ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ நீக்குவது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம் கொண்டுவருவது ஆகியவைதான் பா.ஜ.க-வின் நீண்டகால செயல்திட்டங்கள். 2019-ல் மோடி தலைமையிலான பா.ஜ.க இரண்டாவது முறையாக மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன், பிரிவு 370 நீக்கப்பட்டது. வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அயோத்தியில் ராமர் கோயிலைத் திறக்கப்போகிறார்கள். அப்படியே, பொது சிவில் சட்டத்தையும் கொண்டுவந்துவிடலாம் என்று மோடி அரசு நினைக்கிறது.
ஆகவேதான், பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார். வாக்கு வங்கிக்காவும், தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவும் பொது சிவில் சட்டம் என்ற அஜெண்டாவைக் கையிலெடுக்கிறது என்று பா.ஜ.க-மீது மற்றவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். பிரதமர் மோடியோ, ‘வாக்கு வங்கி அரசியலுக்காக சிலர் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள்’ என்று பேசியிருக்கிறார்.
மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், ஜூன் 27-ம் தேதி மத்தியப் பிரதேசத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு பா.ஜ.க-வினர் மத்தியில் பேசினார். அப்போது, “நாட்டில் சிலர் குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டுவருகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி, அனைவருக்கும் சம உரிமைகளை வழங்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டமே கூறுகிறது.
குடும்பத்தில் ஓர் உறுப்பினருக்கு ஒரு சட்டமும், இன்னோர் உறுப்பினருக்கும் வேறொரு சட்டமும் இருந்தால் அந்தக் குடும்பம் முறையாகச் செயல்படுமா... அதேபோல, வெவ்வேறு விதமான சட்டங்களுடன் நாடு எப்படி வளர்ச்சி காண முடியும்? எனவே, பொது சிவில் சட்டம் அவசியம்” என்று மோடி பேசியிருக்கிறார்.
பொது சிவில் சட்டம் குறித்து நீண்டகாலமாக விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தியா, பல்வேறு மதங்களையும், பல்வேறு இனங்களையும் கொண்ட நாடு. இங்கு, சிறுபான்மையினரான முஸ்லிம்கள் ‘ஷரியத்’ சட்டத்தைப் பின்பற்றிவருகிறார்கள். இந்தச் சட்டத்தைப் பின்பற்றுவது தங்களின் மத நம்பிக்கையில் ஒன்று என்பது அவர்களின் நிலைப்பாடு. இது, ‘முஸ்லிம் தனிநபர் சட்டம்’ என்கிற பெயரில் 1937-ம் ஆண்டு இயற்றப்பட்டது. முஸ்லிம் தனிநபர்கள், அவர்கள் குடும்பம் பற்றிய அக்கறை, முஸ்லிம் சமூகம் சார்ந்த திருமணம், மணமுறிவு, வாரிசு, வக்பு உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களைக் கையாள்வது ஆகிய நான்கு விவகாரங்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும்.
இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றும், அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்கிறது பா.ஜ.க. இது, பா.ஜ.க-வின் அப்பட்டமான அரசியல் அஜெண்டா என்று எதிர்க்கட்சியினரும், சமூகச் செயற்பாட்டாளர்களும் விமர்சிக்கிறார்கள். இந்த அஜெண்டாவின் மூலம், இந்துக்களின் வாக்குகளைத் திரட்டுவது பா.ஜ.க-வின் மறைமுகத் திட்டம் என்கிறார்கள். மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், பொது சிவில் சட்டம் பற்றி பிரதமரே பேச ஆரம்பித்திருக்கிறார் என்றும் விமர்சிக்கிறார்கள்.
மோடியின் பேச்சை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் விமர்சித்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொள்கையால் வழிநடத்தப்படும் பெரும்பான்மை அரசு, பொது சிவில் சட்டத்தை மக்கள்மீது திணிக்க முடியாது. அது மக்களிடம் பிரிவினையை அதிகப்படுத்தும். பொது சிவில் சட்டத்தை வலியுறுத்திப் பேசிய பிரதமர் மோடி, தேசத்தை ஒரு குடும்பத்துடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். குடும்பம் என்பது ரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தேசம் அரசியல் ஆவணமான அரசியலமைப்புச் சட்டத்தால் இணைக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
மேலும், “ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் வேற்றுமைகள் உண்டு. நமது அரசியலமைப்பு, நாட்டு மக்களுக்கிடையே உள்ள வேற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கிறது. பொது சிவில் சட்டம் என்பது ஓர் ஆசை. கொள்கையால் இயக்கப்படும் ஒரு பெரும்பான்மை அரசு, அதை மக்கள்மீது திணிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சாத்தியமில்லை என்ற கடைசி சட்ட ஆணையத்தின் அறிக்கையை மோடி வாசிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார் ப.சிதம்பரம்.
எதிர்த்தரப்பினரின் விமர்சனங்களை பா.ஜ.க பொருட்படுத்தவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை பா.ஜ.க-வை நோக்கித் திருப்புவதற்கு இது பயன்படும் என்று கணக்குப் போடுகிறார்கள். ஆகவேதான், பிரதமரே இந்த விஷயத்தை நேரடியாகப் பேசியிருக்கிறார். இனி, நாடு முழுவதும் பெரிய பிரசாரமாக பா.ஜ.க-வினர் இதை முன்னெடுக்கத் தொடங்குவார்கள். ஆனாலும், விலைவாசி உயர்வு உட்பட பல விவகாரங்களில் பா.ஜ.க-வின் ஒன்பதாண்டுக்கால ஆட்சிமீது மக்களுக்கு இருக்கும் எதிர்ப்புணர்வை, பொது சிவில் சட்ட விவகாரம் தணித்துவிடுமா என்பது பெரும் கேள்விக்குறிதான்.
from Latest news https://ift.tt/gRTNHLX
0 Comments