இந்த உலகில் மாற்றமில்லாமல் நிகழக்கூடியது மரணம் ஒன்று மட்டுமே. பிறந்த அனைத்தும் மரணம் அடைவது உறுதி. மரணத்தை எண்ணி அனுதினமும் அஞ்சும் ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே. நீண்ட ஆயுளோடு, நிறைந்த ஆரோக்கியத்தோடு வாழ்வாங்கு வாழவே மனிதன் ஆசைப்படுகிறான். ஆனால் அவனது ஆசை பல்வேறு காரணங்களால் சிதைந்து போகின்றது. பூர்வ ஜென்ம வினைகள், இந்த பிறவியில் செய்யும் தவறுகள், கிரக, பித்ரு, தெய்வ தோஷங்களாலும் அகால மரணத்தை மனிதன் சந்திக்கிறான். அதனால் மனிதன் எப்போதும் மரண பயத்தோடே வாழ்கிறான்.
மரண பயம் வந்தவர்கள், அதன் தாக்கத்தாலேயே விரைவில் மரணமடைந்து விடுகிறார்கள் என்கிறது மருத்துவ அறிவியல். மரண பயம் உண்டானால் உடல் வியர்க்கும். மார்புப் பகுதி இறுகி முச்சுவிட சிரமம் உண்டாகும். உடலில் நடுக்கம் உண்டாகும். இப்படி பல வகைகளில் மரண பயமே நம்மைக் கொன்றுவிடும் ஆபத்தை உண்டாக்கும். அதிலும் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நோயுடையவர்களை மரண பயம் அதிகம் பாதிக்கும் என்கிறது மருத்துவம். மரண பயமின்றி வாழ ஆன்மிகம் எளிய வழிகளைச் சொல்கின்றது. இதில் ஸ்ரீஆதிசங்கரர் அருளிய ஸ்ரீம்ருத்யுஞ்ஜய மானஸிக பூஜா ஸ்தோத்ரம் மரண பயத்தைப் போக்குவதோடு நீண்ட ஆயுளையும் நீடித்த ஆரோக்கியத்தையும் தரவல்லது என்கின்றனர் ஆன்றோர்கள்.
ஒருவருக்கு ஜாதக ரீதியான கண்டங்கள், ஆபத்துக்கள், விபத்துக்கள், கொடிய நோய் போன்றவை ஏற்படும்போது அந்த பாதிப்புகளால் தாக்கப்படாமல் இருக்க இந்த பூஜா ஸ்லோகங்கள் கவசம் போல நின்று காக்கும். நோயால் பாதிக்கப்பட்டவரை மருந்துகள் பாதுகாப்பதுபோல நம் உயிருக்கு பங்கம் ஏற்படும் காலங்களில் இந்த ஸ்லோகங்கள் நம்மைக் காக்கின்றனவாம். அன்றாடம் அதிகாலையில் குளித்து சுத்தமாகி மரணத்தை வெல்லும் மகாசிவனாகிய ம்ருத்யுஞ்ஜயரின் முன்பாக அமர்ந்து இந்த ஸ்லோகத்தைச் சொல்ல மரண பயம் நீங்கி தெளிவும் துணிவும் கொள்வீர்கள் என்கிறார் ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கரர்.
(இந்த ஸ்லோகத்தின் ஒவ்வொரு பகுதியைப் பாராயணம் செய்யும்போதும் ஈசனை நேராகவோ அல்லது மானஸிகமாகவோ மலர்களால் அர்ச்சித்து தூப, தீபம் போன்ற முடிந்த உபசாரங்களையும் செய்து வழிபட வேண்டும். அதுவே மானஸிக பூஜா ஸ்தோத்ரம் எனப்படும்.)
ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜய மானஸிக பூஜா ஸ்தோத்ரம்
கைலாஸே கமநீய ரத்நகசிதே கல்பத்ருமூலேஸ்திதம்
கர்பூர ஸ்படிகேந்து ஸுந்தரதநும் காத்யாய நீ ஸேவிதம்
கங்கா துங்க தரங்க ரஞ்சித ஜடாபாரம் க்ருபா ஸாகரம்
கண்டாலங்க்ருத சேஷ பூஷணமமும் ம்ருத்யுஞ்ஜயம் பாவயே
கயிலையில், கற்பக விருக்ஷத்தின் கீழ் ரத்தின ஆசனத்தில் வீற்றிருப்பவரும், கற்பூரம், ஸ்படிகம், சந்திரன் போன்றவற்றால் பிரகாசம் கொண்டவரும், காத்யாயனீ தேவியால் வணங்கப் படுபவரும், கங்கையை சடையில் கொண்டவரும், கருணைக் கடலும் ஆதிசேஷனை மாலையாக அணிந்தவருமான காலனை வென்ற ஸ்ரீமிருத்யுஞ்ஜய ஈஸ்வரனை மனதில் எண்ணி வணங்குகிறேன்.
ஆகத்ய ம்ருத்யுஞ்ஜய சந்த்ரமௌளே
வ்யாக்ராஜிநாலங்க்ருத சூலபாணே
ஸ்வபக்த ஸம்ரக்ஷண காமதேநோ
ப்ரஸீத விச்வேச்வர பார்வதீச
காலனை வென்ற காலகாலரே, சந்திரனை முடியில் சூடியவரே! புலித்தோல் அணிந்தவரே! சூலத்தைக் கையில் ஏந்தியவரே! பக்தர்களைக் காப்பதில் காமதேனுவைப் போன்றவரே! உலகத்தின் தலைவரே! பார்வதி மணாளரே! நீர் எம்மிடிடையே வந்து அருள் புரியும்.
பாஸ்வன் மௌக்திக தோரணே மரகதஸ்தம்பாயுதாலங் க்ருதே
ஸௌதே தூபஸுவாஸிதே மணிமயே மாணிக்யதீ பாஞ்சிதே
ப்ரம்மேந்த் ராமரயோகி புங்கவக ணைர்யுக்தேச கல்பத்ருமை:
ஸ்ரீம்ருத்யுஞ்ஜய ஸுஸ்திரோ பவ விபோ மாணிக்ய ஸிம்ஹாஸநே
யமனை வென்றவரே! எங்கும் நிலைப்பவரே ! முத்துத் தோரணங்களாலும் மரகதத் தூண்களாலும் அலங்கரிக்கப்பட்ட மாளிகையில் வசிப்பவரே! நறுமணத்தோடு, மாணிக்கத் தீபங்களோடு, பிரம்மன், இந்திரன், தேவர், யோகிகளின் கூட்டங்களோடு வாழ்பவரே, கல்ப மரங்கள் சூழ மாணிக்க அரியாசனத்தில் வீற்றிருக்கும் ஈசனே நம்மைக் காத்தருள்வீர்!
மந்தாரமல்லீ கரவீர மாதவீ
புந்நாக நீலோத்பல சம்பகாந்விதை
கர்பூர பாடீர ஸுவாஸிதைர்ஜலை
ராதத்ஸ்வ ம்ருத்யுஞ்ஜய பாத்ய முத்தமம்
மந்தாரை, மல்லிகை, அரளி, மாதவி, புந்நாகம், நீலோத்பலம், செண்பகம் ஆகிய மலர்களோடும், பச்சைக் கற்பூரம், சந்தன வாசனையுடைய இந்த பாத்ய நீரை நீர் ஏற்றுக் கொள்ளும். காலனை வென்றவரே! எம்மை எப்போதும் காத்தருளும்.
ஸுகந்த புஷ்ப ப்ரகரை: ஸுவாஸிதை:
வியன்நதீசீதள வாரிபி: சுபை:
த்ரிலோக நாதார்தி ஹரார்கய மாதராத்
க்ருஹாண ம்ருத்யுஞ்ஜய ஸர்வ வந்தித்
மரணத்தை வென்றவரே! எல்லோராலும் வணங்கப்படுபவரே! மூவுலகத் துயரைப் போக்குபவரே! வாசனையோடுக் கூடிய புஷ்பங்களோடு மணக்கும் குளிர்ந்த கங்கையின் மங்கள நீரை ஏற்றுக் கொண்டு என்னை ஆசிர்வதிப்பீராக.
இந்தப் பாடலையும் மீதமிருக்கும் பாடல்களையும் தகுந்த ஆச்சார்யரின் துணை கொண்டு பிழையில்லாத உச்சரிப்போடு பாவத்தோடு பாராயணம் செய்வதே நல்ல பலனை அளிக்கும். இந்த பாடல்களை வழிகாட்டியாகக் கொண்டு முறையாகக் கற்றுக் கொண்டு உச்சரிப்பதே நல்லது.
from Latest news https://ift.tt/V42UmE3
0 Comments