வடட நயகள - பயசசல - 71

கொடிமரத்தை வெட்ட வந்த மாடசாமியை, அவனின் ஆட்கள் அரிவாள்களால் வெட்டியும், கொத்தியும் கீழே சரித்தனர். மாடசாமி ரெத்தவிளாறாகப் பன்றியின் மேல் பொத்தென விழுந்தார். அப்போதும் அவர்மீது அரிவாள் வெட்டுகள் தொடர்ந்து விழுந்துகொண்டிருந்தன. சில கொத்துகள் கை தவறி, கீழே கிடந்த பன்றியின்மீதும் விழுந்தன. அந்த இடங்களில் சதை பிய்ந்து ரெத்தம் பீறிட்டது. பன்றியின் வாய் கட்டப்பட்டிருந்தாலும் அது வலி பொறுக்க மாட்டாமல் ‘ங்ம்...ங்ம்...ங்ம்...’ என உறுமித் திணறியது.

மாடசாமியிடமிருந்து இப்போது எந்த அனத்தலும் இல்லை. அவரின் கண்கள் இமைக்க மாட்டாமல் கொடிமரத்தையே பார்த்தபடி சொருகி நின்றன. தன் மகனைக் கொன்றவனைத் தன்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்கிற விசனத்தோடு அவர் உயிர் முடிச்சு அறுபட்டிருந்தது.

“ச்சே... மகென் வருவான்னு பார்த்தா இந்தக் கிழட்டுத் தாயோலி வந்துருக்கான். மவனைத் தப்ப வெச்சுட்டு, அப்பன் தலையைக் கொடுத்துருக்கான்போல. சர்தான்... தம்பியப்போல அப்பனும் நம்ம கையாலதான் செத்தான்னு அவனுக்குத் தெரியுறதுக்குள்ள நாமளே அவனை முடிச்சுவிட்டுறணும்டே!”

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 71

அருகில் கிடந்த மூட்டை தூக்கும் கொக்கியால் மாடசாமியின் உடலைக் கொத்தி, பன்றியின் மேலிருந்து இழுத்துப்போட்டான் கொடிமரம். “கெழட்டு நாயி சாகும்போது பன்னியவும் துணைக்குக் கூட்டிட்டுப் போயிருக்கு. ரெண்டையும் ஒண்ணா சேத்து வாட்டி, மஞ்சத் தடவிட்டு நாளைக்கி கறியோட கறியா கூறுபோட்டு கலந்துவிடு. சாராயம் குடிக்கிறவனுகளுக்கும், கொஞ்சத்தைத் தெரு நாய்களுக்கும் அள்ளிப் போடு.” உடன் இருந்தவர்களுக்கு உத்தரவிட்டான் கொடிமரம்.

அவர்கள் இரண்டு உடல்களையும் நெருப்புக்கூட்டி தீயில் வாட்டத் தொடங்கினார்கள். பிறகு மாடசாமியின் உடைகளை ஓலைக் கிடுகுகளோடு சேர்த்து எரித்தார்கள். மனுஷக்கறியின் நாற்றம் சகிக்க முடியாததாக இருந்தது. தோல் உதிர்ந்த சடலத்தைக் கூறுபோட்டு பன்றிக்கறியோடு கலந்து பெரிய சட்டியில் வேகவைத்தார்கள். “முத்துன உடம்பு... நல்லா வேகவிடுங்கடா” என்றான் கொடிமரம். பொழுது விடிவதற்குள் எல்லாமும் தடம் தெரியாமல் ஆனது. கோவில்பட்டிக்குப் போன சிவன்காளைக்கு இரவெல்லாம் துளி உறக்கமில்லை.

திருவிழா முடிந்த அடுத்த நாள் என்பதால் சாராயம் குடிக்க ஆத்துமேடு கருவக் காட்டுக்குள் அவ்வளவு கூட்டம். கேட்பவருக்கெல்லாம் இலையில் கறியை அள்ளிக் குமித்துவைத்தார்கள். காலையிலேயே காளி அங்கு வந்துவிட்டான். வந்ததிலிருந்தே பதற்றமாக இருந்தான். கொடிமரம் ஒரு பெரிய நாட்டுக் கருவேலத்தின் நிழலில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் ஆட்கள் கறியைத் தராசில் எடைபோட்டு விற்றுக்கொண்டிருந்தனர். காளி, இரவில் அங்கு சிவன் வந்தானா எனத் தடயங்களைத் தேடினான். எதுவுமில்லை.

காளிக்குத் தன் ஆட்களிடம் எப்படி கேட்பதெனத் தெரியவில்லை. கறி விற்பவர்களின் அருகில் வந்து நின்றதும், “வாடா காளி... இங்க உக்காரு” என்று கோணிச் சாக்கில் உட்கார அழைத்தார்கள். அங்கிருந்த எல்லோரின் கண்களிலும் இரண்டு நாள் தூக்கம் அப்படியே தேங்கியிருந்தது. கண்ணுக்குக் கீழே ரெப்பைகள் வீங்கியிருந்தன.

“நைட்டு யாரும் தூங்கலபோலயே...” காளி மெல்லப் பேச்சுக் கொடுத்தான். யாரும் மறுவார்த்தை பேசவில்லை. தராசில் கறி நிறுப்பவன் அன்று எல்லோருக்கும் கூடுதல் கறியை அள்ளிப்போட்டான். கிலோவுக்குக் கால் கிலோவாவது ஓசியில் போட்டார்கள். காளிக்கு அது மேலும் சந்தேகத்தைக் கூட்டியது. யாவாரம் சற்று ஓய்ந்த நேரத்தில், “நேத்து நைட்டு ஏதும் நடந்துச்சா..?” என்று தன் நண்பர்களிடம் நேரடியாகவே கேட்டான்.

“ஏதும் நடந்துச்சான்னா புரியல..?” அவர்களும் அவனை வம்பு செய்தார்கள். “டே இசக்கி... சும்மா என்னத்தையாவது விளையாடாத...” என்றான் காளி. “சரி, நான் ஒண்ணு மட்டும் சொல்லுதேன். உனக்காகத்தான் இந்தச் சலுகை. உன் சொந்தகாரனுவ யாரும் இருந்தா, இன்னிக்கி நம்ம கறியைச் சாப்பிட வேண்டாம்னு மட்டும் சொல்லு. இன்னிக்கி மட்டும் வீட்டுக்குக் கறி எடுத்துட்டுப் போகாத...” இசக்கி அப்படிச் சொன்னதும் “ஏன்..?” எனப் பதற்றமானான் காளி. அவன் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

“சொல்லுதோம்ல...”

“நான் வர்றப்பவே பாத்தேன், முனியண்ணே தெருநாய்க்கெல்லாம் கறி போட்டுக்கிட்டு இருந்தாரு.”

“ஆமா அதையும் பாத்துட்டியா... அதாம் சொல்லுதோம். நாய்க்கி பன்னிக்கறி போட்டாலே வெறி ஏறி, பைத்தியம் பிடிக்கும். இதுல மனுஷக் கறியும் சேத்து கலந்துவிட்டா அவ்வளவுதான். பாரு கொஞ்ச நாள்ல தூத்துக்குடில இருக்குற எல்லாத் தெருநாயும் எவனைக் கடிக்கலாம்னு திரியும். நைட்டு படத்துக்குப் போனா பாத்துப் போடே...” காளிக்கு என்னவோ செய்தது.

திரும்பிப் பார்க்கையில் காளியின் விருந்தாளியாக வந்த மாமாவும், அவரின் சேக்காளிகளும் சாராயம் வாங்கிக் குடித்தபடியே, கறியை நக்கிக்கொண்டிருந்தார்கள். “அங்க என்னடே பாக்குதே... யாரு சொந்தக்காரனுவலா... விடு... போகட்டும். முக்காவாசி சாப்பிட்டுட்டானுவ. இப்போம் என்னத்தை யாவது சொல்லித் தொலைக்காத...” காளிக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. போய் வாந்தி எடுத்துவிட்டு வந்தான்.

“என்னடே மாப்ள... நேத்து அடிச்ச சரக்கு சேரலையா... பித்த உடம்புடே உனக்கு...” காளியின் மாமா கிண்டலாகச் சிரித்தார். இசக்கியிடம் நேரடியாகவே கேட்டான் காளி, “யாரு... பம்பாய்க்காரனா..?”

“இல்லடே அவம் அப்பன். அந்தக் கருவாட்டு யாவாரி கிழவன். அண்ணனைப்போட வந்தான். வேற வழி... சோலிய முடிச்சாச்சு.”

“அப்போம் சிவன் எங்க போனாம்?”

“அது தெரியலடே... ஆனா இன்னிக்கி அவம் வந்தான்னா இன்னிக்குத் தூக்கமும் போச்சு...” அவர்கள் அலுத்துக்கொண்டார்கள். கொஞ்ச தூரத்தில் கொடிமரம் எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டு நடந்து வந்தான்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 71

ஞானவேல் சரக்கடித்தபடியே ஒரு கப்பலின் நுனியில் நின்று, தன் போலீஸ் அதிகாரி நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தார்.

“ஏண்டா... என்ன ஆச்சு, நீ இவ்வளவுல்லாம் குடிக்க மாட்டியே ஞானவேல்... ஏதும் பிரச்னையா..?”

“ஆமாண்டா... ரெண்டு நாளா தூக்கமே இல்ல... பாக்கக் கூடாத ஒண்ணைப் பாத்துத் தொலைச்சுட்டேன்.”

“என்னத்தடா பாத்த?”

“ஒரு தே**யா குடும்பம் என் மகனை வளைச்சுப் போட்டுருச்சுடா...”

“என்ன லவ்வா... இதெல்லாம் வயசுப் பசங்களுக்கு வாரதுதான... ஏன் நீயும் நானும் பண்ணலையா?”

“ஏய்... இது வேறடா... இது அரிப்பு... வெறும் அரிப்பு. இல்லாட்டி தன்னைவிட ரெண்டு வயசு சின்னப் பையனை இப்படி ஆக்கிவெப்பாளா... சொல்லு...”

“அப்போ கவலையை விடு... முடிச்சுட்டு கழட்டி விட்டுட்டு வந்துடுவான். உன் பையன் உன்னைவிட விவரமானவன்டா...”

“நான்சென்ஸ் மாதிரி பேசாத... இது எனக்கென்னமோ அப்படித் தோணலை... திட்டம் போட்டுத்தான் வளைச்சுப் போட்ருக்காளுங்க. என் மகனும், அந்த முண்டையோட தம்பியும் தோஸ்த்ஸ். நான் அந்தப் பயலுக்கு வேலைக்குல்லாம் ரெகமெண்ட் பண்ண இருந்தேன். ஆனா, அந்தப் பொட்டச்சி உடம்பைக் காட்டி என் பிள்ளைய...”

“டேய் டேய்... விடு. ஒரு ஹையர் அஃபீஷியல் நீ. இதெல்லாம் ஒரு விஷயமா, இங்க என் சீனியர் ஆபீஸர் ஒருத்தர் இருக்காரு. ரிட்டயர்டு ஆனவர். ஸ்ட்ரோக்னால கை கால் வரலை. ஆனா மூளை பயங்கர ஷார்ப். பேரு பெரேரா... வா அவரைப் போய்ப் பார்ப்போம்.

“இப்படியேவா?”

“அவரே இப்போம் ஃபுல்லாத்தான் இருப்பாரு. வா போலாம்.”

பிளசரில் போகும்போதே இருவரும் பேசிக்கொண்டே சென்றார்கள். “அந்த வல்லநாடு ரௌடி கேஸ், தாழையூத்துல எம்.எல்.ஏ மேல குண்டுபோட்ட கேஸ்... எல்லாத்தையும் பெரேராதான் டீல் பண்ணாரு. ஒரு சின்ன எரர்கூட இருக்காது. நீயே பார்க்கத்தானே போற.”

சொன்னதுபோலவே அவர் வீட்டுக்குப் போகும்போது குடித்துக்கொண்டுதானிருந்தார். ஞானவேல் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட பெரேரா, இரண்டே நிமிடங்களில் ஒரு வழியைச் சொன்னார்.

“அந்த லேடி ரோசம்மா மேல பெரிய கேஸாப் போடுங்க. முடிஞ்சா திருவிழாவுக்கு வந்தவங் களுக்கு கஞ்சா வித்த அக்யூஸ்ட்டா அவளை நிக்க வெச்சு பேப்பர்ல போட்டோ நியூஸ் கொடுங்க. ஈஸ்ட் ஸ்டேஷன்ல நான் பேசுறேன். உங்க மகன் விஷயமும் இதுல முடியும். பர்லாந்து குரூப்பும் டிஸ்ட்டர்ப் ஆகும்.”

“பர்லாந்து குரூப் எப்படிங்க..?”

“பெரிய பர்லாந்து ரைட் ஹேண்ட் சமுத்திரம்தானே அந்த லேடியை வெச்சுருக்கான்... அவ அவமானப்பட்டு உள்ள போனா எல்லாம் நடக்கும். நான் சொல்றேன்ல... என் சர்வீஸ்லதான் இந்த குரூப்பை என்னால எதுவும் செய்ய முடியல... ஏற்கெனவே எங்க பர்சனல் கணக்கும் தீர்க்கப்படாம இருக்கு. நான் சொல்ற மாதிரி செய்யுங்க. எல்லாரோட ஆட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவரலாம்.”

பெரேராவிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினார்கள். கிளம்பும்போது பெரேரா, “வி வில் மீட் அகெய்ன்... இந்த மொத்த கேங்கையும் தடம் தெரியாம ஆக்கிடலாம்” என்றபடி புகைப்பானைப் பற்றவைத்தார்.

சிவன்காளைக்கு அடுத்த நாள்தான் பம்பாய் ரயில். கோவில்பட்டியிலிருந்து புறப்பட இன்னும் நேரமிருந்தது. அவன் தன் அப்பாவுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்று பயந்து கொண்டேயிருந்தான். எதற்கும் ஒரு எட்டு தூத்துக்குடிக்குப் போய் தன் அப்பாவைப் பார்த்துவிட்டு வந்துவிடலாமே என்று அவனுக்குத் தோன்றியது!

(பகை வளரும்...)



from Latest news https://ift.tt/PQmw9dS

Post a Comment

0 Comments