வட இந்தியாவில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் டெல்லி போன்ற நகரங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. ஹரியானா மாநிலமும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதியில் முதல்வர் மனோகர் லால் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மூன்று நாள்கள் தொடர்ச்சியாக பெய்த மழைக்கு 10 பேர் உயிரிழந்திருப்பதோடு, 7 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப்பொருள்கள் வழங்குதில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதோடு உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் மனோகர் லால் அறிவித்து இருக்கிறார். வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிடுவதற்காக எம்.எல்.ஏ. ஈஸ்வர் சிங், குஹ்லா என்ற இடத்திற்கு வந்திருந்தார்.

அங்கு வெள்ளப்பகுதியை பார்வையிட்ட பிறகு பாதிக்கப்பட்ட மக்களோடு நின்று எம்.எல்.ஏ.பேசிக்கொண்டிருந்தார். அந்நேரம் எம்.எல்.ஏ.வுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஒரு முறைகூட அவர் தற்போது வந்த இடத்திற்கு வரவில்லை. அதோடு கழிவு நீர் சாக்கடையும் தூர்வாரப்படாமல் மோசமாக இருந்தது. எனவேதான் மழை நீர் செல்ல முடியாமல் ஊருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் இருந்த ஒரு பெண், `இவ்வளவு நாளும் வராமல் இப்போது ஏன் வந்தீர்கள்?’ என்று கேட்டு எம்.எல்.ஏ.வுடன் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் செய்து கொண்டிருந்த போதே அப்பெண் எம்.எல்.ஏ.வை அடித்துவிட்டார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அப்பெண்ணை தடுத்து நிறுத்தினர். எம்.எல்.ஏ.வுக்கு பாதுகாப்பு கொடுக்க வந்தவர்கள் அவரை பத்திரமாக மீட்டு அழைத்து சென்றனர். தன்னை அடித்த பெண் மீது எந்த வித சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்றும், மன்னித்துவிட்டதாகவும் ஈஸ்வர் சிங் தெரிவித்துள்ளார். அப்பெண் எம்.எல்.ஏ.வை அடித்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவியிருக்கிறது. அடிபட்ட எம்.எல்.ஏ.ஜனநாயக் ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஆவார்.



from Latest news https://ift.tt/uK4TsUd