மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு, உத்தவ் தாக்கரேயிக்கு மாநில அரசு பல்வேறு வழிகளில் நெருக்கடி கொடுத்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அதோடு உத்தவ் தாக்கரே கட்சியில் இருப்பவர்களை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கட்சியினர் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. இதனிடையே மும்பை மாநகராட்சியில் நடந்த 12 ஆயிரம் கோடி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைக்க ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு இருக்கிறார்.
அதோடு கொரோனா காலத்தில் சிகிச்சைக்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக கூறி தாக்கரே மற்றும் சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத்திற்கு மிகவும் நெருக்கமானவர்களின் இல்லங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று ரெய்டு நடத்தினர். தற்போது புதிய திருப்பமாக உத்தவ் தாக்கரே வீட்டிற்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மாநில அரசு வெகுவாக குறைத்துக்கொண்டுள்ளது. உத்தவ் தாக்கரே வீட்டிற்கு வெளியில் எப்போதும் சில போலீஸ் வாகனங்களும், ஏராளமான போலீஸாரும் நிறுத்தப்பட்டு இருப்பது வழக்கம்.
ஆனால் திடீரென போலீஸ் வாகனங்கள் மற்றும் போலீஸார் அனைவரும் திரும்ப பெறப்பட்டுவிட்டனர். உத்தவ் தாக்கரே வீட்டிற்கு வெளியில் எந்த ஒரு போலீஸ் வாகனமும் இல்லை. இது குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரேயின் ஊடக பிரிவு ஆலோசகர் ஹர்சல் பிரதான், ``உத்தவ் தாக்கரேயிக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு ஒய் பிளஸ் பாதுகாப்பாக குறைக்கப்பட்டுள்ளது. ஆதித்ய தாக்கரேயிக்கு வழங்கப்பட்டு வந்த ஒய் பிளஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ரேஷ்மி தாக்கரே மற்றும் தேஜஸ் ஆகியோரின் பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
ஆனால் அப்படி பாதுகாப்பு எதுவும் குறைக்கப்படவில்லை என்றும், கூடுதலாக நிறுத்தப்பட்டு இருந்த பாதுகாவலர்கள் தான் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ``உத்தவ் தாக்கரேயிக்கு தொடர்ந்து இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதே போன்று ஆதித்ய தாக்கரேயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பும், ரேஷ்மி தாக்கரேயிக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பும், தேஜஸ் தாக்கரேயிக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இசட் பிரிவு பாதுகாப்பில் குண்டு துளைக்காத வாகனம், 58 போலீஸாரும் 24 மணி நேரமும் பாதுகாப்பு கொடுப்பார்கள். இந்நிலையில் நடத்தப்பட்ட ஆய்வில் உத்தவ் தாக்கரே இல்லத்தில் அளவுக்கு அதிகமாக போலீஸாரும், பாதுகாப்பு வாகனமும் நிறுத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவை மட்டும் திரும்ப பெறப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மாநில உள்துறை அமைச்சகமும் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ``தாக்கரே குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில ரிசர்வ் போலீஸார் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
அவர்கள் முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளனர். இது தவிர கூடுதல் போலீஸாரும் திரும்ப பெறப்பட்டுள்ளனர். முன்னதாக உத்தவ் தாக்கரேயிக்கு சிவசேனா தொண்டர்கள் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்று அக்கட்சியினர் தெரிவித்திருந்தனர். தாக்கரே குடும்பத்தினர் எப்போதும் தீவிரவாதிகளின் பட்டியலில் இருந்து வருகின்றனர். எனவே பால் தாக்கரே காலத்தில் இருந்தே மும்பை பாந்த்ராவில் உள்ள மாதோஸ்ரீ பங்களாவில் எப்போதும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருப்பது வழக்கம். ஆனால் இப்போது அவை குறைக்கப்பட்டுள்ளது பழிவாங்கும் நடவடிக்கையா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
from Latest news https://ift.tt/CkMF5oZ
0 Comments