விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் வெள்ளிமேடுபேட்டை பகுதிகளிலுள்ள ஏடிஎம் மையங்களைக் குறிவைத்து, ஏடிஎம்-மில் பணம் எடுக்கத் தெரியாத நபர்களிடம் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி, அவர்களிடம் வேறு ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொடுத்து நூதன முறையில் ஒரு கும்பல் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறது. இது சம்பந்தமாக, திண்டிவனம் மற்றும் வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின்பேரில், திண்டிவனம் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில், தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் ஐயப்பன் தலைமையிலான போலீஸார், கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்ற இடங்களிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில், திண்டிவனம் - வந்தவாசி சாலையில் வெள்ளிமேடுபேட்டை அருகே நேற்று மாலை தனிப்படை போலீஸார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக நடந்து வந்த இருவரை போலீஸார் பிடித்து விசாரணை செய்துள்ளனர். முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த அவர்களை சோதனை செய்து பார்த்தபோது, பணம் மற்றும் பல ஏடிஎம் கார்டுகளை வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது. எனவே, அவர்களை வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், ஒருவர் திண்டுக்கல் மாவட்டம், புகையிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆபேல் என்பதும், மற்றொருவர் வேலூர் மாவட்டம், கோணவட்டம் கிராமத்தைச் சேர்ந்த முதர்ஷீர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஏடிஎம் மையங்களில், பணம் எடுக்கத் தெரியாதவர்களிடம் நூதன முறையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து 48,000 ரூபாய் பணம், 81 ஏடிஎம் கார்டுகளைப் பறிமுதல் செய்த போலீஸார், இருவர்மீதும் வழக்கு பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.
from Latest news https://ift.tt/ukh0rxe
0 Comments