"எல்லாருமே இங்க மனுஷங்களா இருக்கறதில்ல"- திருநங்கை புஷ்பா

``இந்த கோர்ட் வாசல்லதான் நான் பொறந்தேன். இங்கதான் என் பொழப்பு.

இந்த கோர்ட், இங்க வர்ற மனிதர்கள், இந்தத் தெரு, இந்த ரோடு, ஏன், இந்த வெயில்கூட எனக்குப் பழகிப்போனதுதான். எதுவுமே பெரிய அச்சத்தைத் தந்ததில்ல. தங்குற இந்த பிளாட்பாரத்துல வர்ற மனுஷங்களும் இரவுகளும்தான் என்னை அதிகமாக பயமுறுத்தியிருக்கு. ராத்திரியில் யார் எப்படி வர்றாங்கனே சொல்ல முடியாது; மனுஷங்க எல்லாருமே இங்க மனுஷங்களா இருக்கறதில்ல. ஒவ்வொரு ராத்திரியும் விடியுற வரைக்கும் நிம்மதி சாத்தியமில்ல." கொலை முயற்சி, போலி வழக்கு, தற்கொலை என இம்மண்ணில் தன் இயல்பில் வாழ்வதற்காக திருநங்கை புஷ்பா கடந்திருப்பவை ஏராளம்.

திருநங்கை புஷ்பா

தன் வாழ்வில் பல தசாப்தங்களைத் தன்மீது நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராடியே கழித்தவர். யார் ஆதரவுமின்றித் தனி ஒருவராகப் போராடிவரும் புஷ்பாவின் குரல்களில் அவ்வளவு அயர்ச்சி. ``நான் திருநங்கையா மாறின சமயத்துல என் வீட்டுல யாருக்குமே அது பிடிக்கல. என்னை பயங்கரமா அடிச்சாங்க. கை, கால் எல்லாம் கூட ஒடைச்சிருக்காங்க. பல சமயங்கள்ல அடிவாங்கி ரத்தம் சொட்ட சொட்ட சாப்பிட்டிருக்கேன். சாப்பாட்டுல என் ரத்தமும் கலந்திருக்கும். கூட உறுதுணையா இருக்க வேண்டிய அண்ணனே என்னை இப்படி அடிச்சான்.

புள்ளைங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா துடிச்சுப்போற அப்பா, அம்மாங்க நான் அடிவாங்குறப்பல்லாம் தடுக்கல. அப்படி நான் எந்தத் தப்பும் பண்ணலையே! என் இயல்புல நான் வாழ விரும்புறது ஏன் அவங்கள இந்த அளவுக்கு ஆத்திரப்படுத்துச்சுன்னு தெரில. அத்தனை அடி வாங்கியும் என்னால மாற முடில. நான் இயல்பாவே என்னை ஒரு பொண்ணா உணர ஆரம்பிச்சுட்டேன். வீட்ல திடீர்னு ஒருநாள் டாக்டர் ஒருத்தர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. ஹார்மோன் மாற்றம் பத்தி டாக்டர் எவ்வளவோ சொல்லியும் எங்க வீட்ல இருக்கவங்களுக்கு அது புரியல.

திருநங்கை புஷ்பா சொல்லும் கோயில்

நச்சரிப்பு தாங்காம டாக்டர், `விஷம் வச்சுக் கொல்றது ஒன்னுதான் வழி'ன்னு சொன்னாரு. ஆனா, எங்க வீட்ல அதைப் பண்ணல. இத்தனைக்கு அப்புறமும் நான் என் இயல்புலதான் இருந்தேன். இதைச் தெரிஞ்சுகிட்ட திருநங்கைகள் சிலர் சேர்ந்து என்னை மடி எடுத்தாங்க. அவங்களோட ஜமாத்லயே என்னையும் வந்து சேர்ந்துக்கச் சொன்னாங்க. ஆனா, நான் போகல. அங்க இருக்கிற சில விதிமுறைகள்ல விருப்பம் இல்ல. ஜமாத் குருகிட்ட கடைக்குப் போய் வசூல் பண்ணிகிட்டு வர்ற காசக் குடுக்கணும். காசு கம்மியா இருந்தா அடிப்பாங்க. சில நேரங்கள்ல சிலர் தப்பான தொழிலுக்குப் போறதும் உண்டு. அதனால நான் அங்க போகல. சில கடைகள்ல காசு கேட்பேன்.

பல நேரங்கள்ல பூக் கட்டுவேன். அதைத்தாண்டி என் வாழ்க்கை எங்க கோயில்தான். எங்க குடும்பத்துக்குப் பல தலைமுறைகளா பாத்தியப்பட்ட ஒரு அம்மன் கோயில் இருந்துச்சு. அந்தக் கோயில்தான் எனக்கு எல்லாமே. அங்கதான் பல நேரங்கள்ல இருப்பேன். பூக் கட்டுவேன். நிம்மதி என் வாழ்க்கைல இருக்கவே கூடாதுங்கிறது விதியான்னு தெரில. அந்தக் கோயிலையும் இடிச்சாங்க" எனச் சொல்லும்போது உடைந்து அழத் தொடங்கினார்.

திருநங்கை புஷ்பா

அந்தக் கோயில்ல நான் கஞ்சா விக்கிறதாவும், தப்பான தொழில் பண்ணுறதாவும் சொல்லி பொய்யான புகார சிலர் சொன்னதால, மாநகராட்சி அந்தக் கோயில இடிச்சிட்டாங்க. கஞ்சா கடத்துனது நானா இருந்தா என்னைக் கைது பண்ணியிருக்கலாம். ஏன் கோயில இடிக்கணும்னு கோர்ட் வாசலுக்கு நடையா நடந்தேன். எனக்காக ஒரு வக்கீல் உதவ வந்தாரு. எவ்வளவோ போராடியும் கடைசில கோயில இடிக்கிறத என்னால தடுக்கவே முடியல. அந்த இடிபாடுகள்ல என்னோட ஆதார் கார்டும் சேர்ந்து காணாமப் போயிருச்சு.

நம்ம கண்ணு முன்னாடியே நமக்கு இருக்கிற ஒரே சந்தோஷம், நிம்மதி எல்லாம் தரமட்டமாகுறதைப் பாக்குறது எவ்வளவு வேதனைங்கிறது சொல்லிப் புரிய வைக்கிறது ரொம்ப கஷ்டம். அந்த வேதனை தாங்காம கோர்ட்லயே ஒரு மரத்துல என் சேலைல தூக்கு மாட்டினேன். அங்க இருந்தவங்க சிலர் காப்பாத்திட்டாங்க. அம்மன் சிலையை மட்டுந்தான் வக்கீல் மூலமா மீட்க முடிஞ்சது. என் வாழ்க்க முழுக்க பிளாட்பாரத்துலயே இருந்தாலும், என் அம்மன் வெறுந்தரைல இருக்கிறதை என்னால சகிச்சுக்க முடில.

சாப்பிடக்கூட பிடிக்காம இருந்தது. வக்கீல்தான் 10,000 ரூபா செலவு பண்ணி கூடாரம் அமைச்சுக் கொடுத்தாரு. அந்தக் கோயில்லதான் இப்போ இருக்கேன். பூக் கட்டி விப்பேன். ஆதார் கார்டு புதுசா வாங்கறதுக்காக பலர்கிட்ட உதவி கேட்டேன். பல திருநங்கைகளே காசு வாங்கிட்டு ஏமாத்திட்டாங்க. படிக்காமப் போனதால என்னாலும் ஆதார் நம்பர்லாம் குறிச்சு வைக்க முடில. படிப்பு எவ்வளவு முக்கியம்னு வாழ்க்கைல கஷ்டப்படுற அத்தனை இடத்திலும் தோணியிருக்கு. கலெக்டர் ஆபீஸ்ல வேலை பாக்குற ராதா என்கிற திருநங்கைதான் எனக்குத் திருநங்கைக் கார்டு வாங்கித் தந்தாங்க.

அது மூலமா உதவி கிடைக்குது. நான் பாத்த சில நல்ல மனுஷங்கள்ல அவங்களும் ஒருத்தர்.சின்ன வயசுல என்னைப் பெத்தவங்களுக்கு என்னைப் படிக்க வைக்கணும்னு தோணல. ஒருவேளை படிச்சிருந்தா அது பெரிய பலமா இருந்திருக்கும். என்னைக்குமே கைவிடப்பட்டவங்களுக்கு படிப்பு மட்டும்தான் பக்கபலமா இருந்திருக்கு. ஒருவகைல ராதாவோட படிப்பு இன்னைக்கு அவங்களுக்கு மட்டுமல்லாம எனக்கும் உதவுது பாத்தீங்களா.

மனுஷன்கூட சக மனுஷனுக்கு உதவுவானான்னு தெரில. படிப்புதான் உதவும்" எனச் சொல்கிற புஷ்பா அக்கா, தன் வாழ்வில் இழந்தவற்றில் முக்கியமானதாக நினைப்பது கல்வியைத்தான். அந்தத் தெருவிலிருக்கிற பலரும் கடை வியாபாரத்தின்போது, சில சடங்குகளுக்காக புஷ்பா அக்காவை ராசியானவர்களாகப் பார்க்கிறார்கள். ஆனால், யாரும் அவரைத் தங்களுள் ஒருவராகப் பார்க்கவில்லை என வேதனைப்படுகிறார் புஷ்பா அக்கா.

- கெ.பிரிஸில்லா ஷெரின், கி.ராம சந்துரு



from Latest news https://ift.tt/4BdEQzn

Post a Comment

0 Comments