Motivation Story: வீட்டு வேலை செய்யும் பெண் டு பிரபல எழுத்தாளர்! - பேபி ஹால்தார் வென்றது எப்படி?

`ஓர் எழுத்தாளர் தான் தொலைத்துவிட்டதையோ, மறந்துவிட்டதையோ பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தால், அவரால் ஒரு வரிகூட எழுத முடியாமல் போகலாம்.’ - எழுத்தாளர் பேபி ஹால்தார் (Baby Halder).

`நேரம் சரியில்லை’, `சப்போர்ட் பண்ண ஆளில்லை’, `சூழல் சரியில்லை’... இவையெல்லாம் வாழ்க்கையில் ஒரு வட்டத்துக்குள்ளேயே குறுகிப்போனவர்கள் சொல்லும் காரணங்கள். ஒன்றை அடைய வேண்டுமென்றால் எதுவும் தடையில்லை. நம் கண்முன் வாழும் உதாரணம், பேபி ஹால்தார் (Baby Halder).

இந்த மனுஷி வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. துயரங்களால் தோய்ந்த இளம் பருவம். அது போதாதென்று, வாய்த்தவரோ கொடுமைக்காரக் கணவர். அவரிடமிருந்து தப்பித்து டெல்லிக்கு வந்து வீட்டு வேலை பார்க்க ஆரம்பித்தார். அன்றிலிருந்து அவருடைய புரொஃபஷன் `வீட்டு வேலை செய்யும் பெண்’ என்று ஆனது. எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாத அன்றாடங்காய்ச்சிப் பிழைப்பு; அப்படியே சுருண்டு போயிருக்கவேண்டிய வாழ்க்கை; பேபி ஹால்தார் எடுத்ததோ எழுத்தாளர் அவதாரம். அதுவும் அவர் எழுதிய புத்தகங்கள் `Best Seller' வரிசையில் நின்றன. இது, அவருக்கு எப்படிச் சாத்தியமானது... கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா?

1973-ல் காஷ்மீரில் பிறந்தார். அங்கிருந்து பிழைப்புக்காக மேற்கு வங்காளத்திலிருக்கும் முர்ஷிதாபாத்துக்குக் குடிபெயர்ந்தது குடும்பம். அப்பா பெருங்குடிகாரனாக இருந்தார். அதனாலேயே தினமும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை. வீடே ரணகளப்படும். அப்போது பேபி ஹால்தார் குழந்தை. வீட்டில் கூச்சல், சத்தம், அடியில் அலறும் அம்மா இவையெல்லாம் அந்தக் குழந்தைக்குத் தந்தது அழுகை ஒன்றைத்தான். இதையெல்லாம்கூட பிறர் சொல்லித்தான் பின்னாளில் அறிந்துகொண்டார் அவர். கணவரின் அடாவடி தாங்காமல், அம்மா வீட்டைவிட்டு வெளியேறினார். குழந்தையான பேபியைக் கைவிட எப்படித்தான் அவருக்கு மனம் வந்ததோ... அல்லது குழந்தையைக் கையோடு அழைத்துப்போனால் பிற்பாடும் கணவரின் தொல்லை தொடரும் என நினைத்தாரோ, என்னவோ... பேபி ஹால்தாரை அவர் தன்னுடன் அழைத்துப்போகவில்லை. அந்தநேரத்தில் பேபியின் வயது 4.

பேபி ஹால்தார்
`வாழ்வில் புதிதாக ஒன்றைத் தொடங்குவதற்கு `ரொம்ப தாமதமாகிவிட்டது’ என்ற எண்ணம் அர்த்தமற்றது. எதையும் எப்போதும், எந்த வயதிலும் தொடங்கலாம்.’ - பேபி ஹால்தார்.

பணம், நிலம், சொத்து எதுவுமில்லாத ஒரு குழந்தை. அதற்கு ஆதரவுக்கரம் நீட்ட யார் வருவார்கள்... ஒருவர் வந்தார். `கொஞ்சம் வளர்ந்தால் வீட்டு வேலை செய்ய ஆகுமே...’ என்கிற எண்ணம் அவருக்கு. இடையில் முர்ஷிதாபாத்திலிருந்து துர்காபூருக்கு இடம்பெயர்ந்தது அந்தக் குடும்பம். துர்காபூரில்தான் வளர்ந்தார் பேபி ஹால்தார். படிப்பது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், வீட்டுச்சூழல் அவரை அதற்கு அனுமதிக்கவில்லை. `பெண் பிள்ளை படிச்சு என்ன ஆகப்போகுது... அதான் நல்லா வளர்ந்துட்டா இல்லை. அப்புறம் என்ன... வீட்டு வேலையெல்லாம் யாரு பார்க்குறது?’ என்ற மாற்றாந்தாயின் பேச்சுக்கு செவி சாய்த்தார் வளர்ப்புத் தந்தை. ஆறாம் வகுப்போடு பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பேபிக்கு 12 வயது. அறியாத வயதில், சின்னஞ்சிறு பெண் குழந்தைக்கு அந்தத் துன்பம் நேர்ந்தது. அதை அவரே பின்னாளில் ஒரு பத்திரிகையில் விவரித்தார்... ``அப்போது நான் என் சிநேகிதிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். யாரோ வந்து என்னை அழைத்துப்போனார்கள். வீடு முழுக்க விருந்தினர்கள் நிறைந்திருந்தார்கள். என்னைப் புடவை கட்டச் சொன்னார்கள். மணமேடையில் கொண்டுபோய் அமர்த்தினார்கள். என் பக்கத்தில் ஓர் ஆண் உட்கார்ந்திருந்தார். அவரை அதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. அவருக்கு என்னைவிட வயது அதிகமிருக்கும். என்னை அவரோடு வீட்டுக்குப் போகச் சொல்லும் வரை, அங்கே ஏதோ பூஜை நடக்கிறது என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்...’’ நடந்தது திருமணம்.

பேபி மணந்துகொண்ட நபருக்கு அவரைவிட 14 வயது அதிகம். பாண்டியும் பல்லாங்குழியும் விளையாடவேண்டிய அந்த வயதில் அந்தச் சிறுமிக்கு முதலிரவு. அடுத்த வருடமே கையில் ஒரு குழந்தை.

பேபி ஹால்தார்
`இன்றைய காலகட்டத்தில், சமூகத்தால் ஏற்படும் கறைகளை அகற்றி, நம்மை விடுவிப்பதற்குச் சிறந்த ஆயுதம் கல்வியே.’ - பேபி ஹால்தார்.

திருமணம், பேபியின் வாழ்வில் எந்த நல்ல மாற்றத்தையும் கொண்டு வந்துவிடவில்லை. அவர் வயதையொத்த அவருடைய சிநேகிதகளெல்லாம் பள்ளிக்கூடம் போய்க்கொண்டு, பொம்மைகளோடு விளையாடிக்கொண்டிருந்தபோது வீட்டு வேலை என்கிற பேய் வந்து அவர் தலையில் உட்கார்ந்துகொண்டது. மாமனார் வீட்டில் இருப்பவர்கள் அத்தனை பேரின் துணிகளையும் துவைக்க வேண்டும்; அத்தனை பேருக்கும் சமைத்துப்போட வேண்டும்; பாத்திரங்களைக் கழுவ வேண்டும்; வீடு பெருக்கி, மெழுக வேண்டும்; இடையில் குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டும்; கணவனின் உடல் தினவுக்கு இரையாக வேண்டும். 20 வயதில் மூன்று குழந்தைகளுக்குத் தாயாகியிருந்தார் பேபி. முரட்டுக் கணவனுடன், அன்றாடம் போராட்டமான இல்லற வாழ்க்கை... 10 வருடங்கள் முடிந்திருந்தபோது அவருக்கு வயது 25. குழந்தைகளையும் நன்றாக வளர்க்க முடியவில்லை. குழந்தைகள்மீதும் குடும்ப வன்முறை பாய்ந்தது. ஒருநாள் `இனியும் முடியாதுடா சாமி...’ என்று மூட்டையைக் கட்டினார் பேபி. அது வாழ்க்கையில் அவர் எடுத்த தைரியமான முடிவு. கணவருக்கோ, அவரின் வீட்டாருக்கோ தெரியாமல், குழந்தைகளுடன் டெல்லிக்கு ரயில் ஏறினார்.

டெல்லிக்கு வந்துவிட்டாரே தவிர, அடுத்து என்ன செய்வது, எங்கு தங்குவது ஒன்றும் அவருக்குப் புரியவில்லை. நல்ல வேலை கிடைப்பதற்கு அவர் படித்த படிப்பு போதுமானதாக இல்லை. தெரிந்தவர் ஒருவரின் மூலம், ஒரு வீட்டில் சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது, வீட்டைப் பராமரிப்பது... என்ற வேலைதான் கிடைத்தது. எந்த வேலைகளை அவர் வெறுத்து ஓடிவந்தாரோ, அவற்றையே செய்யவேண்டிய துர்பாக்கியம், நிர்பந்தம். ஆனால், வீட்டு வன்முறையிலிருந்து தப்பித்தோம், நம் சம்பாத்தியத்தில் வாழ்கிறோம் என்கிற சின்ன நிறைவு பேபிக்கு ஏற்பட்டது. அதுவும் நீண்ட நாள்களுக்கு தங்கவில்லை. மனிதர்கள் விதவிதமானவர்களாக இருந்தாலும், பெண்களை அவர்கள் பார்க்கும் பார்வையும், நடத்தும்விதமும் ஒரே மாதிரியானவையாகத்தான் இருந்தன. ஆண்களுக்கு, பெண் என்றால் இழிபிறவி, தங்களுக்குக் கட்டுப்பட்டவள், அடிமை! நொந்துபோனார் பேபி. பல இடங்களில் வீட்டு வேலை; பல எஜமானர்களைப் பார்த்துவிட்டார் பேபி. ஒன்றுகூட உகந்ததாயில்லை. கடைசியில் ஓர் இடம் கிடைத்தது. அந்த இடம் அவருடைய வாழ்க்கையையே திருப்பிப் போட்டது.

பேபி ஹால்தார்

அந்த வீட்டின் உரிமையாளர் பெயர் பிரபோத் குமார். எழுத்தாளர், ஓய்வுபெற்ற மானுடவியல் பேராசிரியர். இன்னொரு பெருமைக்கும் சொந்தக்காரர். பிரபல இந்தி எழுத்தாளர் பிரேம்சந்தின் பேரன். அதே வழக்கமான துவைக்கும், பெருக்கும், சமையல் செய்யும், பாத்திரம் கழுவும் வேலைதான். ஆனால், அது என்னவோ அந்த வீடு பேபிக்கு அவ்வளவு பிடித்திருந்தது. பிரபோத் குமார் கனிவாக, கண்ணியத்தோடு நடந்துகொண்டார். வீடு நிறைய புத்தக அலமாரிகள், தினுசு தினுசாக, விதவிதமான புத்தகங்கள். அந்த அலமாரியைச் சுத்தம் செய்யும்போதெல்லாம் அந்தப் புத்தகங்களில் எதையாவது எடுத்து பிரித்துப் பார்ப்பார். யாராவது பார்க்கிறார்களா என்று பார்ப்பார். சிறிது நேரம் சில பக்கங்களைப் புரட்டிவிட்டு, எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவார். யாரும் பார்க்கவில்லை என்றுதான் பேபி நினைத்திருந்தார். ஆனால், புரொபசர் பிரபோத் குமார் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒருநாள் பிரபோத் குமார், பேபியை அழைத்தார். ``உனக்குப் புத்தகங்கள் பிடிக்குமா?’’

`பிடிக்கும்’ என்பதுபோல் தலையாட்டினார் பேபி.

``நான் ஒரு புத்தகம் தர்றேன் படிக்கிறியா?’’

``இந்த வயசுலயா, இவ்வளவு லேட்டாவா... இனிமே நான் வாசிக்கக் கத்துக்கிட்டு என்ன செய்யப்போறேன்?’’

``அப்பிடியில்லை. நாம விரும்புற ஒண்ணைக் கத்துக்கறதுக்கு தாமதம்னோ, வயசுன்னோ ஒண்ணும் இல்லை. நான் ஒரு புத்தகம் குடுக்குறேன். பொறுமையாப் படி.’’

அன்றைக்கு பிரபோத் குமார் பேபிக்குக் கொடுத்த புத்தகத்தின் பெயர் `Amar Meyebela (My Girlhood).’ தஸ்லிமா நஸ்ரினின் சுயசரிதை. மெதுவாகப் படிக்க ஆரம்பித்தார். அப்படியே அதற்குள் ஆழ்ந்துபோனார். தஸ்லிமாவின் வாழ்க்கையைப் படிக்கப் படிக்க அவருக்குள் ஒரு கொந்தளிப்பு. ஏழ்மைச் சமூகத்தில் பெண்கள் ஏன்தான் பிறக்கிறார்களோ என்கிற கோபம், இன்னும் என்னென்னவோ உணர்வுகளெல்லாம் எழுந்தன. மேலும் சில புத்தகங்களைக் கேட்டு வாங்கிப் படித்தார். படிக்கப் படிக்க, புதுவாசல் திறந்தது.

தென்னிந்தியாவுக்கு சுற்றுப்பயணம் போகவிருந்தார் பிரபோத். போவதற்கு முன்னால் பேபியை அழைத்தார். ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் அவரிடம் கொடுத்தார். ``படிக்கறது இருக்கட்டும். நான் ஊருக்குப் போயிட்டுத் திரும்புறதுக்குள்ள எதையாவது இதுல எழுதி வை’’ என்றார்.

பேபி ஹால்தார்

``நானா, எழுதறதா... இது நடக்குற கதையா?’’

``ஆமா. நீதான். நிச்சயம் எழுதுவே.’’ இப்படிச் சொல்லிவிட்டு, வெளியூருக்குக் கிளம்பிவிட்டார் பிரபோத் குமார்.

`எதை எழுதுவது... இளம் பருவத்தைத் தொலைத்ததையா... திகிலூட்டிய முதலிரவு அனுபவத்தையா... பதின்மூன்று வயதில் பிள்ளைப்பேறு வலியை அனுபவித்ததையா... இத்தனை வருடங்கள் வீட்டு வேலை செய்ததில் உடம்பெங்கும் பரவியிருக்கும் தழும்புகள் குறித்தா... எதை எழுதுவது?’

ஆரம்பத்தில் இப்படியெல்லாம் உணர்வுகள் திரண்டெழுந்தாலும், பேபி ஹால்தார், ஆறாவது வரை மட்டுமே படித்திருந்த அந்த எளிய மனுஷி எழுத ஆரம்பித்தார். அதுவரை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத தன் வாழ்க்கையை எழுத ஆரம்பித்தார். பகலில் வீட்டு வேலை; இரவில் எழுத்து வேலை. எழுத எழுத மனம் லேசானது போன்ற ஓர் உணர்வு. புரொபசர் பிரபோத் குமார் வீட்டுக்குத் திரும்பியபோது, 100 பக்கங்கள் வரை எழுதி முடித்திருந்தார் பேபி. அதைப் படித்துப் பார்த்தார் பிரபோத். அப்படியே ஆழ்ந்துபோனார். சில இடங்களைப் படித்தபோது அவருக்கே கண்கள் கலங்கின. மீதத்தையும் எழுதச் சொன்னார்.

சில மாதங்களுக்குப் பிறகு பேபி தன் முழு சுயசரிதையையும் எழுதி முடித்ததும், பிரபோத் குமாரே அந்த மேனுஸ்கிரிப்டில் சில திருத்தங்கள் செய்தார். வங்காளத்தில் பேபி எழுதியிருந்ததை இந்தியில் மொழிபெயர்த்தார். உள்ளூரில் இருந்த சில இலக்கிய அமைப்புகளுக்கு அனுப்பி அபிப்ராயம் கேட்டார்.

2002-ம் ஆண்டு அந்த நூல் வெளியானது. ஆசியாவில் வீட்டு வேலை செய்யும் பெண்களின் பிரதிநிதியாக பேபி ஹால்தாரின் குரல் ஒலித்தது. வங்காள மொழியில் அவர் எழுதிய மூலப்பிரதி `Aalo Aandhari (Light and Darkness)’ என்ற நூலாக 2004-ம் ஆண்டு வெளியானது. 2006-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, `A Life Less Ordinary’ என்ற நூலாக அது வெளிவந்தபோது, `Best Seller' என்ற சிறப்பைப் பெற்றது. `தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை பாராட்டித் தள்ளியது. பிரெஞ்ச், ஜப்பானீஸ், ஜெர்மன், கொரிய மொழி உட்பட 21 மொழிகளில் அவருடைய நூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தமிழில் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலமாக `விடியலை நோக்கி’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. இது தவிர மேலும் இரு நூல்களை எழுதியிருக்கிறார் பேபி.

பேபி ஹால்தார்

பிரபோத் குமாருடன் பணியாற்றிக்கொண்டே எழுதவும் ஆரம்பித்தார் பேபி. அவர் எழுதி சம்பாதித்த பணத்தைக்கொண்டு கொல்கத்தாவில் ஒரு சின்னஞ்சிறு வீட்டையும் வாங்கிவிட்டார். எழுதிப் பிழைக்க முடியுமா... முடியும் என்பதற்கு வாழும் உதாரணம் பேபி ஹால்தார். ``எனக்கு ஒருபோதும் கிடைத்திராத அடையாளத்தை, எழுத்து எனக்குக் கொடுத்திருக்கிறது’’ என்று ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கிறார் பேபி. உண்மைதானே!



from Latest news https://ift.tt/PtHuBFb

Post a Comment

0 Comments