விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் விவசாய இடுபொருள்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கிவருகிறது. இந்தத் தொழிற்சாலையிலிருந்து, கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய இடுபொருள்கள் லாரி மூலம் கோயம்புத்தூருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. அந்த லாரி, கோயம்புத்தூர் சென்றபோது லாரியின் தார்பாய் கிழிக்கப்பட்டு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 53 விவசாய இடுபொருள்கள் மற்றும் ரசாயன கலவைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்திருக்கிறது.
இது குறித்து தனியார் தொழிற்சாலையின் மேலாளர் சக்திவேல் என்பவர், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீஸார், தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில், விவசாய இடுபொருள்களை ஏற்றிச் சென்ற கனரக லாரியை இரண்டு மினி லாரிகளில் பின்தொடர்ந்து சென்ற மர்மக்கும்பல் ஒன்று, லாரியின் தார்பாயைக் கிழித்து திருடியிருப்பது தெரியவந்திருக்கிறது.
விவசாய இடுபொருள்களைக் கடத்திய லாரியின் பதிவெண்ணைக்கொண்டு விசாரணை மேற்கொண்ட போலீஸார்... இந்தத் திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடையதாக கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கோடீஸ்வரன், ரியாஸ் மற்றும் நெய்வேலியைச் சேர்ந்த கோவிந்தராஜ் ஆகியோரை நேற்றைய தினம் அதிரடியாகக் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து, விவசாய இடுபொருள்களை விற்று வைத்திருந்த 16 லட்ச ரூபாய் ரொக்கப் பணம், 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய இடுபொருள்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு மினி லாரிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடிவருகின்றனர். லாரியில் கொண்டுசெல்லப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான விவசாய இடுபொருள்களிலிருந்து, 30 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் இரு மினி லாரிகளைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from Latest news https://ift.tt/P9gEXlK
0 Comments