``FORM 16 கொடுப்பதில் தாமதம்... ஆனா, ஜூலை 31 -க்குள் ITR ஃபைல் பண்ணனுமா?" - சிக்கலும், விளக்கமும்!

பெரும்பாலான நிறுவனங்களில் ஜூலை முதல் வாரத்தில் தான் 'ஃபார்ம் 16' கொடுக்கப்பட்டது. அதற்கு பிறகு, ஜூலை 31-க்கு மிகக் குறுகிய காலம்தான். அதற்குள் வருமான வரி செலுத்துபவர்களால் எப்படி ஐ.டி.ஆர் ஃபைல் செய்ய முடியும், அரசாங்கம் கொஞ்சமும் கருணை காட்டாமல், வரி செலுத்துபவர்களுக்கு மிகுந்த நெருக்கடி கொடுப்பதாக பல தரப்பினரிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இதற்கு என்ன காரணம், ஏன் இந்த சிக்கலான நடைமுறையை அரசு கையில் எடுக்கிறது என்கிற பல கேள்விகளுடன் ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமாரிடம் பேசினோம்.

மூன்று வாரத்திற்குள் ஐ.டி.ஆர் தாக்கல் செய்ய முடியுமா?

ITR ஃபைல்

``ஒவ்வொரு நிதி ஆண்டும் மார்ச் 31-ம் தேதி நிறைவடைகிறது. டி.டி.எஸ் ரிட்டன் என்பதை நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வைப்புத் தொகை வட்டியை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்தால் மே 5-ம் தேதிக்குள் ஃபார்ம் 16-ஐ கொடுத்து விடலாம். ஆனால், அவ்வாறு இல்லாமல் டிடிஎஸ் தாக்கல் செய்வதில் நிறுவனங்கள் ஏற்படுத்தும் தாமதத்தின் காரணமாக ஜூலை 7 அல்லது 8-ம் தேதி போல்தான் ஐடிஆர் தாக்கல் செய்ய முடிகிறது. வைப்புத் தொகை மீதான கணக்கின்போது வட்டியை கணக்கிடுவதில் ஏற்படும் வித்தியாசமும் இந்தக் குறுகிய கால நேரமும் ஐ.டி.ஆர் தாக்கல் செய்பவர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகிறது.

வரி கட்டுபவர்களே நாட்டின் தூண்கள்!

வரி கட்டுபவர்கள் நாட்டின் தூண்களாக இருப்பவர்கள். 80C - 80U வருமான வரிச் சலுகைகளை தவறாக பயன்படுத்துபவர்களை தண்டிப்பதில் தவறில்லை. ஆனால், நடுத்தர வர்க்க மக்களுக்கு தொல்லை கொடுப்பது போல் அமைவதுதான் தவறு. அரசு நடைமுறைகளில் உள்ள சிக்கலே இதற்கு காரணம். சிக்கல்கலை களைந்து கால தாமதத்தை குறைத்து ஃபார்ம் 16-ஐ ஏப்ரல் மாதத்தில் ஐடிஆர் தாக்கல் செய்பவர்களுக்கு உரிய கால அவகாசம் கிடைக்கும்" என்றவர் சுயமாக ஐ.டி.ஆர் ஃபைல் செய்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெளிவாக சொன்னார்.

சுயமாக ஐ.டி.ஆர் ஃபைல் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை!

சம்பளத்தை மட்டுமே வருமானமாகக் கொண்டவர்கள், ஒன்று அல்லது இரண்டு வீடு வைத்திருப்பவர்கள், வாடகை வருமானம் பெறுபவர்கள், வைப்புத் தொகை மூலம் வட்டி பெறுபவர்கள், ஆகியோர் பெயர், முகவரி பான், ஆதார் ஆகியவற்றை வைத்து பள்ளிக் கட்டணம், கடன், கடன் மீதான வட்டி போன்றவற்றை சரியாகத் தெரிந்து வைத்துக் கொண்டு தாக்கல் செய்ய வேண்டும்.

சில நேரங்களில், மேற் சொன்னதைப் போல் வருமானம் ஈட்டுபவர்கள், சிறு தொழில்கள் செய்வது உண்டு அதன் மூலம் கணிசமான வருமானம் பெறுவதும் உண்டு. அதற்கு வங்கி மூலமாக பணம் வந்தால், ஜிஎஸ்டி வரியை சரியாக செலுத்தி இருந்தால் அவர்களே தாக்கல் செய்யலாம். அவ்வாறு சரியான தகவல்கள் இல்லாதவர்கள் ஒரு நல்ல ஆடிட்டரை அணுகுவது நல்லது. இல்லையேல் அதற்கு கூடுதலாக 120% அபராதம் கட்ட வேண்டி இருக்கும்.

பழைய வரி முறை நிறுத்தப்படலாம்?!

பழைய வருமான வரி முறை

வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு பழைய வரி முறை பொருத்தமாக இருக்கும். ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் கணக்குகளை ஆராய்ந்து இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். ஒரு கோடிக்கும் மேல் சம்பாதிப்பவர்கள் புதிய வரி முறையை பின்பற்றலாம். பொதுவாக சம்பளதாரர்கள் எந்த முறையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து பின் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் தொழில் செய்பவர்கள் அவ்வாறு செய்ய முடியாது. ஒரு கட்டத்திற்கு மேல் புது முறையே பின்பற்றப்படும். பழைய முறை நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்

வருமான வரி போர்டலில் இருக்கும் குளறுபடிகள்!

புதிய வருமான வரி போர்டலில் கடந்த ஆண்டு நிறைய தொழில்நுட்ப குளறுபடிகள் இருந்தன. ஆனால் இந்த ஆண்டு பெரும்பாலான குளறுபடிகளை வருமான வரித்துறை சரி செய்துவிட்டது. ஆனால் ஏப்ரல், மே மாதங்களில் ஐ.டி.ஆர் ஃபைல் செய்வதற்கு முயற்சி செய்தால் புதிய போர்டல் அதை ஏற்க மறுக்கிறது. இதற்கு அரசின் வருமான வரி வசூலிக்கும் நடைமுறையில் இருக்கும் மெத்தனமான போக்குதான் காரணம். சரியான ஆள்களை அரசு ஆலோசகர்களாக அமர்த்துவதால் இந்த சிக்கல்கள் களையப்படும்" என்றவரிடம் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? என்று கேட்டதற்கு, " கடந்த ஆண்டு கால அவகாசத்தை நீட்டிப்பார்கள் என்று எதிர்பார்த்த போது அவர்கள் நீட்டிக்கவில்லை.

வருமான வரி

அதனால் நடப்பு ஆண்டிலும் அவர்கள் நீட்டிக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஏனெனில், அவர்கள் வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் செலுத்தும் அபராதம் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஈட்ட தொடங்கி விட்டார்கள் மற்றும் அப்டேட் ரிட்டன் முறையை கொண்டு வந்து விட்டார்கள். வருமான வரியைப் போலவே, அபராதமாக செலுத்த கூடிய தொகையின் மதிப்பும் அதிகமாக இருப்பதால், கால அவகாசத்தை நீட்டிக்கும் போது அந்த வருமானம் தடைபடும் என்பதால் இந்த ஆண்டும் கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை" என்றார்.



from Latest news https://ift.tt/SjfGKZ4

Post a Comment

0 Comments