வெளிநாடுகளில் விவசாயத்தில் எத்தனையோ புதுமைகள் வந்துவிட்டன. ஆனாலும், இந்திய கிராமங்களில் இன்னும் பழைய முறையே தொடர்ந்துகொண்டிருக்கிறது. சத்தீஸ்கர் விவசாயி ஒருவர் தனது வங்கிப் பணியை ராஜினாமா செய்துவிட்டு விவசாயத்தில் ஆண்டுக்கு ரூ.25 கோடி வருமானம் ஈட்டுகிறார். சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்தர் மாவட்டத்தில் உள்ள கொண்டகாவ் மற்றும் ஜக்தல்பூர் ஆகிய பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களோடு கூட்டணி சேர்ந்து மிளகு விவசாயத்தில் சாதித்து வருகிறார் ராஜாராம் திரிபாதி. அவர் இதற்காக அங்கு பழங்குடியின மக்களுடன் ஒப்பந்தமும் செய்துகொண்டு இந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து ராஜாராம் கூறுகையில், ``படித்து முடித்தவுடன் ஸ்டேட் பேங்க்கில் சிறிது காலம் பணியாற்றினேன். அதன் பிறகு 1998-ம் ஆண்டு என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுமையாக விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்தேன். என் தாத்தா விவசாயம் செய்தார்.
ஆனால், என் தந்தை ஆசிரியராக இருந்தார். நான் என் தாத்தா செய்த விவசாயத்தை கையில் எடுத்தேன். என்னிடம் இருந்த நிலம் தவிர்த்து அங்கு வசித்த பழங்குடியின மக்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு இப்போது 1,000 ஏக்கரில் கூட்டு விவசாயம் செய்கிறேன். இதில் மிளவு அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது. படிப்படியாக விவசாயத்தில் புதுமையை புகுத்தினேன். 1999-ம் ஆண்டு வெள்ளை முஸ்லியையும் பயிரிட்டேன். அதற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இயற்கை விவசாயம் மற்றும் பசுமைக் குடில் அமைத்து விவசாயம் செய்தல் போன்ற காரியத்தில் ஈடுபட்டேன். வெளிநாடுகளில் விவசாயத்தில் எந்த மாதிரியான தொழில் நுட்பம், இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதை நேரில் சென்று பார்வையிட்டேன். அப்படி சென்றபோது இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் பயிர்களுக்கு மருந்து தெளிக்கவும், உரம் கொடுக்கவும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவதை நேரில் பார்க்க முடிந்தது. அதே முறையை எனது 1,000 ஏக்கர் நிலத்தில் பயன்படுத்த முடிவு செய்தேன்.
இதற்காக ரூ.7 கோடியில் ஹெலிகாப்டர் வாங்க் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரை மருந்து தெளிக்கவும், உரம் தூவவும் ஏதுவாக வடிவமைக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறோம். பயிர்களின் அறுவடையின்போது பல வகையான பூச்சிகள் தாக்குகின்றன. அதற்கு கைகளால் மருந்து தெளிப்பதால் அதைத் தெளிப்பவர்களுக்கு பல்வேறு விதமான உடல்கோளாறுகள் ஏற்படுகின்றன. அதோடு மருந்தும் அதிகமாக வீணாகிறது. ஹெலிகாப்டரில் மருந்து தெளிக்கப்படுவதால் மருந்து வீணாவது தடுக்கப்படுவதோடு, பக்கத்து தோட்டத்து விவசாயிகளும் பயனடைவார்கள்.
ஹெலிகாப்டரை இயக்க எனக்கும் என் மகனுக்கும் உஜ்ஜைனியில் உள்ள விமான பயிற்சி நிறுவனம் ஒன்று பயிற்சி கொடுக்க இருக்கிறது. 4 இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டர் வாங்க ஹாலந்து நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
ராஜாராம் சொந்தமாக மாதண்டேஸ்வரி ஹெர்பல் குரூப் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் இந்த விவசாயத்தை செய்து வருகிறார். மிளகு பயிரிட ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவரோடு 400 பழங்குடியின குடும்பத்தினரும் இந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜாராம் விவசாயத்தில் ஆண்டுக்கு ரூ.25 கோடி வருமானம் ஈட்டுகிறார். தனது தோட்டத்தில் விளையும் மிளகை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். விவசாயத்தில் ராஜாராம் செய்து வரும் சாதனைகளுக்காக மூன்று முறை சிறந்த விவசாயி என்ற விருதை பெற்று இருக்கிறார். இந்தியாவிலேயே ராஜாராம்தான் முதல் முறையாக விவசாயத்துக்கு ஹெலிகாப்டர் வாங்கி இருக்கிறார். இதற்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் பீவாண்டியைச் சேர்ந்த ஜனார்தன் என்ற விவசாயி தனது பால்பண்ணையில் கிடைக்கும் பாலை இந்தியா முழுவதும் விற்பனை செய்ய கடந்த 2021-ம் ஆண்டு சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கினார் என்பது குறிபிடத்தக்கது.
from Latest news https://ift.tt/tdOjS95
0 Comments