நியோ மேக்ஸ் நிறுவனத்தில் பணம் கட்டிய பல லட்சம் மக்கள் பயங்கரமான குழப்பத்தில் இருக்கிறார்கள். காவல் துறை சொல்கிறபடி நியோமேக்ஸ் நிறுவனத்தின் மீது புகார் கொடுப்பதா அல்லது நியோ மேக்ஸ் சொல்கிற மாதிரி அந்த நிறுவனத்திற்கு எதிராக புகார் கொடுக்காமல் இருப்பதா என்கிற கேள்வியே அவர்களின் மண்டையைக் குடைந்துகொண்டிருக்கிறது.
ஏன் இந்த குழப்பம் என்று கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.
நியோ மேக்ஸ் நிறுவனத்தின் மதுரை தலைமை அலுவலகம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் அதன் நிறுவனங்களின் கிளை அலுவலகங்கள், துணை நிறுவனங்களின் அலுவலகங்கள், முக்கியமான இயக்குநர்களின் வீடுகள், முகவர்களின் வீடுகள் என்று திடீர் சோதனை நடத்தி, பல முக்கியமான ஆவணங்களைக் கைபற்றியது பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு.
இந்த நிறுவனத்தின் முக்கியமான இயக்குநர்கள் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், அவர்கள் அத்தனை பேரும் தலைமறைவானார்கள். அங்கே எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் என்கிற விவரம் யாருக்கும் தெரியவில்லை. அவர் பெயில் வாங்கி வெளியேவர எவ்வளவோ முயற்சி செய்தும் நீதிமன்றம் அதற்கு அனுமதி தரவில்லை.
இந்த நிலையில், பொருளாதாரக் குற்றத் தடுப்பு போலீஸார் முக்கியமானதொரு அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பு வருமாறு:
‘‘நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள்/முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் மீது புகார் அளிக்க வசதியாக இன்று (22-7-2023) காலை 9 மணி முதல் மதுரை புது நத்தம் ரோட்டில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் ‘மனு மேளா’ நடைபெற்று வருகிறது. பொது மக்களுக்கு சட்டரீதியாக புகார் அளிக்க அனைத்து உதவிகளும் காவல் துறையினர் செய்கிறார்கள்....’’ என்று காவல் துறையின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
நியோ மேக்ஸ் நிறுவனம் தொடர்பாக புகார் அளிக்கலாம் என பொருளாதாரக் குற்றத் தடுப்பு போலீஸ் ஏற்கெனவே அறிவித்திருந்தாலும், யாரும் தனியாக வந்து புகார் தரத் தயாராக இல்லை. தனியே வந்தால் தம்மை யாராவது ஏதாவது செய்துவிடுவார்களோ என்று மக்கள் பயப்படுகிறார்கள். ‘மனு மேளா’ நடத்தினால் அனைவரும் தைரியமாக வந்து புகார் தருவார்கள் என்று நினைத்து காவல் துறை இந்த ‘மனு மேளா’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால், மக்கள் தைரியமாக முன்வந்து புகார் மனு கொடுக்க முடியாதபடிக்கு கெஞ்சலான தொனியில் மிரட்டல் மெசேஜ்களை வாட்ஸ்-அப் மூலம் பணம் போட்ட எல்லோருக்கும் அனுப்பி வைத்திருக்கிறது நியோ மேக்ஸ் நிர்வாகம். இந்த மெசேஜ்களைப் பார்த்தபின்புதான், முதலீட்டாளர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ் விவரம் இனி...
‘அன்பார்ந்த வாடிக்கையாளர்களே!
அரசியல் சூழ்ச்சியின் காரணமாக நமது நியோ மேக்ஸ் நிறுவனத்தை நிதி நிறுவனம் என்று முத்திரை குத்த அழைப்புவிடுத்திருக்கிறார்கள். நாம் தொழில் நிறுவனம்தான் என்று நிரூபிக்கும் வகையில் சட்டத்திற்குட்பட்ட RERA மற்றும் DTCP அப்ருவ்ட் பிளாட்டுகளுக்கான எல்லா ஆவணங்களையும் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்திருக்கிறோம். ஜூலை 27-ஆம் தேதி வரை நமக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கானது நிதி நிறுவனம் என்று எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளத்தால், அதை நிரூபிக்கும் வகையிலேயே அவர்களின் (காவல் துறையினர்) செயல்பாடுகள் உள்ளது. அவர்களின் எதிர்பார்ப்பு நிறைய பேர்களை கிளப்பிவிட்டு அதிகபடியான நபர்கள் அங்கு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்.
நமது வாடிக்கையாளர்கள் பலர் பிளாட்டுகளைப் பதிவு செய்வதற்கு அட்வான்ஸ் போட்டும், சர்வீஸ் அபார்ட்மெண்ட்களுக்கும், ரிசார்ட்டுகளுக்கும், ஃப்ளாட்டுகளுக்கும் புக்கிங் செய்திருக்கிறார்கள். இவர்களை மாதிரி வாடிக்கையாளர்களையும் குழப்பி தூண்டிவிடுகிறார்கள்!
இவர்கள் புகார் அளிக்க மட்டுமே உதவி செய்வார்கள். அதன்பிறகு புகார் அளித்தவர்களுக்கு நிவாரணம் கிடைத்ததா அல்லது இல்லையா என்று நீதி மன்றம் மூலமாகத்தான் அறிய முடியும்! அங்கு போனாலும் சொத்துக்களோ அல்லது எனக்கு சொத்து வேண்டாம்.. பணம் தான் வேண்டும் என்றால், அந்த சொத்துக்களை விற்பனை செய்வதற்கு கால அவகாசம் கேட்டு (ஒருவேளை) ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில்கீழ் விற்றுதான் பணம் கொடுக்கப்படும்.
தீயசக்திகளின் நோக்கம், நிதி நிறுவனம் என்று முத்திரை குத்தி முடக்குவதாகும். 15 வருடங்களாக தொழில் செய்துகொண்டிருக்கும் ஒரு நல்ல நிறுவன குழுமத்தை முடக்குவதற்கு சதி செயலில் ஈடுபட்டுள்ளர்கள். இந்த மாய வலையில் யாரும் சிக்கிட வேண்டாம் என்று உங்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.’’ என்று முடிகிறது இந்த மெசேஜ்.
இந்த மெசேஜ்-வுடன் இன்னொரு மெசேஜ்-யையும் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி இருக்கிறது நியோ மேக்ஸ். அந்த மெசேஜ் விவரம் வருமாறு:
‘‘வணக்கம் அன்பு நண்பர்களே, வருகிற 28-ம் தேதி நமக்கும் நமது நிறுவத்திற்க்கும் மிகப் பெரிய வெற்றி வரவிருக்கிறது. ஆகையால், 28-ஆம் தேதி வரை அனைவரும் பொறுமையுடன் இருந்தால் நமது நிறுவனத்தின் சார்பாக அனைத்து நண்பர்களுக்கும் மக்களுக்கும் நன்மை மட்டுமே கிடைக்கும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம், நன்றி’’
இந்த இரண்டு மெசேஜையும் பார்த்தவர்கள், புகார் தரவில்லை என்றால் பணம் கிடைக்காது; புகார் தந்தால் நியோ மேக்ஸ் நிறுவனத்தினர் கட்டம் கட்டிவிடுவார்கள் போலிருக்கிறதே என்று நினைத்து கலங்கிப் போயிருக்கிறார்கள்.
இந்த நிலையில், நியோமேக்ஸ் மோசடி வழக்கில் மேலும் ஒரு இயக்குநரான சகாயராஜ் என்பவர் வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரை வருகிற 4-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
நியோ மேக்ஸ் பிரச்னை பூதாகரமாக வெடிக்கத் தயாராகிவிட்டது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது!
from Latest news https://ift.tt/Q7l3pz0
0 Comments