`என் மக்கள், என் பயணம்' பாதயாத்திரையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அருப்புக்கோட்டையில் மக்களிடையே பேசினார். அப்போது அவர், "அருப்புக்கோட்டை பட்டு ரகத்தில் என்ன ஜொலி ஜொலிப்பு இருக்குமோ, அதை உங்களின் கண்களில் நான் பார்க்கிறேன். அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொண்டதில், மக்கள் மிகுந்த எழுச்சியோடும் மாற்றத்தை விரும்பி நிற்பதையும் காண முடிந்தது.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் முதல் முதலாக நின்று வெற்றி பெற்ற தொகுதி அருப்புக்கோட்டை. அப்போது அவரை தோற்கடிப்பதற்கு திமுக-வினர் நிறைய தில்லுமுல்லுகளை செய்து பார்த்தார்கள். ஆனால் மக்கள் எம்.ஜி.ஆருக்கு வெற்றியை தந்தார்கள். இன்றும் இந்த தொகுதிக்கு எம்.ஜி.ஆர் பெயரை ஒத்த ஒருவர்தான் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவரின் பெயர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றவர்களுக்கு கொடுத்து பழக்கப்பட்டவர். ஆனால் இப்போது உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வாங்கி பழக்கப்பட்டவர். சில ஆண்டுகளுக்கு முன்பாக கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசுகையில் மறைந்த முத்துராமலிங்க தேவர் வளர்ச்சித்திட்டங்களை செய்யவிடாமல் முட்டுக்கட்டை போட்டதால் செய்ய முடியவில்லை என பேசியிருந்தார். ஆனால் அவர் பேசியது தவறு. முத்துராமலிங்க தேவர் தன்னலமில்லாமல் நாட்டுக்காக அரசியல் செய்தவர். தான் இறந்த பின்பும் தனது சொத்துக்களை எல்லாம் சம பங்காக 16 பேருக்கு பிரித்துக் கொடுத்தவர். ஆனால் இவர்களோ, முத்துராமலிங்க தேவருக்கு நேர்மாறாக அரசியல் செய்தவர்கள்.
இப்போது அருப்புக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் தமிழகத்தின் மிக முக்கியத்துறையான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையே கையில் வைத்துள்ளார். இதில் குறிப்பிடவேண்டிய விஷயம், வருவாயை அவர் வைத்துக்கொண்டு பேரிடரைத்தான் உங்களுக்கு கொடுத்துவிட்டார். இந்தியா முழுவதும் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்த வேண்டிய மாவட்டங்களை கணக்கிட்டதில் 112 மாவட்டங்கள் முன்னேற விழையும் மாவட்டங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அவை அனைத்தும் நிதி ஆயோக் அமைப்பின் நேரடி கண்காணிப்பில் மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களும் அடக்கம்.
ஆக, மக்களுக்கு அடிப்படையாக தேவை இருக்கக்கூடிய திட்டங்களை கூட செயல்படுத்த முடியாமல் மாவட்டத்தின் வளர்ச்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு, மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் விருதுநகர் மாவட்டம் இருக்கும் நிலையை அடைய செய்தது தான் இந்த திமுக அரசின் சாதனை. மத்திய அரசாங்கமோ முன்னேற விழையும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எல்லா காரணிகளின் பேரிலும் நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
இந்தியா முழுவதும் ஏழு ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதில் ஒன்று விருதுநகர் மாவட்டத்தில் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக 2000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதுபோல காமராஜர் பிறந்த இந்த மண்ணில் தரமான கல்வியை கொடுப்பதற்கும், மருத்துவம் பயில்வதற்கும் மருத்துவக் கல்லூரி இல்லாத நிலையை போக்கியதும் மத்திய அரசுதான். இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை தந்ததில், விருதுநகர் மாவட்டமும் பயனடைந்துள்ளது. இந்தநிலையில் இவர்களெல்லாம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பற்றி பேசுகிறார்கள். அதுபோல் பா.ஜ.க. இஸ்லாமியர்களுக்கு எதிரானது, பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுபவர்கள் என்று சித்தரிக்கிறார்கள். உண்மை என்னவென்றால் உலக நாடுகளில் இஸ்லாம் மதத்தை தழுவும் 13 நாடுகள் அந்தந்த நாடுகளில் மிக உயரிய விருதுகளை நான் சார்ந்த கட்சியின் தலைவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொடுத்து பெருமை அடைய செய்திருக்கிறார்கள். ஆகவே பிரித்தாளும் சூழ்ச்சியை பா.ஜ.க. ஒருபோதும் எடுத்ததில்லை. நீங்கள் தான் கையில் எடுத்து உள்ளீர்கள்" என்று விமர்சித்து பேசினார்.
முன்னதாக, பா.ஜ.க.தலைவர் அண்ணாமலையின் நடை பயணத்தின்போது பாளையம்பட்டியில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய முயன்றார். அப்போது அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அண்ணாமலையின் சமாதானத்தை ஏற்று அவர்கள் வழிவிட்டனர். தொடர்ந்து அருப்புக்கோட்டையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பேருந்து நிலைய பகுதியில் அண்ணாமலையின் நடைபயணம் மேளதாள, ஆரவாரங்கள் இன்றி அமைதியான முறையில் நடைபெற்றது. இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகள் முன்பு போலீஸ் தடுப்புகள் அமைக்கப்பட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் கூடுதல் பாதுகாப்புக்காக இரண்டு வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதிரடி படை, சிறப்பு காவல் படையினரும் அருப்புக்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
from Latest news https://ift.tt/y5zv9dn
0 Comments