திருப்பூர் மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், வெற்றி அமைப்பினர் `வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் மூலம் விவசாய நிலங்கள் மற்றும் பொது இடங்களில் இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்து தொடர்ச்சியாக பராமரித்து வருகின்றனர்.
அவர்கள் செய்துவரும் பணியின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கரியாஞ்செட்டிபாளையம் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பாலாற்றின் கரையில் கடந்த 3 ஆண்டுகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர். அந்த கிராமமே இப்போது பசுஞ்சோலையாக மாறியுள்ளது.
இதுகுறித்து கரியாஞ்செட்டிபாளையத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் அமுதா நம்மிடம் கூறுகையில், "கரியாஞ்செட்டிபாளையம் ஊராட்சியைக் கடக்கும் பாலாற்றையொட்டிய இடங்கள் புதர்மண்டி குப்பை மற்றும் கழிவுகள் கொட்டும் இடமாக காட்சியளித்தது. அந்த இடத்தை தூய்மைப்படுத்தவும், இயற்கைச்சூழலாக மாற்றவும் மரக்கன்றுகளை நடலாம் என்று திட்டமிட்டேன். அப்போதுதான், நண்பர் ஒருவர் மூலம் வனத்துக்குள் திருப்பூர் திட்டம் குறித்து அறிந்து அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர்கள் இங்கு வந்து மண் மற்றும் தண்ணீர் வசதி குறித்து ஆய்வு செய்தனர். இருப்பினும் மரங்களை நன்றாக வளர்ப்போமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. முதலில் குறைவான மரக்கன்றுகளை வழங்கினர். சில மாதங்கள் கழித்து மரங்களை நாங்கள் நன்றாக வளர்ப்பதைக் கண்டு, எங்களுக்கு தொடர்ச்சியாக மரக்கன்றுகளை வழங்கத் தொடங்கினர்.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 4 ஏக்கர் பரப்பரளவில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்த்துள்ளோம். இந்த மரக்கன்றுகளுக்கென்று தனியாக தண்ணீர்த் தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. ஊராட்சிப் பணியாளர்கள், கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணியாளர்கள் ஆகியோர் மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். மரங்களை வளர்த்தன் மூலம் பறவைகள் மற்றும் பிற உயிரினங்களின் கூடாகவும், அடுத்த தலைமுறைக்கு இயற்கை பாதுகாப்பில் மரங்களின் பங்கை அறியவும் உதவியுள்ளது." என்றார் நெகிழ்வுடன்.
இதுகுறித்து வனத்துக்குள் திருப்பூர் திட்ட நிர்வாகிகள் கூறுகையில், " வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் 6,7,8,9 ஆகிய திட்டத்தின்கீழ், 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மியாவாக்கி முறையில் 2-க்கு 2 அடி இடைவெளியில் புங்கன், தேக்கு, நீர் மருது, மந்தாரை,வேங்கை, மஞ்சள் கொன்றை மற்றும் பாதாம், நாவல், கொய்யா, பலா, வேம்பு, வாகை என 50 மேற்பட்ட பாரம்பரிய மரக்கன்றுகளும், பறவைகளுக்காக பழவகை மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டுள்ளன. வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின்கீழ், விவசாய நிலங்கள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்று நடவு செய்ய விருப்புவோர் 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என்றனர்.
from Latest news https://ift.tt/DuMxKpf
0 Comments