டாஸ்மாக் விற்பனை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்!
அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று டாஸ்மாக் விற்பனை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. குறிப்பாக அதிக விலைக்கு மது விற்பனை செய்வதைத் தடுப்பது, பிரச்னைக்குரிய கடைகளை மூடுவது. கடைகளில் சிசிடிவி காமெராக்கள் பொருத்துவது. கணினி வழி ரசீது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
தனுஷுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு ரத்து!
`வேலையில்லா பட்டதாரி' படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது தொடர்பாக நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மீதான வழக்கை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
நடிகர் தனுஷ் நடித்த `வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில், சிகரெட், புகையிலைப் பொருள்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும்போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாததால், தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் 2014-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில், நடிகர் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் வரும்போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாததால், வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷுக்கு எதிராகப் புகார் அளித்திருந்தார்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள இந்தப் புகார் மீதான விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், புகாரை ரத்துசெய்யக் கோரியும் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், சைதாப்பேட்டையிலுள்ள வழக்கின் விசாரணையின்போது இருவரும் ஆஜராக விலக்கு அளித்தும், விசாரணைக்கு தடைவிதித்தும் கடந்த மார்ச் 29-ம் தேதி உத்தரவிட்டது.
பின்னர் இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சுப்ரமணியன், `2003-ம் ஆண்டு சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்கள் விளம்பரத் தடை மற்றும் வர்த்தகம் விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 5-ன் கீழ் தங்கள் மீதான புகார் விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், விநியோகஸ்தர்களின் விளம்பரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று வாதிட்டார். தணிக்கை வாரியம் சான்றளித்திருப்பதாகவும், புகார் கொடுப்பதற்கு முன்பு விளக்கம் தர எந்த ஒரு வாய்ப்பையும் வழங்கவில்லை என்பதால், தங்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றும் வாதிட்டார்.
தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் தங்கள் புகாரில் பதிவான வழக்கை ரத்துசெய்யக் கோரும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் மனுக்களை ஏற்கக் கூடாது என்றும், அவற்றைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டிருக்கிறார்.
from Latest news https://ift.tt/0R8Kwot
0 Comments