புதுச்சேரியின் பிரதான வீதிகளில் ஒன்று நேரு வீதி. வர்த்தக வீதியான இந்த வீதியில் எப்போது மக்கள் நடமாட்டம் இருக்கும் என்பதால், பல ஆண்டுகளுக்கு முன்பே ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுவிட்டது. இன்று மதியம் இந்த வீதியில் தமிழக பதிவெண் கொண்ட கறுப்பு நிற கார் ஒன்று எதிர் திசையில் அதிவேகமாக சீறிப் பாய்ந்தது. ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் வேகமாகச் சென்ற அந்த காரை, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போக்குவரத்து போலீஸார் நிறுத்த முயன்றுள்ளனர்.
ஆனால் அந்த கார் நிற்காமல் தொடர்ந்து வேகமாகச் சென்று கொண்டிருந்தது. மேலும் அப்பகுதி ஒரு வழிப்பாதை என்பதால் எதிரே வந்த வாகனங்கள் மற்றும் பொதுமக்களை இடித்து தள்ளியவாறு வேகமாகச் சென்றது. அதனால் எதிர் திசையில் வந்துகொண்டிருந்த மக்கள் தெறித்து ஓடினர். அதைப் பார்த்து அங்கிருந்த இளைஞர்களும், பொதுமக்களும் தங்களது வாகனத்தில் அந்த காரை பின்தொடர்ந்து சென்றனர், பொதுமக்கள் தங்களைத் துரத்துவதைப் பார்த்த அந்த கார் ஓட்டுநர், டயர் பஞ்சரான நிலையிலும் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.
சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் சென்று, பின்னர் லாஸ்பேட்டை பகுதிக்குள் புகுந்து விமான நிலைய பின்புறத்தில் நிலை தடுமாறி ஓடை அருகே சிக்கி நின்றது, அப்போது காரைப் பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் காரின் கண்ணாடி, கதவுகளை உடைத்து உள்ளிருந்தவர்களை வெளியில் இழுத்துப் போட்டு உதைத்தனர். இதில் அவர்கள் பலத்த காயமடைந்தனர், அப்போது அங்கு வந்த போலீஸார் காரில் வந்தவர்களை பொதுமக்களிடமிருந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்,
அதையடுத்து நேரு வீதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரணை செய்ததில், வாகனத்தை ஓட்டியது சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த சுனில் என்பதைக் கண்டுபிடித்தனர். அந்த சுனில் தனது நண்பர்களான எபினேசர், தீலிப், ஆஷிக், ஸ்ரீநாத் ஆகியோருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு காரை ஓட்டியதும், அதன் காரணமாக விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு சிகிச்சை முடிந்த பின்னரே அவர்கள் குறித்து முழு விவரங்கள் தெரியவரும் என்றும் கூறிய கிழக்கு மற்றும் வடக்கு போக்குவரத்து காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.
from Latest news https://ift.tt/tTAZIdy
0 Comments