்கப்படுதப்பட்ட மாடுகள் மோரை குடிக்கலாம். பண்ணையில் வளர்க்கும் மாடுகளை பொறுத்தவரை அது ஒரே மாதிரியான உணவுகளை உண்டு வளர்க்கப்பட்டிருக்கும். அதற்கு மாற்று உணவுகளை கொடுத்தால் சாப்பிட மறுக்கும்.
ஆனால் தெருக்களில் வரும் மாடுகளுக்கு வீட்டில் ஊற்றும் கழனித் தண்ணீரில் எதையும் விட்டு வைக்காமல் அருந்தும். அதில் பால், மோர் கலந்திருந்தாலும் அருந்தும். உணவகங்களில் இலைகளில் தயிர், மோர் கலந்திருந்தாலும் சாப்பிடுகிறது. எனவே பழக்கபடுதப்பட்ட மாடுகள் மோர் அருந்தலாம்.
மனிதர்களுக்கு மோர் மிகவும் நல்லது, கால்சியம் உள்பட பல சத்துகள் உள்ளன. மாடுகளுக்கும் நல்லதுதான் ஆனால் மாடுகளுக்கு தேவையான முழுமையான ஊட்ட சத்தாக இருக்குமா என்பது சந்தேகமே. இவர்கள் கூறுவது போல ஒரு வேலை உணவுக்கு பதிலாக மோர் சாப்பிடுகிறது, அதனால் பால் அதிகம் கொடுக்கிறது என்பது மிகைப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. மோர் குடித்ததால் மாடுகள் அதிகம் பால் கொடுகிறது என்பது நடைமுறையில் சாத்தியமாக தெரியவில்லை" என்றார்.
from Latest news https://ift.tt/GAMLfPR
0 Comments