வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
பணி ஓய்வு பெற்ற அந்தப் பெரியவரின் மகனும், மகளும் வெளி நாட்டில் வேலைக்குச் சென்று, குடும்பமாகி விட்டனர். அவர்கள் இங்கு வந்து, இரண்டொரு மாதங்கள் தங்கும்போதுதான் அவருக்குத் தீபாவளி, பொங்கல், திருவிழாவெல்லாம்!
அதிலும் பேரன், பேத்திகள் என்று ஆகி விட்ட நிலையில்,அவர்கள் இங்கு வரும்போது, அவரும் சிறு பிள்ளையாகிப்போய் அவர்களுடன் ஐக்கியமாகி விடுவார்.அவர்கள் தூங்கும் நேரம் போக, மற்ற நேரமெல்லாம் அவர்தான் அவர்களின் கம்பனியன்!
அதிலும் அமெரிக்கப் பேரனுக்கு 8 வயதாகி விட்டதால்,எங்கு சென்றாலும் இருவருந்தான். வீட்டுக்கு அருகிலுள்ள பார்க்கில் ‘ப்ரீஸ் பீ’விடுவதிலிருந்து,ஸ்கூட்டரில்,காரில் சுற்றுவது என்று எப்பொழுதும் இருவருந்தான். காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக் கதை வரை அனைத்தும் ஒன்றாக… ஜாலியாக…சந்தோஷமாக!
அப்படித்தான் அன்றும் இருவரும் ஸ்கூட்டருக்குப் பெட்ரோல் போடச் சென்றார்கள்,அவர்கள் பகுதியிலுள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு.பெட்ரோல் போட்டுக் கொண்டிருக்கும் போதே ஓர் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து முன்னால் உட்கார்ந்திருந்த பேரனிடம் அவர் கொடுக்க,’எதுக்கு?’என்று கேட்ட பேரனிடம் ‘ஏர் பிடிக்க’என்று சுருக்கமாக அவர் முடித்துக் கொண்டார்.பெட்ரோல் போட்டு,டாங்கை மூடி,சீட்டைச் சரி செய்து,இறங்கி நின்ற பேரனை முன்னால் அமர வைத்தபின்,அவர் வண்டியை ‘ஏர்’பிடிக்கும் இடத்திற்கு விட்டார்.
முன்னால் நின்றவர் வண்டிக்குக் காற்று நிரப்பப்பட்டுக் கொண்டிருந்ததால் அடுத்ததாக அவர்கள் நின்றார்கள். அந்த நேரத்தில் அங்கு எழுதப்பட்டிருந்ததைப் படித்த பேரன்,’ஏன் தாத்தா…’Free Air’ ன்னு இங்க எழுதியிருக்கே…அப்புறம் ஏன் காசு?’என்று கேட்க,பதில் சொல்ல அவர் தடுமாறினார். அதே சமயம் தன் பேரனின் புத்திசாலித் தனத்தை எண்ணி மகிழ்ந்தார். ’இதுதான் என் நாடு!’ என்ற ஆதங்கம் உள் மனதில் டிஜிட்டலானது.
அடுத்த நாள். இரவு பெய்த மழையில் அவர்கள் ஸ்கூட்டர் சென்ற சாலை சேறும், சகதியுமாக இருந்தது.’என்ன தாத்தா இது?அன்னைக்கு இதே ரோடு நல்லா இருந்திச்சே! முந்தின ரோடு தார் ரோடாவும், இந்த ரோடு கல் பதித்த ரோடாவும் இருந்திச்சே!இப்போ எப்படி இப்படி சேறும்,சகதியும் ஆனது?’என்ற பேரனின் கேள்வியே அவரின் மனதிலும் ஓடியது.சுற்றும் முற்றும் பார்த்தவர் கண்களில் ஓரமாக இருந்த புதுக் கழிவு நீர்க் கால்வாய் பட,பட்டென அவருக்கு விபரம் விளங்கிற்று!கழிவு நீர்க் கால்வாய் அமைக்கத் தோண்டிய மண்ணை சாலையில் போட,அது மழை நீருடன் உறவு கொண்டு, சாலையை உருப்படி இல்லாமல் செய்து விட்டது!’ம்!மக்களுக்கு இப்படி உபகாரம் செய்யும் ஒப்பந்ததாரர்களும் அதிகாரிகளும் நீடு வாழட்டும்!’என்று எண்ணியபடியே, அவர் ஒரு முடிவுக்கு வந்தார். இனி பேரனை நல்ல சாலைகளில் மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டுமென்று மனதில் உறுதி எடுத்தார்.
மறு நாள் காலையில் எழுந்ததும் கூடவே பேரனும் எழ,’தாத்தா!இன்னிக்கி நாம ‘வாக் ‘போறோம்.’என்று சொல்ல,‘ஓ!சந்தோஷமாய்ப் போயிட்டு வரலாம். எதிரக்கதானே பார்க். ஒரு நிமிஷங்கூட ஆகாது!’ என்று சொல்லியபடியே, இருவரும் ஆயத்தமாகிப் பூங்காவுக்கு அருகில் வந்தார்கள். மெயின் கேட் அருகில் கழிவு நீர்க் கால்வாய் ஓட,கால்வாயின் மீது ஸ்லாப் இன்றி இருவரும் தாண்டித்தான் போனார்கள்.
அண்ணாவின் பெயரால்,”அண்ணா பூங்கா”என்று பெயர் சூட்டப்பட்ட அது திறந்து பல வருடங்களாகி விட்டன. கேட்டும், விளையாட்டுப் பொருட்களும் துருப்பிடித்து பயனற்றுப் போய் விட்டன. இருந்தும் இன்று வரை சரியான பாதை கூட இல்லை!இந்தக் கூத்தில் உள்ளேயுள்ள கொடிக் கம்பத்தில் சுதந்திர தினம்,குடியரசு தினத்தின்போது கொடியேற்றமும் நடைபெறும்.
அகலத் தாண்டுதல் உடல் நலத்திற்கு நல்லதென அதிகாரிகள் நினைத்திருக்க வேண்டும். பேரனை நிதானமாகத் தாண்டச் சொல்லி உள்ளே அழைத்துச் சென்றார் அவர்.சிமெண்ட் நடைபாதை மட்டும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு,நடப்பவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தது. இருவரும் கொஞ்ச தூரம் நடந்ததும்,சிமெண்ட் தரையில் இரவு நடமாடிய மாடுகள் சாணம் போட,மழை நீரில் அது கரைந்து பாதையை அசிங்கமாக்கி வைத்திருந்தது.அவ்வளவுதான்!திரும்பியோடிய பேரனை அவர் வீடு வரை துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை.
மகள் விரும்பியதால்,அவர் காரைத் தயார் செய்து, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் பௌர்ணமி கிரிவலத்திற்குச் சென்றார்கள். பேத்தி சிறு குழந்தை என்பதால், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து,பேத்தியைத் தூங்க வைத்து விட்டு, மகள் மட்டும் கிரிவலம் செல்வதென்றும், பேத்தி,பேரனை அவரும் அவர் மனைவியும் பார்த்துக் கொள்வதென்றும் ஏற்பாடு. அவ்வாறே பேத்தி தூங்க ஆரம்பித்ததும் மகள் கிரிவலம் செல்ல,எங்கே பேத்தி எழும்பி ரகளை செய்து விடுவாளோ என்று அவர்கள் பயந்து கிடக்க,மகள் மூன்றரை மணி நேரத்தில் கிரிவலத்தை முடித்து வர,அதுவரை பேத்தி தூங்கிக் கொண்டே இருந்ததுதான் வியப்பு. அருணாச்சலேஸ்வரர் சாதாரணக் கடவுளல்ல!பக்தர்களைப் பாதுகாக்கும் பாங்கான கடவுள்! அதனால்தான் கிரிவலத்தில் ஆயிரக் கணக்கில் பங்கேற்கிறார்கள்.
இரவு நேரமாகி விட்டதால் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதை மறுநாள் காலை வைத்துக் கொண்டார்கள்.காலையில் கோயிலுக்குச் சென்றால்,பல வாசல்களும் அடைக்கப்பட்டு,14 கிலோ மீட்டர் நடந்து களைத்து வந்தவர்களை அலைக் கழித்தார்கள்.இரண்டு,மூன்று வாசல்களுக்கு அலைந்ததில் பேரன் களைப்படைய,’போதும் தாத்தா!வீட்டுக்குப் போயிடலாம்!’என்று பிடிவாதம் பிடிக்க,கோபுர தரிசனத்தோடு அவர்கள் திரும்பினார்கள்.
அடுத்த பஸ் நிறுத்தத்தில் இறங்கக் கூட பேரூந்தையோ,அவசரம் என்றால் ஆட்டோவையோ பயன்படுத்தும் நம் மக்கள்,இறைவனை மனதில் எண்ணியபடி,பதினாலு கிலோ மீட்டர் நடந்து வந்த பிறகும்,அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய விடாமல் தடுப்பது எந்த விதத்தில் நியாயம்?அன்றைக்கல்லவா பக்தர்களுக்கு அனைத்து வாசல்களும் திறந்து விடப்பட வேண்டும்.வெளி நாட்டில் உள்ளவர்களும் திருவண்ணாமலையனை எண்ணி வருகிறார்கள்.
கிரிவலத்தைக் கிஞ்சித்தும் தவறு ஏற்படாமல் கடைப் பிடிக்கிறார்கள். ஆண்டவனைத் தரிசித்து ஆறுதலடைய விரும்புகிறார்கள். ஐம்பது,நூறு கொடுக்கவும் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அதை முன்கூட்டியே ஆன்லைனில் செய்திருக்க வேண்டுமென்று கூறுவதும்,ஒரே வாசல் வழியாக நீண்ட வரிசையில் நிற்க வைத்து அலைக் கழிப்பதையும் அந்த அண்ணாமலையாரே விரும்ப மாட்டார்.அவர்தான் இதனை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
மூன்று மணி நேரக் கார் பயணத்திற்குப் பிறகு வீட்டை அடைந்த போது பேரன் தன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.’என்னம்மா…இந்த ஊர்ல எதுவுமே சரியாயில்ல…அடுத்த வருடம் வேற எங்கயாவது போலாமா?’
இதனைக் கேட்ட அந்தத் தாத்தா என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தபடி நின்றார்!
-ரெ.ஆத்மநாதன்,
கூடுவாஞ்சேரி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
from Latest news https://ift.tt/qZ3uvLm
0 Comments