பாலியல் வன்கொடுமைக்குள்ளான 25 வயது பெண்ணின் 27 வார கருவைக் கலைப்பது தொடர்பாக ஆகஸ்ட் 7-ம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அந்த அறிக்கை ஆகஸ்ட் 10-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், குஜராத் உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது. கருவைக் கலைக்க வேண்டிய சூழலிலிருந்த பாதிக்கப்பட்ட பெண், இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.
அந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், சனிக்கிழமையன்று நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்வல் புயான் முன்னிலையில் சிறப்பு அமர்வில் விசாரித்தனர். அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ``மருத்துவ அறிக்கை வந்த பிறகும் 12 நாள்களுக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அந்தப் பெண்ணுக்கு முக்கியமானது. வழக்கின் முக்கியத்துவத்தையும், நிலையையும் கருத்தில் கொள்ளாமல் வழக்கமான வழக்கு விசாரணையைப்போல் குஜராத் உயர் நீதிமன்றம் அலட்சியமாக ஒத்திவைத்திருக்கிறது.
இதை தெரிவிப்பதற்கு வருத்தமாக இருக்கிறது. தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் கரு 27 வாரங்கள் இரு நாள்களைக் கடந்திருக்கிறது. ஆகையால், அந்தப் பெண்ணுக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில், திங்கள் கிழமை காலை முதல் வழக்காக இந்த வழக்கு விசாரிக்கப்படும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், குஜராத் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண் கருக்கலைப்பு செய்யக் கூடாது எனத் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை விசாரித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனக் குஜராத் அரசு மற்றும் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் கருக்கலைப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ``குஜராத் உயர் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது... உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, உயர் நீதிமன்றத்தால் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?
இது அரசியலமைப்பு தத்துவத்துக்கு எதிரானது" எனக் கடுமையாகக் கண்டித்தது. இதற்கு குஜராத் அரசின் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ``குஜராத் உயர் நீதிமன்றத்தின் இந்த வழக்கு தொடர்பான முந்தைய உத்தரவில் எழுத்துப்பிழை இருந்தது. அது சனிக்கிழமை சரிசெய்யப்பட்டது. எனவே, குஜராத் நீதிமன்ற உத்தரவு குறித்த ஒரு தவறான புரிதல் ஏற்பட்டிருக்கிறது. மாநில அரசு என்ற வகையில் நாங்கள் அந்த உத்தரவைத் திரும்பப் பெற நீதிபதியிடம் கோரிக்கை விடுக்கிறோம்" எனக் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து நடந்த விசாரணைக்குப் பிறகு, உச்ச நீதிபதிகள், ``கருக்கலைப்பு செய்யும் அதே சமயம் குழந்தை உயிருடன் இருந்தால், அதை மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் வளர்க்க குஜராத் அரசுக்கு உத்தரவிடுகிறோம். இதையடுத்து, உரிய சிகிச்சை வழிமுறைகளோடு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் குழுவுக்கு உத்தரவிடுகிறோம்” எனத் தீர்ப்பளித்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from Latest news https://ift.tt/97En6Og
0 Comments