Doctor Vikatan: ஹார்ட் அட்டாக்கை தடுக்குமா மீன் எண்ணெய் மாத்திரைகள்?

Doctor Vikatan: மீன் எண்ணெய் மாத்திரைகள் மாரடைப்பைத் தடுக்கும் என்று சொல்லப்படுகிறதே... உண்மையா? இந்த மாத்திரைகளை தினமும் சாப்பிடலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

பொது மருத்துவர் அருணாசலம்

மீன்களிலும் சரி, மீன் எண்ணெயிலும் சரி, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால் அது ஆரோக்கியத்துக்கு பல வழிகளில் உதவுவதாகச் சொல்லப்படுவது உண்மைதான். ஆனால் அதற்காக இவற்றை அளவுக்கதிமாகச் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்துக்கு பாதகத்தையே ஏற்படுத்தும். அதாவது ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிப்பது, ரத்தப்போக்கு ரிஸ்க்கை அதிகரிப்பது போன்றவை ஏற்படலாம்.

மக்கள் பலரும் தினமும் மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அது அவர்களது தினசரி ஒமேகா 3 கொழுப்பு அமிலத் தேவையை நிறைவேற்றலாம். அது உங்கள் மூளை, கண்கள், இதய ஆரோக்கியத்துக்கு உதவும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ட்ரைகிளிசரைடு எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிமங்கள் சேர்வதைத் தடுக்கும். முறைதவறிய இதயத்துடிப்பை சீராக்கும். மாரடைப்பு மற்றும் பக்கவாத பாதிப்பு அபாயத்தைக் குறைக்கும். இதயநோய் உள்ளவர்களுக்கு திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு மரணம் நிகழ்வதைத் தடுக்கும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது ஆழ்கடலில் காணப்படும் மீன்களில் இருப்பது. இந்த வகை கொழுப்பு அமிலம் நம் உடலுக்கு நல்லது. நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் படிவதைத் தடுக்கும்.

Heart attack

ஆனால் இதை யார், எவ்வளவு எடுக்க வேண்டும் என்ற அளவு தெரியாமல் எடுப்பது ஆபத்தானது. மருத்துவப் பரிந்துரை மிக முக்கியம்.

சாதாரணமாக மீன்கள் உண்ணும் வழக்கமுள்ளோருக்கு இந்த சப்ளிமென்ட் தேவையில்லை. கடல் மீன்களிலேயே இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைத்துவிடும். ஆனால் அந்த மீன்களையும் எண்ணெயில் வறுத்தோ, பொரித்தோ சாப்பிடக்கூடாது. வேகவைத்து சாப்பிடுவதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news https://ift.tt/d2Ix3tg

Post a Comment

0 Comments