சூழலுக்கேற்ப வாழ்வை தகவமைத்துக் கொள்ள விழைவது மனிதனின் அடிப்படை இயல்பே.
போதிய வருமானமும், வசதியும் இல்லாத அந்த மலைக்காடுகளில், சிறு பெட்டிக்கடைகளையும், காய்கறித் தோட்டங்களையும் உருவாக்கி வாழ்க்கையை சற்றேனும் கடினமற்றதாக்க மக்கள் முயன்றனர். குச்சில் கடைகளைக் கொண்டு அந்த காட்டில் யாரும் தொழிலதிபர்கள் ஆக முடியாது என்று தெரிந்திருந்தாலும், இதையும் சகித்துக்கொள்ள முடியவில்லை கம்பனியால்.
உயரமான மலைச்சரிவுகளை இடித்து, சமன்செய்து நெருக்கம் நெருக்கமாய் கட்டப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் குடியிருப்புகளின் பின் பகுதியில் பெரும்பாலும் 4 அடிக்கு அதிகமாக காலியிடம் இருக்காது. முன்புறத்தில் திறந்த வெளியாக இருக்கும். அது இயல்பாக அமைந்ததல்ல. அப்படி இடங்களைத் தேர்வுசெய்தே குடியிருப்புகள் கட்டப்பட்டதாகவே தோன்றுகிறது. காரணம், எஸ்டேட் அய்யாமார்களின் வீடுகள் தனித்தனியானவை. வீட்டைச் சுற்றிலும் குறைந்தது பத்தடிக்கும் அதிகமான காலியிடம் இருக்கும். “தொரைமார்” எனப்படும் மேலாளர்களின் வீடுகளைக் குறித்து கேட்கவே வேண்டாம். சுமார் அரை ஏக்கர் முதல் ஒரு ஏக்கர் வரையிலான பரப்பளவின் நடுவே கட்டப்பட்டுள்ள பங்களாக்கள் அவை.
வீட்டைச் சுற்றிலும் தோட்டம் அமைத்துக் கொள்வது, மனிதர்கள் வாழும் எந்தப் பகுதியாக இருந்தாலும் இயல்பானதே. போதிய போக்குவரத்து வசதி இல்லாத, நினைத்த மாத்திரத்தில் குடியிருப்புக்கு அருகிலேயே காய்கறிகளை வாங்கிக்கொள்ள சாத்தியமில்லாத, அடர் வனத்துக்குள் வாழும் எஸ்டேட் மக்களுக்கு, காய்கறித் தோட்டங்களை உருவாக்கிக்கொள்ள போதிய இடத்தை ஒதுக்கீடு செய்துகொடுக்க வேண்டுமென்று தோட்டத் தொழிலாளர்களுக்கான சட்டத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.
1988 வரையிலும், குடியிருப்புக்கு அருகே சிறிய தோட்டங்களை உருவாக்கி இருந்தனர் தொழிலாளர்கள் பலரும். அதில் தண்டுக் கீரை, சிவப்புக் கீரை, மெட்ராஸ் கீரை, சேமங்கீரை, “குட்டித்தக்காளி” என்று சொல்லும் மனத்தக்காளி கீரை என பலவகையான கீரைகள், பீன்ஸ், அவரைக்காய், பட்டாணி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கோஸாக் கீரை எனச்சொல்லும் முட்டை கோஸ், “சொச்சக்காய்” என நாங்கள் சொல்லும் சவ் சவ், கேரட், கத்தரிக்காய் போன்ற காய்கறிகளையும், சேம்பு, மரவள்ளி கிழங்கு, சீனிக் கிழங்கு, பீட்ரூட், வாழை, சீனி வாழை, கொய்யா, சிவப்பு கொய்யா, நரி கொய்யா, தவிட்டு கொய்யா, மல்பெரி, அன்னாசி, ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு, மணி ஆரஞ்சு, நேபில் ஆரஞ்சு, சீமை கத்திரிக்காய், பப்பாளி, பப்ளி மாஸ், நார்த்தங்காய், மால்டங்காய், எலுமிச்சை, மலைப்பகுதியில் மட்டுமே வளரும் “லக்கோட்” போன்ற காய்/பழங்களையும், விளைச்சல் செய்தனர்.
விளைவித்த காய்கறிகள், பழங்களை அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தி வந்தார்கள். தேவைக்கும் மிகுதியாக உற்பத்தியாகும்போது சிலர் காசு வாங்காமலும்,. சிலர் குறைந்த காசுக்கும் சக தொழிலாளிகளுக்குக் கொடுத்து வந்தனர்.
அந்த சிறு விளைச்சலை காட்டு மாடு, காட்டுப் பன்றி, யானை போன்ற விலங்குகள் அவ்வப்போது தோட்டங்களை அழித்து வந்தன. அதிலிருந்து காக்கவேண்டி, கொஞ்சநாளில் துளிர்விட்டு வளரும் வகையில் நான்கு புறமும் பச்சைக் கம்புகளாலான 'உயிர் வேலி' அமைத்துப் பாதுகாப்பார்கள்.
1988ல் எஸ்டேட்டுக்கு வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, தலைப்பாகை அணிந்த கில் சிங் என்ற மேனேஜரை எஸ்டேட்டில், 'சிங்குத் தொரை' என்று அழைப்பார்கள். அதிரடியாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்ததுடன், அதை நடைமுறைபடுத்திட மிகுந்த கெடுபிடியுடன் நடந்து கொண்டார். அதுநாள் வரை அனுபவித்து வந்த பல உரிமைகள் / சலுகைகள் ஒரேயடியாக மக்களிடமிருந்து பறிக்கப்பட்டன.
நாலுமுக்கில் 'டைம் ஸ்டிரைக்கி'ன் போது, 32 நாட்களுக்கு தொழிலாளிகள் யாரும் வேலைக்குப் போகவில்லை. அதற்கு முன்பு அவ்வளவு நாள் வேலை நடக்காமல் இருந்தில்லை. தோட்டங்களில் விளைவித்த காய்கறிகளைப் பயன்படுத்தி தங்களை தற்காத்துக் கொண்டதை கண்டறிந்த எஸ்டேட் மேலாளர் கில் சிங், அங்குள்ள எல்லோரையும் முழுமையாக கம்பெனியை சார்ந்திருக்க வைக்கும் வகையில் காய்கறித் தோட்டங்களை அழிக்க உத்தரவிட்டார்.
தாமாக முன்வந்து தோட்டத்தை அழிப்பவர்களின் வீட்டில், தற்காலிகத் தொழிலாளர்கள் இருந்தால் அவர்கள் நிரந்தரத் தொழிலாளிகள் ஆக்கப்படுவார்கள். மறுப்பவர்களின் வீட்டில் இருக்கும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக வேலை மறுக்கப்படும் என அறிவித்தார். தோட்டங்கள் வைத்திருந்த எல்லா தொழிலாளர்களுக்கும் மெமோ கொடுத்தார். நிர்வாகத்துக்குப் பயந்து பல தொழிலாளர்கள் உடனடியாக தங்களின் தோட்டங்களை அழித்துவிட்டார்கள்.
தங்கள் குடும்பத்தில் தற்காலிகத் தொழிலாளர் இல்லாத சிலர், தோட்டங்களை தொடர்ந்து பராமரித்து வந்தார்கள். காரண விளக்கம் கேட்டு, அந்தத் தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தார்.
அச்சுறுத்தும் விதமாக, வேறு பல காரணங்களைக் காட்டி, சிலரை தற்காலிகமாகவும், வேறு சிலரை நிரந்தரமாகவும் வேலைநீக்கம் செய்தார். இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளின் விளைவாக அதுநாள்வரை சொந்தத் தேவைகளுக்காகப் பராமரித்து வந்த தோட்டங்களை இழந்தனர் பலர்.
ஒருபோதும் தோட்டங்களை மீண்டும் உருவாக்கிவிடக்கூடாது என்கிற நோக்கத்தில், அந்த இடங்களில், உடனடியாக தேயிலை நாற்றுகளை நடுவதற்கு உத்தரவிட்டு, அதனைக் கறாராக அமல்படுத்தவும் செய்தார் சிங்கு தொரை. புதிதாக நாற்று நடுதல், அது தொடர்புடைய வேலைகளில் ஈடுபடுவோருக்கு கூடுதல் சம்பளம் அளிக்கப்பட்டது.
எஸ்டேட்டில் பூக்கும் சென்ட் ரோஜா மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வண்ண ரோஜாக்கள், டாலியா, செவ்வந்தி, கேந்தி போன்ற விதவிதமான பூக்கள் அதன்பிறகு தொழிலாளர் குடியிருப்பில் மலர்ந்ததே இல்லை. அதே சமயம், அதிகாரிகளின் குடியிருப்பைச் சுற்றிலும் உருவாக்கப்பட்டிருந்த தோட்டங்கள் முன்பு போலவே தொடர்ந்து பராமரிப்பில் இருந்தது.
அடுத்த கட்டமாக கில் சிங்கின் பார்வை 'குச்சில்கள்' மீது திரும்பியது. லயன் வீடுகளில் இடம் போதாத போதும், கடை நடத்துவதற்காகவும், இன்ன பிற தேவைகளுக்காகவும், குடியிருப்புக்கு அருகேயும், தோட்டங்களுக்குள்ளும், மரக் குச்சிகளைக் கொண்டு, மண், தகரம் வைத்துக் குச்சில்களை உருவாக்கி இருந்தனர் சிலர். அதனை அகற்றச் சொன்னார்.
17.01.1989 அன்று ஊத்து எஸ்டேட் தொழிலாளியான தங்கராஜ் வேலைநீக்கம் செய்யப்பட்டார். காரணம், அவர் தனது குடியிருப்புக்கு அருகே, நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் உருவாக்கியிருந்த பெட்டிக்கடையை அகற்ற மறுத்தது. 1959ல் குடியிருக்க வீடு இல்லாத நிலையில் அவரது தந்தை, அப்போதைய மேலாளர் ஹியூஸ் என்பவரிடம் அனுமதி பெற்று குச்சில் கட்டி அதில் குடியிருந்து வந்தார். அவருக்குப் பின் அவரது மகன் தங்கராஜ் தனக்கு குடியிருக்க தனியே வீடு கிடைத்த பிறகும், தனது தந்தை கட்டிய அந்த குச்சிலை, புதுப்பித்து அதில் ஒரு பெட்டிக்கடை நடத்தி வந்தார். வேலைநீக்க உத்தரவை எதிர்த்து திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். 29.12.1993 அன்று அவரது வேலைநீக்க உத்தரவை இரத்து செய்தது நீதிமன்றம்.
அந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டது கம்பெனி.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தங்கராஜை வேலைநீக்கம் செய்தது சரிதான் என்று 14.07.2000 அன்று தீர்ப்பிட்டது. தீர்ப்பில், ’தங்கராஜ் அனுபவித்து வரும் பெட்டிகடையை தொடர்ந்து நீடிக்க அனுமதித்தால், அந்த தவறான நடத்தையை எஸ்டேட்டில் உள்ள எல்லா தொழிலாளிகளும் தொடர்வார்கள். பிறகு எஸ்டேட்டில் முழுக்க ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டப்பட்டுவிடும். நிர்வாகத்தால் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு அது இட்டுச்செல்லும் என்று தீர்ப்பிட்டார்.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்தும், நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்றுத்தான் பெட்டிக்கடையை கட்டினார் என்பது நிரூபிக்கப்படவில்லை என்றும், குச்சில் மூலம் பலசரக்குக் கடை நடத்தி இலாபம் ஈட்டி வருகிறார் என்பதாலும் அவரை வேலைநீக்கம் செய்தது சரிதான் என்று 18.09.2001 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அங்குள்ள தொழிலாளர்களின் எதார்த்த நிலை குறித்து, சரியாக வாதம் செய்யப்பட்டு இருந்தால், நிச்சயமாக அந்த தீர்ப்பில் மாறுதல் இருந்திருக்க வாய்ப்புள்ளது. எஸ்டேட்டில் தினக்கூலி வேலைபார்த்து வந்த ஒரு தொழிலாளி, 12 ஆண்டுகள் வேலைநீக்கம் செய்யப்பட்டு, வெளியுலக அறிமுகமும், பொருளாதார பின்புலமும் இல்லாமல், கால் நூற்றாண்டுக்கு முன்னர், சென்னைக்கு வந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதைக் குறித்து நினைத்துப் பார்த்தால், ஒரு வழக்கறிஞராகிய எனக்கே பெரும் மலைப்பாக இருக்கிறது. காட்டைத் தவிர வேறு எதுவும் பெரிதாகத் தெரியாத எஸ்டேட் தொழிலாளிக்கு அது அவ்வளவு எளிதல்ல.
நாங்கள் வசித்த நாலுமுக்கிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காக்காச்சி பேருந்து நிறுத்தத்தில் டீக்கடை வைத்திருந்தார் தொழிலாளி செல்வராஜ், அவரது கடை முன்பாக எல்லா பேருந்துகளும் நின்று செல்லும். ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் என பலரும் அங்கு தேநீர் அருந்திச்செல்வர். பெரிய புல் மைதானத்தில் தனியே ஒரு ஓரமாகக் கட்டப்பட்டிருக்கும் அந்தக் கடை. அதன் அருகிலேயே கம்பெனிக்குச் சொந்தமான ஒரு ஸ்டோரும் இருந்தது.
1989ஆம் ஆண்டின் ஒருநாள் உறவினர்களின் அச்சுறுத்தல் காரணமாக, குடும்பமாக இரவில் நடந்தே சென்று, காக்காச்சி தேநீர் கடையில் சாப்பிட்டுவிட்டு, அந்த கடை நடத்திய செல்வராஜ் அண்ணன் வீட்டில் தங்கி இருந்தது அப்படியே நினைவில் உள்ளது. இப்போது நினைத்தாலும் நடுக்கம் கொடுக்கும் இரவு அது. அந்தக் கடைதான் எங்களை அந்த இரவில் பாதுகாத்தது. ஆனால் சில நாட்களில் அந்த கடை மட்டுமின்றி, மாஞ்சோலையில் பேருந்து நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டிருந்த பல கடைகளும், தோட்டங்களும், குச்சில்களும், முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
நாலுமுக்கில் மேஸ்திரியிடம் வேலைபார்த்த தொழிலாளிகள் தங்கியிருந்த பத்து குச்சில்கள் மட்டும், வேறு தங்குமிடம் இல்லாத காரணத்தால் விதிவிலக்காக 2005 வரை விட்டு வைக்கப்பட்டது.
தொழிலாளர்களை மிரட்டி, பிடுங்கிய பகுதிகள் முழுவதும் தேயிலை பயிரிடப்பட்டது. ஆயினும், எழுந்து நிற்க முயலும் போதே அடிசருக்கும் வாழ்க்கையால், மனமுடைந்து விடாமல், பல்வேறு வழிகளில் போராட்டத்தைத் தொடரவே செய்தனர் எம்மக்கள். புகைப்படங்கள்: மாஞ்சோலை செல்வகுமார், இராபர்ட் சந்திர குமார், காஞ்சனை சீனிவாசன் ஓவியம்: சுஹைல் அஹமது
from Latest news https://ift.tt/X5hym0o
0 Comments