`பதநீரை, சாராயத்துடன் ஒப்பிட கூடாது' பனையேறிகளின் போராட்டத்தைப் புரிந்துகொள்ளுமா அரசு?

சுற்றுச்சூழல் என்பது மரம், காற்று, நீரை மட்டும் பாதுகாப்பது அல்ல. சூழலுடன் இணைந்த மக்களின் வாழ்வாதரத்தையும், வாழ்வியலையும் பாதுகாப்பதே சூழலியல் பாதுகாப்பாகும். ஆனால் இங்கு காக்கா குருவிகளுக்கு பாவம் பார்ப்பவர்கள் மனிதர்களின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதில்லை. ஆரோக்கியமான உணவுகளில் முக்கியமானது பனை. பனை பாதுகாப்பு என்பது பனைமரங்களை மட்டும் பாதுகாப்பதல்ல. அதனையே நம்பி இருக்கும் பனையேறிகளையும் பாதுகாப்பதாகும்.

பனைக்காக மக்களின் போராட்டம்

ஆனால் தமிழகத்தில் கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதை காரணமாக வைத்து பனையேறிகள் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது காவல்துறை. விழுப்புரத்தில் விஷச் சாராயம் பிரச்னை தீவிரமாக உள்ளதால் இதனைக் கட்டுக்குள் வைக்கிறேன் என்ற பெயரில் பனையேறிகளை பொய்வழக்கில் கைது செய்துள்ளது காவல்துறை. இதனை கேள்வி கேட்ட பெண்களையும் இழிவு படுத்தி பேசியுள்ளார் காவலர். இதனைக் கண்டித்து கடந்த ஒரு வாரமாக விழுப்புரம் பூரிக்குடிசையில் மக்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை காவல்துறை நேற்றுமுன்தினம் கைது செய்து மண்டபத்தில் அடைத்ததை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில், அவசர பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

சென்னை காலநிலை செயற்பாட்டு குழுவைச் சேர்ந்த பெனிஷா பேசுகையில், "காவல்துறை அதிகாரிகள் பனையேறி குடும்பத்து பெண்களை இழிவாக பேசியுள்ளனர். பெண்கள் அறிவார்ந்து செயல்பட்டால், அரசியல் கேள்விகளை முன்வைத்தால் அவர்களை இழிவுபடுத்துவதே வழக்கமாகி விட்டது. விளிம்புநிலையில் உள்ள பெண்களாக இருந்தால், பாலினத்தின் அடிப்படையிலும் இழிவுபடுத்துகிறார்கள்" என்றார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் அனந்து, பெனிஷா, சிவக்குமார், பாரதிக்கண்ணன் உள்ளிட்டோர்....

வழக்கறிஞர் சிவக்குமார் பேசுகையில், "பனை உணவு ஆரோக்கியமானது. அதனால் பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மரங்களை பாதுகாக்க வேண்டும் என்றால் பனையேறிகள் இருந்தால் மட்டுமே முடியும். விழுப்புரத்தில் உள்ள பனையேறிகள் எல்லாரும் முறையான லைசென்ஸ் வாங்கியுள்ளனர். இருப்பினும் காவல்துறையினால் தாக்கப்படுகின்றனர். பனையேறிகள் கள் இறக்குவதற்காக மட்டுமல்ல, பதநீர் இறக்கினாலும் தாக்கப்படுகின்றனர். பனையேறிகள் மீதான காவல் துறை நடவடிக்கை அப்பட்டமான மனித உரிமை மீறல்.

பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து பேசுகையில்,"போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது. கள்ளில் கலப்படம் நடப்பதால் கள்ளை அரசு தடை செய்துள்ளது. காய்கறி பழங்கள் என அனைத்து உணவுகளிலும் கலப்படம் நடக்கிறதே. அனைத்து உணவு பொருட்களும் தடை செய்யப்படுமா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

செயற்பாட்டாளர் பாரதிகண்ணன்,"உணவு அனைவருக்கான உரிமை. கள்ளும் பதநீரும் மக்களின் உணவு. இதனை சாரயத்துடன் ஒப்பிட கூடாது. பனையேறிகள் அவர்களுக்கான நிலத்தில் போராடினார்கள். அவர்களை கைது செய்த காவல்துறை குடிப்பதற்கு நல்ல குடிநீரை கூட கொடுக்கவில்லை" என்றார்.

பதநீர் இறக்கும் பானை

கைது செய்யப்பட்ட பனையேறிகள் மண்டபத்தில் அடைக்கப்பட்ட பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். பெண்களை இழிவாக பேசிய காவல்துறை அதிகாரி மன்னிப்பு கேட்டுள்ளார். பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று காவல்துறை வாக்குறுதி வழங்கியுள்ளது. ஆனால் இதுவெல்லாம் பனையேறிகளின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியாது.



from Latest news https://ift.tt/1DFjHoq

Post a Comment

0 Comments