Train accident: `மிக மோசமான ரயில் விபத்து’ - நாட்டையே உலுக்கிய ரயில் விபத்துக்கள்! ஒரு பார்வை

இரண்டு பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் என்று மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்து, நேற்று இரவு ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ஒடிசாவின் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக சொல்லப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததாகவும், இதனால் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே தரப்பில் சொல்லப்படுகிறது. இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்தது எப்படி... என்பதை அறிய ரயில்வே விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒடிசா ரயில் விபத்து

இந்த இரண்டு ரயில்களும் விபத்துக்குள்ளான நிலையில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் மூன்றாவது ரயிலாக அங்கு விபத்துக்குள்ளானது என்று தெரியவந்துள்ளது.

நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில், இதுவரை 233க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த கோர விபத்திற்கு பிரதமர், குடியரசு தலைவர், பல்வேறு மாநில முதல்வர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சமீப காலங்களில், இந்தியா சந்தித்த மிக மோசமான ரயில் விபத்துகளின் ஒடிசா விபத்தும் இணைந்துள்ளது.

இந்தியா கடந்து வந்த சில கோர ரயில் விபத்துகள்...

* ஜுலை 7, 2011 அன்று உத்திரபிரதேசத்தின் எட்டா மாவட்டத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த சாப்ரா - மதுரா எக்ஸ்பிரஸ், பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 69 பேர் உயிரிழந்தனர். அதிவேகமாக சென்று கொண்டிருந்த ரயில், பேருந்து மீது மோதி, பேருந்தை அரை கிலோமீட்டர் வரை இழுத்துச் சென்றது. இந்த விபத்து, இரவு 1.55 மணியளவில், ஆளில்லா ரயில்வே கேட்டில் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா ரயில் விபத்து

* 2012ம் ஆண்டை, இந்தியன் ரயில்வே வரலாற்றில் ஒரு கருப்பு ஆண்டாக கூறலாம். அந்த ஆண்டு மட்டும் இந்தியா முழுவதும் 14 ரயில் விபத்துக்கள் நிகழ்தன. குறிப்பாக, ஜூலை 30, 2012, அன்று டெல்லி - சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, ரயிலின் ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி, அந்தப் பெட்டி முழுவதும் தீயிக்கிரையானது.‌ இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

* மே 26, 2014, அன்று உத்திரபிரதேசத்தில் சந்த் கபீர் நகரில், கோரக்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

* மார்ச் 20, 2015, அன்று டேராடூரியிலிருந்து, வாரணாசி நோக்கி சென்று கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில், உத்திரபிரதேசத்தில் உள்ள பச்ரவான் ரயில் நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது. இன்ஜின் மற்றும் அதற்குப் பின் இணைக்கப்பட்டிருந்த இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஒடிசா ரயில் விபத்து

* நவம்பர் 20, 2016, அன்று இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ் கான்பூருக்கு அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 150 க்கும் மேலான பயணிகள் உயிரிழந்தனர். 150க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

* ஆகஸ்ட் 19, 2017, ஹரிதுவாரில் இருந்து புரி நோக்கி சென்று கொண்டிருந்த கலிங்க உட்கல் எக்ஸ்பிரஸ், உத்திரபிரதேசம் மாநிலத்தின் முசாபர் நகர் பகுதிக்கு அருகில் விபத்துக்குள்ளானது. ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

ஒடிசா ரயில் விபத்து

ஜனவரி 13, 2022, பிக்கானர் - கௌஹாத்தி‌ எக்ஸ்பிரஸ், மேற்குவங்கம் மாநிலத்தின் அலிபுர்துவார் என்னும் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர், 36 பேர் படுகாயம் அடைந்தனர்.

சமீப காலங்களில் இந்தியாவில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் இந்த விபத்து மிக மோசமானது என்பது இன்னும் சோகம்!



from Latest news https://ift.tt/ilHkBd9

Post a Comment

0 Comments