பக்கிங்காம் கால்வாய்: `அமைச்சரே நேர்ல வந்தும், எந்த தீர்வும் எட்டப்படல'- குமுறும் சேப்பாக்கம் மக்கள்

சென்னை சேப்பாக்கம்- பக்கிங்காம் கால்வாயை சீரமைக்க அரசு முடிவுசெய்திருக்கிறது. இதனால், அந்தக் கால்வாயினை ஒட்டி வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அவர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்க திட்டமிட்டிருக்கிறது.

இது குறித்த‌ப் பேச்சுவார்த்தை மற்றும் கணக்கெடுப்பு, சேப்பாக்கம் – லாக் நகர்ப் பகுதியில் நடைபெற்றது. இதில் மயிலாப்பூர் வட்டாட்சியர் லதா, வருவாய்த்துறை அதிகாரிகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதிகாரிகளிடம் பேசிய மக்கள், ``மாற்று இடம் தரும் வரை, இந்த இடத்திலிருந்து எங்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படக் கூடாது" என கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள், ``இந்தப் பிரச்சனை கிட்டத்தட்ட 50 வருஷமா நடந்துட்டு இருக்குன்னு சொல்றாங்க. ஆனா எங்களுக்குத் தெரிஞ்சே 2006-ல இருந்து நடந்துட்டு இருக்கு. `பக்கிங்காம் கால்வாய மறுசீரமைப்பு செய்யப் போறோம், அதுனால இங்க இருக்க வீடுகள இடிக்கப் போறோம். உங்களுக்கு வேற இடத்துல குடியிருப்பு அமைச்சு தர்றோம்'னு சொன்னாங்க.

பகுதி மக்கள்

ஆனா எங்களுக்கு 5 கி.மீ சுற்று வட்டாரத்துல குடியிருப்பு அமைச்சு தரச் சொல்லிக் கேட்டோம். அவங்க முதல்ல சேலையூர், கண்ணகி நகர்ப் பகுதிகள்ல குடியிருப்பு அமைச்சு தர்றோம்னு சொன்னாங்க. ஆனா அது இங்க இருந்து 50 கி.மீ தூரத்துல இருக்கு. இங்க குழந்தைகளோட படிப்பு, எங்க வேலைன்னு எல்லாமே இந்தப் பகுதியைச் சுத்தி தான் இருக்கு. எங்களுக்கு நாங்க இங்க என்ன வேலை பாக்குறோமோ அந்த வேலை மட்டும்தான் தெரியும். இங்க நிறைய பேருக்கு படிப்பும் பெருசா இல்ல.

இங்க கிட்டத்தட்ட 53 வீடுகள் இருக்கு. மறுசீரமைப்புப் பணிக்கு இடைஞ்சலா இருக்கும்னு எங்கள காலி பண்ணச் சொல்றாங்க. நாங்க காலி பண்ணமாட்டோம்னு சொல்லல. எங்களுக்கு சரியான மாற்று இடம் கொடுத்தா நாங்க மாறிக்கிறோம். ஆனால் அதற்கான வேலைகள்ல அரசு அதிகாரிகங்க இப்ப வரைக்கும் இறங்கல.

தேர்தல் அப்போ இந்தத் தொகுதி வேட்பாளரா இருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தப் பிரச்னையைச் சரிசெய்வதாக தேர்தல் வாக்குறுதியில சொல்லியிருந்தார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அதிகாரிகளும் அமைச்சரும் வந்து பார்வையிட்டாங்க. இங்க இருக்க 53 குடும்பங்களும் சேர்ந்து மனு கொடுத்தோம்.

ஆனா, அதுக்கு அப்புறமும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படல. எங்களுக்கு சரியான இடம் கொடுக்காம எங்ககிட்ட இருந்து பயோமெட்ரிக் மட்டும் கேக்குறாங்க. நாங்க ஒன்னா சேந்து மாற்று இடத்துக்கான ஆதாரத்தை கையில கொடுத்தால்தான் பயோமெட்ரிக் போன்ற ஆதாரங்களைக் கொடுப்பது என்பதில் தீவிரமாக இருக்குறோம். அதனால இப்போ அதிகாரிகள் வெறுமனே போட்டோவும், வீட்டு நம்பர், மொபைல் நம்பர், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைய மட்டும் குறிச்சிட்டுப் போனாங்க“ என்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது அங்கிருந்த சி.பி.எம் கட்சியின் நிர்வாகி ஜி.செல்வாவிடம் பேசினோம். ``அதிகாரிகள் இந்தப் பகுதி மக்களோட பயோமெட்ரிக்க எடுத்து, அவங்கள நகரைவிட்டு வெளியேத்துறதுக்கான வேலைய தொடங்கிட்டாங்க. கடந்த பத்து நாளாவே அதிகாரிகங்க இங்க‌ வந்து, `நீங்க பயோமெட்ரிக் கொடுக்கனும், கொடுத்தா மட்டும்தான் உங்களுக்கு வீடு'ன்னு மிரட்டிட்டு இருக்காங்க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில அந்த அதிகாரிகள் கிட்டயும் பேசுனோம். ஏற்கெனவே 2019-லகூட இதே மாதிரி பயோமெட்ரிக் தரவுகள இந்த மக்கள் கிட்டருந்து எடுத்துருக்காங்க. ஆனா அதுக்கு அப்பறம் எதுவுமே பண்ணல. இப்போ மறுபடியும் பயோமெட்ரிக் எடுக்க வந்ருக்காங்க. ஆனா இந்த முறை மாற்று குடியிருப்புக்கான சரியான தகவல்களைச் சொன்னால் மட்டுமே பயோமெட்ரிக் தரவுகள் தரப்படும்னு வாக்குவாதத்துல ஈடுபட்டதால, அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகச் சொல்லிட்டுப் போயிருக்காங்க.

பக்கிங்காம் கால்வாய்

மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தல் அப்போ, இந்தப் பகுதி மக்களிடம் பேசிய தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பக்கிங்காம் கால்வாய்ப் பகுதியில் சுவர் எழுப்பி, அவர்கள் இங்கேயே வாழ்வதற்கான தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய முயல்வதாகச் சொன்னார். ஆனால் இப்போது, அதற்கு நேர் மாறாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது‌.

அதுமட்டுமல்லாம இந்தக் கால்வாய்ல சீரமைப்புப் பணிகள் நடக்கவிருப்பதால், இந்தப் பகுதியிலுள்ள பறக்கும் ரயில் சேவையையும் அடுத்த மாதம் ரத்து பண்றதா அறிவிச்சுட்டாங்க. இது குறித்து எந்த ஆலோசனையும் நடத்தப்படல. அதிகாரிகள் நினைக்குறாங்க... அதையே அறிவிப்பு செய்றாங்க. இது சரியான ஜனநாயக நடவடிக்கை அல்ல. இது குறித்த வெளிப்படையான அறிக்கையை அரசு சமர்ப்பிக்க வேண்டும்” எனக் கூறினார்.

மக்களின் வாழ்வாதரம் குறித்து இந்தப் பிரச்னையை சரியான முறையில் அணுகி, தீர்வு காண முயல்வது அரசு இயந்திரத்தின் பொறுப்பாகும்!



from Latest news https://ift.tt/cyoin9u

Post a Comment

0 Comments