'புஷ்பா' திரைப்படம் பாணியில் சரக்கு வாகனத்தில் ரகசிய இடம் அமைத்து, குட்கா கடத்தி வந்தவர்களை விருதுநகர் மாவட்ட போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து, போலீஸாரிடம் விசாரிக்கையில், "விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த அழகாபுரியில் காவல்துறையின் சோதனை சாவடி உள்ளது. இவ்வழியே தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் போலீஸூக்கு வரும் ரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்துவது வழக்கம்.
அதன்படி, மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் 07-07-2023 அன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவ்வழியே சந்தேகப்படும்படி வந்த சரக்கு வாகனத்தை அழகாபுரி சோதனை சாவடியில் தடுத்துநிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் சரக்குகள் ஏதும் இல்லாதநிலையில், வெளிமாவட்ட பதிவெண் கொண்ட வாகனம் வெற்று வாகனமாக ஆதாயமின்றி வெகுதூரம் பயணித்து வந்தது போலீஸூக்கு சந்தேகத்தை வரவழைத்தது.
இதனால் சரக்கு வாகன ஓட்டுநர் கண்ணனிடம், போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது, ஓட்டுநர் கண்ணனின் செல்போனிற்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்பை ஏற்று போலீஸார் போனை 'ஸ்பீக்கர்' ஆன் செய்தபோது, எதிர்முனையில் பேசியவர் "ஏம்ப்பா லோடு ஏத்திட்டு வந்துதிட்டியா, சரக்கை எப்போ கொண்டுவந்து சேர்ப்ப" என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் கண்ணனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், குற்றால சீசனையொட்டி சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து பான்மசால் விற்பனை செய்வதற்காக குட்கா கடத்தி வந்ததாக கண்ணன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர், அடையாளம் காட்டியப்படி மீண்டும் சரக்கு வாகனத்தை போலீஸார் சோதனை செய்ததில், `புஷ்பா திரைப்படம் பாணியில்’ சரக்கு வாகன தொட்டிக்கு கீழே ரகசிய இடம் அமைத்து 400 கிலோ குட்கா பான்மசாலாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீஸார், நத்தம்பட்டி காவல்நிலையத்துக்கு எடுத்துச்சென்றனர். தொடர்ந்து ஓட்டுனர் கண்ணன் உள்பட இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் கண்ணனை கைது செய்தனர்.
from Latest news https://ift.tt/1E6iOTm
0 Comments